செவ்வாய், 30 அக்டோபர், 2012

சுக்ரீஸ்வரர் கோயிலில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு கலந்துரையாடல்

அறம்  அறக்கட்டளை விழாவுக்கு வந்த பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், மாலையில் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு இடையே இருந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தும் வகையில், திருப்பூரில் உள்ள தொன்மையான சுக்ரீஸ்வரர்  கோயிலுக்கு அழைத்துச் சென்றோம்,.

அவருடன் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், இணைய எழுத்தாளர் ஜடாயு, பேராசிரியர் ப. கனகசபாபதி ஆகியோரும் வந்திருந்தனர்.

சுக்ரீஸ்வரர்  கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது. வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை வழிபட்டதாக ஐதீகம்.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், ஆயிரம்  ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவரின் பெயர் அருள்மிகு சுக்ரீஸ்வரர். அம்மையின் பெயர் ஆவுடைத்தாய் அம்மன்.

இக்கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர். அமைதியான சூழலில், நகர நெருக்கடிகளிலிருந்து விலகி, ஆன்மிக  அனுபவத்தை இயற்கையாக வழங்குவதாக இக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் வழிபட்டுவிட்டு, ஜெயமோகனுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டற்ற விவாதத்தில் (கலந்துரையாடல்) அனைவரும் ஈடுபட்டோம். எந்த விஷயம் குறித்து பேசினாலும், அதன் ஆழம் வரை சென்று  துல்லியமான தகவல்களுடன் விளக்குவது இவரது சிறப்பு. சைவம், சமணம், பௌத்தம் குறித்தெல்லாம்  விவாதம் சென்றது. ஒவ்வொருவருடைய கருத்துக்கும் மதிப்பளித்து சாவகாசமாக பதில் அளித்தார் ஜெயமோகன் - ஒரு  குருவின் ஸ்தானத்தில். அற்புதமான அனுபவம் அது.

அந்த நிகழ்வை நண்பர் ஜடாயு படம் பிடித்து அனுப்பி இருக்கிறார். அந்தப் படங்கள் இங்கே...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக