ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ரத்தம் வேண்டாம், வியர்வை சிந்தி உழைப்போம்!


-சாஸ்த்ரா பல்கலை. பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்

.

தினமணி (கோவை)- 1708.2014- திருப்பூர் பக்கம் 3

திருப்பூர், ஆக. 16: நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் ரத்தம் சிந்த வேண்டாம்; வியர்வை சிந்தி உழைத்தால் போதும் என்று, திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசினார்.

திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை இருதினங்களும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழாவில் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசியது:

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பிறந்த தேதி உண்டு. ஆனால், இந்தியா பிறந்த தேதி கூற முடியாத அளவுக்கு பழமை வாய்ந்த, அறுபடாத வரலாறு கொண்ட  நாடாகும். எந்த நாட்டிற்கு பிறந்த தேதி இல்லையோ, அந்த நாட்டிற்கு மறைவுத் தேதியும் இருக்க முடியாது. இந்தியா அமரத்துவம் வாய்ந்த நாடு.

முதலில் அன்னியப் பொருள்களுக்கும், இரண்டாவதாக அன்னிய ஆட்சிக்கும் அடிமைப்பட்ட நாம், தற்போது சுதந்திரம் பெற்றபோதும் அன்னியக் கருத்துகளுக்கு அடிமையாக உள்ளோம். இந்நிலை மாற வேண்டும். நமது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து சமநிலையில் சிந்தித்தால் தான் நாடு முன்னேற முடியும்.

சுதந்திரத்தை ரத்தம் சிந்தாமல் நாம் அடையவில்லை. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை,  'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று பாடியது, உப்பு சத்தியாக்கிரஹத்திற்காக மட்டுமே. பல்லாயிரம் பேர் தங்கள் ரத்தம் சிந்திப் பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையே நாம் அனுபவிக்கிறோம்.

நாம், நாட்டை முன்னேற்ற ரத்தம் சிந்த வேண்டியதில்லை. வியர்வை சிந்தி உழைத்தால் போதும், உலக அரங்கில் இந்தியா தலைமைப் பீடம் ஏற்கும் என்றார்.

இவ்விழாவில், சட்டப் பஞ்சாயத்து அமைப்பின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான செந்தில் ஆறுமுகத்திற்கு  ‘அறச்செம்மல் விருது' வழங்கப்பட்டது. அவர் சார்பில் இவ்விருதை அந்த அமைப்பின் மாணவரணி செயலாளர் கோபிகா பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவுக்கு கல்வெட்டியல் அறிஞர் ராமசந்திரன் தலைமை வகித்தார். அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் சத்தியநாராயணன், சிவகுமார், பாலசுப்பிரமணியம், சுரேஷ்பாபு, ஆடிட்டர் ஸ்ரீனிவாசன், ராஜமாணிக்கம், ஹரிபிரசாத் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

-நன்றி: தினமணி (17.08.2014) - கோவை

படவிளக்கம்:
திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேசுகிறார் சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன். உடன், கல்வெட்டியல் அறிஞர் ராமசந்திரன், ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், சட்டப் பஞ்சாயத்து  அமைப்பின் மாணவரணி செயலாளர் கோபிகா ஆகியோர். 
.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக