ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இளம் தலைமுறையினர் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்

-வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன்





திருப்பூர், ஆக. 15: நாடு சுபிட்சம் பெற இளைய தலைமுறையினர் தொழில் முனைவோர்களாக வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் பேசினார்.

திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் வியாழன், வெள்ளி இருதினங்கள் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் சுதந்திர தின விழா கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுதந்திர தினத்தன்று காலை 8 மணியளவில் தேசியக் கொடியேற்றப்பட்டது. வாசவி வித்யாலயா நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம், அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா சண்முகம் பேசியது: திருப்பூர் தொழில் முனைவோரை உருவாக்கும் நகரமாக உள்ளது. பின்னலாடைத் தொழிலின் தலைநகரமாக விளங்குகிறது. இதற்கு தொழில்முனைவோரின் ஆக்க சக்திதான் காரணம்.

அதே சமயம் பின்னலாடைத் தொழிலில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இடையில் உறவுத் தன்மையுடனும், கூட்டு முயற்சியுடனும் செயல்பட்டு வருகின்றன. சிறு முதலீட்டில் கூட திருப்பூரில் தொழில் செய்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற முடியும்.

திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உள்நாட்டு வர்த்தகத்தை ரூ. 25,000 கோடி மதிப்பில் இருந்து ரூ. 1,00,000 கோடி மதிப்புக்கு கொண்டு செல்வதற்கான இலக்கை எட்டுவதற்கு 2020 திருப்பூர் விஷன் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஸ்ரீபுரம் அறக்கட்டளை, சி.ஐ.ஐ. அமைப்பு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதில், எழுத்தாளரான தொழில் ஆலோசகர் வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் பேசியது:

தொழில்முனைவோருக்கான களத்தை ஏற்படுத்தித் தரும் நகரமாக திருப்பூர் விளங்குகிறது. உலகளவில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் அனுபவமிக்க திருப்பூர் தொழிலதிபர்கள், உலக நாடுகளுக்கு தேவைப்படும் பிற பொருள்களை வர்த்தகம் செய்வதற்கும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும். ஊக்கத்துடன் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என்றார்.

நன்றி: தினமணி- கோவை (16.08.2014) திருப்பூர் பக்கம்: 2
 

படவிளக்கம்:
திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திரைகடலோடியும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகிறார் தொழில் ஆலோசகர் வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா சண்முகம், ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம், அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம். 

Click and Enlarge to read...
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக