திங்கள், 17 டிசம்பர், 2012

இராமாயண அறம் – ஜடாயுவின் உரை


தமிழ் ஹிந்து இணையதளத்தில் இருந்து.. 


திருப்பூரில் விஜயதசமி அன்று நடைபெறும் எழுத்தறித்தல் விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தோம்.

அந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. விஜயதசமி அன்று காலையில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பேரா. கனகசபாபதி, ஜடாயு ஆகியோர் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் தெய்வீகச் சடங்கைச் செய்தனர். சுமார் 200 குழந்தைகள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தேனிலும் பாலிலும் தொட்டு நாவில் “ஓம்” எழுதியது, குழந்தைகளை மடியில் அமர்த்தி பிஞ்சுக் கைகளைப் பிடித்து “அ” என்று சொல்லி எழுத வைத்தது வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

வந்திருந்த பெற்றோர்களில் பலர் எழுத்தறிவித்த அறிஞர்களின் கால்களைத் தொட்டு வணங்கினர். குழந்தைகளும் வணங்கினர். ஜெயமோகன் போன்ற மாபெரும் சிந்தனையாளரால் கைப்பிடித்து எழுத்தறிவிக்கப் பட்ட குழந்தைகள் பாக்கிய சாலிகள். அவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக இறையருளால் சித்திக்கும் என்பதில் ஐயமில்லை.

வந்திருந்த அறிஞர்களும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அறம் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்தவர்களும் மதியம் திருப்பூர் சுற்று வட்டாரத்திலுள்ள சுக்ரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். சோழர் காலத்திய (10-11ம் நூற்றாண்டு) கற்கோயிலை தொல்லியல் துறையினர் அருமையாக கட்டமைத்துள்ளனர். கோயிலின் ஒரு புறச் சுவர் முழுதும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. அமைதியான சூழல். அந்தப் பகுதிக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்குக் கட்டாயம் போய் வாருங்கள்.

மாலை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நன்றாக நடந்தது. தமிழகத்தின் 20-மணி நேர மின்வெட்டுக்கு நடுவிலும் அதிகம் இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்திய அமைப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் இங்கே.

ஜெயமோகன் ஆற்றிய ”அணையா விளக்கு” உரை அவரது வலைத்தளத்தில் உள்ளது.  அதன் வீடியோ இங்கே பார்க்கலாம். வழக்கம் போலவே ஆழமான கருத்துகளும் சிந்தனை வீச்சுகளும், உணர்வெழுச்சிகளும் தெறித்து விழும் உரை. இன்றைக்கு தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஜெயமோகன் முதன்மையானவர் என்றால் மிகையாகாது.

அந்த உரைக்கு முன்பாக, ஜடாயு “இராமாயண அறம்” குறித்தும், அரவிந்தன் நீலகண்டன் ”உபநிஷத அறம்” குறித்தும் சுருக்கமாக பேசினர்.

தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் -ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு இங்கே.

(உரையின் நடுவில் மின்வெட்டு ஏற்பட்டதால் மின்விளக்கு போய்விட்டது. அமைப்பாளர்கள் மைக்கை உயிர்ப்பித்ததால் உரை இருளிலும் தொடர்ந்தது. சீதையின் அறம் பற்றி பேசும் தறுவாயில் நடுவில் ரெகார்டிங் நின்று விட்டது. இதற்குப் பிறகு ஒரு 3-4 நிமிடம் உரை தொடர்ந்தது. “இந்த சிற்றுரையில் ராமாயண அறம் குறித்த அறிமுகத்தையும் கோட்டுச் சித்திரத்தையுமே அளித்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போது இன்னும் விரிவாகப் பேசலாம்” என்று கூறி ஜடாயு முடித்தார். அந்தப் பகுதி மட்டும் கட் ஆகியுள்ளது)

.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

அம்பேத்கர் நினைவுதின நிகழ்ச்சி- செய்தி



கடந்த டிசம்பர் 6 ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள  பார்க் கலை அறிவியல் கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அறம்  அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர்  சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பார்க் கல்லூரியின் செயலர் பி.ரகுராஜன், சி.பி.சி. பேஷன்ஸ் நிறுவன இயக்குனர் டி.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா  ஐ.ஏ.எஸ். அகாடமியின் செயலர் நா. பாரதி, அறிமுக உரையாற்றினார். அவர் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பின் நடைமுறைகள் குறித்து விளக்கினார். புதுதில்லியில் உள்ள சங்கல்ப் ஐ.ஏ.எஸ். போரம் அமைப்புடன் இணைந்து இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிபுணர் ஜா. ராஜகோபாலன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஆற்றல் மேம்பாடு  குறித்து சிறப்புரையாற்றினார் (படம்-1).   வழக்கறிஞர் அ. பார்த்திபன் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி பேசினார். பொறியாளர் வீர.ராஜமாணிக்கம் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் (படம்- 2).


காண்க:
சங்கல்ப் ஐ.ஏ.எஸ். போரம் 
.

புதன், 5 டிசம்பர், 2012

அம்பேத்கர் நினைவுதின நிகழ்ச்சி


(படத்தின் மீதி சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்)
விடுதலை வீரரரும், நமது அரசியல் சாசனத்தின் சிற்பியுமான டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6 ம்  தேதி வருகிறது அதையொட்டி,  அறம்  அறக்கட்டளை- திருப்பூர்  ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

சுவாமி விவேகானந்தா ஐ.ஏ.ஸ். அகாடமி, கோவை,  சங்கல்ப்  ஐ.ஏ.எஸ். போரம்- புதுடில்லி  அமைப்புகளுடன் இணைந்து, அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாகவும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாகவும், மாணவர்களுக்கான் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு துவக்க விழாவை இந்நாளில்  அறம் அறக்கட்டளை நடத்துகிறது.

திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை அறிவியல் கல்லூரியில் 06.12.2012, வியாழக்கிழமை, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். பார்க் கலை அறிவியல் கல்லூரியின் செயலர் பி.ரகுராஜன், சி.பி.சி. பேஷன்ஸ் நிறுவன இயக்குனர் டி.ஆர். விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.

கோவை ஐ.ஏ.எஸ். அகாடமியின்  செயலர் ந.பாரதி ஐ.ஏ.எஸ். பயிற்சியைத் துவக்கிவைத்து, பயிற்சியின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார். சென்னையைச் சார்ந்த தனித்திறன் பயிற்சியாளர் ஜா.ராஜகோபாலன் சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்வின் இறுதியாக, திருப்பூர் வழக்கறிஞர் அ.பார்த்திபன் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி,  நிறைவுரையாற்றுகிறார். அறம்  அறக்கட்டளை  உறுப்பினர் வீர.ராஜமாணிக்கம் நன்றி கூறுகிறார்.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.