திங்கள், 10 அக்டோபர், 2022

வித்யாரம்பம்-2022 பத்திரிகை செய்திகள்

 

தின அஞ்சல் - 08.10.2022


தினமணி (06.10.2022)

தினமணி 06.10.2022




மாலை மலர் 06.10.2022


தினமலர் 06.10.2022


தின அஞ்சல் 01.10.2022


செய்திகள் சேகரிப்புக்கு நன்றி: திரு. கொங்கு ராமகிருஷ்ணன்.

.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

வித்யாரம்பம்- 2022 எழுத்தறிவிப்போர்


அறம் அறக்கட்டளை - வித்யாரம்பம்- 2022

இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் ஆசான்கள்



திரு. வே.ஜீவானந்தன்

M.A. (Political Science),B.L., PGDPM

கோவையைச் சேர்ந்த திரு. ஜீவா (எ) வே.ஜீவானந்தம் (66), வழக்குரைஞர், ஓவியர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்; தமிழகம் அறிந்த ஓவியர். கோவையில் செயல்படும் ஓவியர் அமைப்பான சித்ரகலா அகாதெமியின் தலைவர். இந்த அமைப்பு, 45 ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் கோவையில் காலையில் குழந்தைகளுக்கு ஓவிய வகுப்புகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் நடத்தி வருகிறது. தவிர, ஓவியப்போட்டிகள், ஓவியக் கண்காட்சிகளையும் நடத்துகிறது.

ஆரம்பக் காலத்தில் மாணவப் பத்திரிகையாளராக இருந்துள்ளார். ‘திரைச்சீலை’, ‘ஒரு பீடியுண்டோ சகாவே’ ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ‘திரைச்சீலை’ நூலுக்கு 210ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருது ஜனாதிபதி கரங்களால் கிடைத்தது. 2018இல் சிறுவாணி வாசகர் மைய விருது பெற்றவர். பல்வேறு பத்திரிகைகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. நூல்களின் அட்டைப்படம் வரைவதில் நிபுணர். இவர் ஒரு சிறந்த திரை விமர்சகரும் கூட.

$$$

திரு. ஒத்திசைவு வெ.ராமசாமி

B.Tech. (Metallurgy)

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிறந்தவர் திரு. ஒத்திசைவு ராமசாமி (56), சென்னை ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது பெங்களூரில் வசிக்கிறார். பழமையிலும் பாரம்பரியத்திலும் தீவிர நம்பிக்கை கொண்டவர். வங்கிப் பணி, கணினித் தொழில்நுட்பம், மின்னியல், ஜவுளித் துறை, பள்ளி ஆசிரியர் எனப் பல துறைகளில் பணியாற்றியவர். அகில பாரத அளவில், பல்லாயிரம் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கணினிசார் கல்விக்கான மென்பொருள் உருவாக்கக் குழுவுக்கு தலைமை தாங்கியவர்.

தற்போது மின்னியல் சார்ந்த கருவிகளை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளார். ‘ஒத்திசைவு’ என்ற இணையதளம் மூலமாக, சமூகத்தைச் சரிப்படுத்தும் துணிவான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பாரதீயம், தொழில்நுட்பம், அறிவியல், மொழிகள், வரலாறு என பல துறைகளில் எழுதி வருபவர்.

இவரது இணையதளம்: http://othisaivu.in

$$$

திரு. வி.வி.பாலா

B.Com, M. A (Philosophy), PG Diploma in Journalism

கோவை, போத்தனூரைப் பூர்வீகமாகக் கொண்டவர், திரு. வி.வி.பாலா (54). கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ‘சுதேசமித்திரன்’ தமிழ்ப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சட்டக் கல்வி பயின்றவுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்டு, யோகா பயிற்சி ஆசிரியரானார்.

விவேகானந்த கேந்திரம் என்னும் சமூக சேவை அமைப்பில் 2007ஆம் ஆண்டு முதல் முழுநேர ஊழியராக உள்ளார். அதன் வெளியீட்டுத் துறை நிர்வாகியாக பத்தாண்டுகளாக சென்னையில் இருந்தபடி செயல்படுகிறார். ‘யுவபாரதி’ மாத இதழின் ஆசிரியர். யோகா ஆசிரியர்கள் பலரை உருவாக்கி உள்ளார். விவேகானந்த கேந்திரத்தின் சுய முன்னேற்ற, ஆளுமைப் பண்புப் பயிற்சி வகுப்புகள் பலவற்றை நடத்தி வருகிறார்.

$$$

திரு. மது.ஜெகதீஷ்

DME, Post Diploma in CA, B.Tech. (Industrial Engineering)

பொள்ளாச்சியில் வசிக்கும் திரு. மது ஜெகதீஷ் (எ) ஜெ.மதுராந்தகன் (53), தொழில்நுட்ப வல்லுநர், மென்பொருள் உருவாக்க மையத்தின் நிறுவனர், கணினிக் கல்விப் பயிற்றுநர், சிற்பக்கலை புகைப்படக் கலைஞர், இயற்கை- வனவிலங்கு ஆர்வலர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். தேசிய அளவிலான புகைப்படக் கண்காட்சிகளில் பங்கேற்றவர்.

தனது 21ஆம் வயதிலேயே தொழில் நிறுவனத்தை தொடங்கிய இளம் தொழில் முனைவோரான இவர் உருவாக்கிய நூற்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருள்கள், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரத்துக்கு மேற்பட்ட மானவர்களுக்கு கணினிக் கல்விப் பயிற்சி அளித்துள்ளார். இவரது கோயில் கட்டடக் கலை, சிற்பக்கலை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், அழகிய புகைப்படங்கள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. வனவிலங்கு- கானுயிர்- சுற்றுச்சூழல் தொடர்பான இவரது புகைப்படங்கள் இயற்கையை நேசிப்போருக்கு மிகவும் பிடித்தமானவை.

இவரது வலைப்பூ: https://madhujagdhish.blogspot.com

$$$

திருமதி சி.குமரேஸ்வரி

M.A, M.Phil., B.Ed,

திருப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான திருமதி சி.குமரேஸ்வரி (39), 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். அய்யன்காளிபாளையம், வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிகிறார். ஆங்கிலத்தில் உள்ள வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் அமைப்பின் அறிவியல் திறன் நூல்களை தமிழாக்கி இருக்கிறார்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், என்சிஇஆர்டி, தீக்‌ஷா ஆகிய அமைப்புகளில் ஆசிரியர் பயிற்சியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் ஹைடெக் இ-லேப் திட்டத்தின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். மாணவர்களின் ஆங்கில மொழியறிவை வளர்க்க இணையவழியில் ஒலிப்பேழைகளை வெளியிட்டு வருகிறார். ஆசிரியர் பணியை ஒரு தொழிலாகக் கருதாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் சேவையாகக் கருதிப் பணியாற்றுபவர்.

$$$




அறம் வித்யாரம்பம் -2022 விழா அறிவிப்பு



 

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 

ஒன்பதாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா
_____________________________________________

திருப்பூர் அறம் அறக்கட்டளை, ஒன்பதாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும் எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில் நடத்துகிறது.

எழுத்தாளர்களைக் கொண்டே நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரியச் சடங்கை தமிழகத்தில் மீட்டெடுக்க இந்த விழாவை அறம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். தவிர, இந்நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரூ. 160 மதிப்புள்ள சிலேட், பல்பம், வாய்பாடு, வண்ணப் படப் புத்தகம், கிரேயான்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு 2019 வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக் கால தடை காரணமாக, இவ்விழாவை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு எழுத்தற்வித்தல் விழா வழக்கமான உற்சாகத்துடன் நிகழ உள்ளது.

இதுவரை எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், ஜோ.டி. குரூஸ்,  சு.வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், ஈரோடு மோகனரங்கன், பெருமாள்முருகன், தேவதாஸ்,  தஞ்சை வெ.கோபாலன், பேரா. ம.வே.பசுபதி, அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், சுனில்கிருஷ்ணன், பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னா,  கோ.மகுடேஸ்வரன், இசை, மரபின்மைந்தன் முத்தையா, பேரா. கனகசபாபதி, பேரா.ஶ்ரீநிவாசன், தொல்லியல் அறிஞர் ராமசந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், ராம.கோபால்ரத்தினம் உள்ளிட்டோர் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்று திருப்பூர்க் குழந்தைகளின் நாவில் ஓங்காரம் எழுதி, நெல்லில் அகரம் எழுதச்செய்து, வித்யாரம்பம் செய்வித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு எழுத்தறிவித்தலுக்கான ஆயத்தப் பணிகள் இன்று (மகாளய அமாவாசை) துவங்கி உள்ளன. விழா விவரம்:

எழுத்தறிவித்தல் விழா 2022

நாள்: விஜயதசமி நன்னாள், 05.10.2022, புதன்கிழமை
நேரம்: காலை 9.00 மணி - 12.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர்.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:

1. ஶ்ரீ. வே.ஜீவானந்தன், ஓவியர், கோவை
2. ஸ்ரீ. ஒத்திசைவு வெ.ராமசாமி, கல்வியாளர், பெங்களூரு
3. ஶ்ரீ. வி.வி.பாலா, ஆசிரியர், யுவபாரதி, சென்னை
4. ஶ்ரீ. மது.ஜெகதீஷ், சிற்பப் புகைப்படக் கலைஞர், பொள்ளாச்சி
5. ஶ்ரீமதி. சி.குமரேஸ்வரி, நல்லாசிரியர், திருப்பூர்.
 
_________________________________________________________

முன்பதிவுக்கு:

கவிஞர் ஶ்ரீ.பக்தவத்சலம்- 98422 27505
கு.சிவகுமார்- 98949 33877