தனிமனித ஒழுக்கமே இன்றைய தேவை: எழுத்தாளர் ஜோ டி குரூஸ் 'பளிச்'
.
திருப்பூர் அறம் அறக்கட்டளை சதந்திர தின கலந்துரையாடலில் குரூஸ்...!
.
திருப்பூர், ஆக. 17: ''தனிமனித ஒழுக்கமே, இன்றைய சமுதாயத்தின் அடிப்படை தேவை. ஒவ்வொரு
மனிதனும் தன்னை திருத்திக் கொள்வதே சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்,'' என,
எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அறிவுறுத்தினார்.
சுதந்திர தினவிழாவையொட்டி, திருப்பூர் டவுன்ஹாலில் 'மக்களுடன்
கலந்துரையாடல்' நிகழ்ச்சி, நேற்று நடந்தது; சாகித்ய அகாடமி விருது பெற்ற
எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பங்கேற்றார். வாசகர்களின் கேள்விகளுக்கு, அவர்
பதிலளித்தார்.
பிராணிகளை கொல்வது, அடிமாடுகளை இறைச்சிக்காக விற்பது சரியா?
வணிக நோக்கத்தில், இதுபோன்ற தவறுகள் தொடர்கின்றன. மனிதர்களில் நல்லவர்கள்
சதவீதம் அதிகமா, கெட்டவர்கள் சதவீதம் அதிகமா என்றால், நல்லவர்கள்
இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. நல்லவர்களை அதிகப்படுத்த வேண்டிய
கட்டாயம் நமக்கு இருக்கிறது.
தேசியத்தை எதிர்ப்பவர்களை முற்போக்குவாதிகள் என கூறுவது அதிகரித்துள்ளதே?
இச்சமுதாயத்தில், பல்வேறு விதமான மனிதர்களை பார்க்கிறோம்; பழகுகிறோம்.
அடிப்படை கட்டமைப்பில், அவர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக
இருக்கலாம்.அவர்களுடன் வாழ்வதற்காக நாம் பொறுமைசாலிகளாக, பெருந்தன்மை
கொண்டவர்களாக மாற வேண்டியிருக்கிறது. தனிமனித ஒழுக்கமே, இன்றைய
சமுதாயத்தின் அடிப்படை தேவை. ஒவ்வொரு மனிதனும், தன்னை திருத்திக் கொள்வதே,
சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.
மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, கடலோர எல்லை பாதுகாப்பில் பணி தர வேண்டும் என கூறி வருகிறீர்களே...?
கடலுக்குள் இருந்துவிட்டு, கரைக்கு ஓய்வெடுக்க வரும் மீனவர்களுக்கு,
நாட்டுக்குள் நடப்பது தெரிவதில்லை. அரசியல், சமூகம், திட்டங்கள், அதனால்
ஏற்படும் பாதிப்பு அறிவதில்லை. மீனவர்களின் இருப்பை, வாழ்வை, விழுமியங்களை,
வரலாறை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட மனிதர்கள்
அல்ல; இம்மண்ணுக்கு சொந்தக்காரர்கள். மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள்,
கடலில் அடிப்படை வாழ்வை புரிந்தவர்கள். அவர்களில் படித்தவர்களுக்கு அது
சார்ந்த பணி தர அரசு முன்வர வேண்டும்.
தனிமனித ஒழுக்கத்தை கட்டாயப்படுத்தும் அளவுக்கு, சமூகம் மோசமாகி விட்டதா?
தனிமனித ஒழுக்கம் கனவாகி விட்டது; 125 கோடி மக்களும், ஒழுக்கத்தை கேடயமாக
எடுக்க வேண்டும். இதை செய்தியாக ஏற்கக்கூட மக்கள் தயாராக இல்லை. கெட்டவனாக
நிரூபிக்க ஒரு விநாடி போதும்; நல்லவன் என நிரூபிக்க, வாழ்நாள் முழுவதும்
வாழ்ந்து காட்ட வேண்டியிருக்கிறது.
எழுத்தாளனுக்கு வரைமுறை அவசியமா?
எழுத்தில் உண்மை இருக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அன்பு இருக்க
வேண்டும். அக்கறை, அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். எழுத்தும், எண்ணமும்
ஒன்றாக இருக்க வேண்டும்.
புத்தகங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து?
புத்தகத்தின் ஒரு வரியாவது, மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
சில புத்தகங்கள் கோபப்படுத்தும்; சில புத்தகங்கள் விவேகி ஆக்கும். சில
புத்தகங்கள் விரல் பிடித்து துாக்கி விடும். ஒரே வரி, வாழ்க்கை மந்திரத்தை
சொல்லி தரும்.
இவ்வாறு, ஜோ டி குரூஸ் பேசினார்.
நன்றி: தினமலர்- திருப்பூர் (17.08.2015)