திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சுதந்திர தினத் திருவிழா- 2015 சிறு தொகுப்பு


சமூகசேவகர் கூத்தம்பாக்கம் இளங்கோவுக்கு

அறச்செம்மல்-2015 விருது வழங்கியது 

அறம் அறக்கட்டளை

.

திருப்பூரில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில்,  சமூகசேவகர் கூத்தம்பாக்கம் ஆர்.இளங்கோவுக்கு 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருதை வழங்குகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். உடன் (வலமிருந்து) அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், இயற்கை ஆர்வலர் அம்மாபாளையம் வேலுசாமி ஆகியோர்.

.
திருப்பூர், ஆக. 17: கூத்தம்பாக்கம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்கிய சமூகசேவகர் திரு. ஆர்.இளங்கோவுக்கு திருப்பூர் அறம் அறக்கட்டளை, 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருதை வழங்கியது. இவ்விருது அறம் அறக்கட்டளை நடத்திய நான்காம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது. 

திருப்பூரில் இயங்கும் அறக்கட்டளை அமைப்பு ஆண்டுதோறும் அறச்செம்மல் விருதினை சுதந்திரதின விழாவில் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நான்காம் ஆண்டாக, அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தின விழா, சனி, ஞாயிறு (ஆகஸ்ட் 15, 16) இரண்டு நாட்கள் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. 

ஆக. 15, சனிக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்ற தேசியக் கொடியேற்றும் நிகழ்வுக்கு காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் திரு. ஓ.கே.டெக்ஸ் எம்.கந்தசாமி தலைமை வகித்தார். மகாகவி வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
.
கலாம் குறித்த கருத்தரங்கில் பேசுகிறார் எம்.ஹரிஹரசுதன் (அதிமுக).
.
அதைத் தொடர்ந்து  ‘கலாமின் கனவுகள் என்ற தலைப்பில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் பேசினர். ஜேசிஸ் அமைப்பின் தலைவர் திரு. என்.சம்பத்குமார் தலைமை வகித்தார். திருவாளர்கள் எம்.ஹரிஹரசுதன் (அதிமுக), பா.சசிகுமார் (மதிமுக), வழக்கறிஞர் எம்.ராமகிருஷ்ணன், எஸ்.சுந்தரபாண்டியன் (ஆம் ஆத்மி), அ.பார்த்திபன் (பாஜக), மு.சுரேஷ்பாபு (காந்திய மக்கள் இயக்கம்) ஆகியோர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவுகளுடன் தங்கள் கனவுகளை விவரித்தனர். 
 .
கலாம் குறித்த கருத்தரங்கில் நிறைவுரையாற்றுகிறார் பேரா. இரா.ஸ்ரீனிவாசன்.

.
இறுதியில், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளர் திரு. இரா.ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,  “ஒரு நாடு வல்லரசாக, பொருளாதாரத்தில் வலுவாக வேண்டும். அதற்கு இயற்கை வளம், மக்கள் வளம், கலாசார வளம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகள்” என்று கலாம் கூறியதை நினைவுகூர்ந்தார். 
 .
களப்பணியாளர் அறிமுகத்தில் பேசுகிறார் காடையூரில் கொங்க கோசாலையை நடத்திவரும் விஜயாபுரம் வி.சிவகுமார்.
.
மாலை நடைபெற்ற களப்பணியாளர் அறிமுக நிகழ்ச்சியில் அம்மாபாளையத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வேலுசாமியும், காடையூரில் கொங்க கோசாலையை நடத்திவரும் வி.சிவகுமாரும் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுள் முதியவர் திரு.வேலுசாமி தனது 77 வயதிலும், ம்ரங்களை நட்டு வளர்ப்பதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அதேபோல, அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றிய விஜயாபுரம் இளைஞர் திரு.வி.சிவகுமார் நாட்டுப்பசு இனத்தைக் காப்பதற்காக தனது தொழிலைக் கைவிட்டு காடையூரில் கொங்க கோசாலையை நடத்தி வருகிறார். 
.
விவேகானந்தா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி.
.
அடுத்து கே.செட்டிபாளையம் விவேகானந்த வித்யாலயா, ஆஷர் நகர் வித்யாமந்திர் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 .
ஏற்புரை வழங்குகிறார் ’அறச்செம்மல்’ கூத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ.
.
முதல்நாள் நிகழ்வுகளின் நிறைவாக, நிறைவாக, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தை தமிழகத்தின் முன்மாதிரி கிராமமாக உருவாக்கியவரும், மேலும் பல கிராமங்கள் முன்னேற்ற வழிகாட்டி வருபவருமான சமூகசேவகர் திரு. ஆர்.இளங்கோவுக்கு 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதனை சாஹித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸ் வழங்கி, சுதந்திர தினச் சிறப்புரையாற்றினார்.
 .
சுதந்திர தின சிறப்புரையாற்றுகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
 .
“சுதந்திரம் என்பது கட்டுப்பாட்டுக்கு உள்பட்டது. நாம் ஒவ்வொருவரும் தேசத்தின் பெருமையை உணர்ந்து அதன் பிள்ளைகள் நாம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்’’ என்று தனது சிறப்புரையில் எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸ் குறிப்பிட்டார்.
 .
இரண்டாம் நாள் நிகழ்வு:
.
ஆக. 16, ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் துவங்கின. சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
 .
என்.ஸ்ரீராம் தலைமையிலான குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி
 .
மாலை 3.00 மணியளவில், சங்கீத கலாபீடம் நிறுவனர் திரு. என்.ஸ்ரீராம் தலைமையிலான குழுவினரின் தேசபக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாளர்கள் சுதர்சன், தஞ்ஜெயன், ராகுல், தேவஸ்ரீ ஆகியோர் அடங்கிய இக்குழு அற்புதமான தேசபக்திப் பாடல்களை வழங்கியது.
.
அம்பேத்கர் குறித்துப் பேசுகிறார் எழுத்தாளர் ம.வெங்கடேசன்
 .
அதைத் தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் 125-வது ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.ம.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார். சிபிசி ஃபேஷன்ஸ் உரிமையாளர் திரு. விஜயகுமார் தலைமை வகித்தார். திரு.ம.வெங்கடேசன் தனது உரையில், “விடுதலைப்போரில் நேரடியாகப் பங்கேற்காதபோதும், டாக்டர் அம்பேத்கர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடினார். அவரது முயற்சியால் உருவான சட்டங்களின் பலனையே நாம் இப்போது அனுபவிக்கிறோம்’’ என்றார். 
.
பேரா.தா.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்

 .
இறுதியாக, பேராசிரியர் திரு. நாகர்கோவில் தா.ராஜாராம் தலைமையில், ‘தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வியா? பொதுநல உணர்வா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  ‘கல்வியே’ அணியில், ராஜபாளையம் ஆசிரியர் திரு.ஆர்.ராஜ்குமார் (அணித் தலைவர்), சென்னிமலை தமிழாசிரியர் திரு. என்.சரவணன், திருப்பூர் மகாகவி வித்யாலயா பள்ளி தாளாளர் திரு. மணி ஆகியோர் பேசினர். ’பொதுநல உணர்வே’ என்ற அணியில் திருவில்லிப்புத்தூர் திருமதி இந்திரா ஜெயச்சந்திரன் (அணித் தலைவர்), வழக்கறிஞர் திரு. அ.பார்த்திபன், திரு. ஜேசி மு.சுரேஷ்பாபு ஆகியோர் பேசினர். இறுதியில் நடுவர்  ‘தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வியே’ என்று தீர்ப்பளித்தார்.
 .
திருப்பூர், குமரன் சாலையிலுள்ள குமரன் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் எழுத்தாளர்கள் ஜோ டி குரூஸ், ம.வெங்கடேசன்.
 .
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், நிர்வாகிகள் சிவகுமார், சுரேஷ்பாபு, உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக