செவ்வாய், 15 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி

 
எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஒரு குழந்தைக்கு எழுத்தறிவிக்கிறார்

விஜயதசமியன்று (14.10.2013) திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் அறம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல் விழா நடைபெற்றது. இதில் 170 குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  'ஆழிசூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,  சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ’ஈ.வெ,ரா.வின் மறுபக்கம்’ நூலை எழுதிய ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைத்தனர்.

இது தொடர்பான தினமணியில் வெளியான செய்தி கீழே.

(படத்தை சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்)

கல்வியே மிகப்பெரும் செல்வம்:
பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்

திருப்பூர், அக். 14: கல்வியே மிகப்பெரும் செல்வம் என்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் விழாவில் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் திங்கள்கிழமை பேசினார்.

  திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் விழா (வித்யாரம்பம்) விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் நடைபெற்றது.

  விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதைத் துவங்குவது நமது மரபு. அதிலும் கல்வித்துறையில் தேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் மூலமாக  குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி கல்வியைத் துவங்கிவைக்கும் பணியை அறம் அறக்கட்டளையினர் இரண்டாவது ஆண்டாக திங்கள்கிழமை திருப்பூரில் நடத்தினர்.

 இந்த எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி காலை 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் எஸ்.என்.நடராஜ் குருக்கள் இதை துவக்கி வைத்தார்.

 இதில், 'ஆழி சூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், 
சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்தனர். மொத்தம் 170 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் செய்து வைக்கப்பட்டது.


  இதில், சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசியது:

உலகில் பிற நாடுகள் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே இந்தியாவில் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. வானவியல், தத்துவம், அரசியல் என அனைத்துவிதமான நிலைகளிலும் கல்வி போதிக்கப்பட்டுவந்தது.

   விஜயதசமிநாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் என்பது நமது பாரம்பரியமாகும். கல்விதான் மிகப்பெரும் சொத்து. எழுத்தறிவித்தல் செய்து வைக்கப்பட்ட குழந்தைகள் வருங்காலத்தில் கல்வியில் ஆராய்ச்சி பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றார்.

  இதில், அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன், செயலாளர் கு.சிவகுமார், ஹரிபிரசாத், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
.







ஞாயிறு, 13 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி


நாளை எழுத்தறிவித்தல் விழா
அறம் அறக்கட்டளை நடத்துகிறது


திருப்பூர், அக். 12:  விஜயதசமியன்று அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவித்தல் விழா, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை (நாளை) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூர் அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன், செயலாளர் கு.சிவகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயதசமியன்று குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதைத் துவங்குவது நமது மரபு. அதிலும் கல்வித்துறையில் தேர்ந்தவர்களும் எழுத்தாளர்களும் குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி கல்வியைத் துவங்கிவைப்பதால் அவர்களின் வாழ்க்கை சிறப்படையும் என்பது நம்பிக்கை.

இந்தப் பாரம்பரிய நிகழ்வைப் புதுப்பிக்கும் விதமாக, திருப்பூரில் சென்ற ஆண்டு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேராசியர் ப.கனகசபாபதி ஆகியோர் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் செய்துவைத்தனர். இந்த ஆண்டும், அதேபோல எழுத்தாளர்களைக் கொண்டு வித்யாரம்பம் செய்யும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை எழுத்தறிவித்தல் விழா நடைபெறுகிறது. இதனை கோவில் அர்ச்சகர் எஸ்.என்.நடராஜ குருக்கள் துவங்கிவைக்கிறார்.

இந்நிகழ்வில்,  'ஆழிசூழ் உலகு' புதினத்தை எழுதிய எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,  சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், வரலாற்று ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்ஹிந்து இணைய எழுத்தாளர் ஜடாயு, ஹிந்துத்துவம் டுடே இணைய எழுத்தாளர் ம.வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்துவைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் தங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க விரும்புவோர், ஹரிபிரசாத் (99948 82748), சிவகுமார் (98949 33877), பாலசுப்பிரமணியன் (99444 04499) ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.



- தினமணி (13.10.2013)

.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் விழா பேனர்கள்

திருப்பூரில் விஜயதசமியன்று நடைபெறும் வித்யாரம்பம் விழாவுக்காக நகரில் 10 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்...












எழுத்தறிவித்தல் (வித்யாரம்பம்) 2013 அழைப்பிதழ்



அன்புடையீர்,
வணக்கம்.
தெளிந்த அறிவு வேண்டும் என்ற எண்ணாம் கொண்ட நமது பெரியோர்கள்,  வெற்றிக்குரிய நாளான விஜயதசமி அன்று  பல்துறைகளில்  ஞானம் கொண்ட பண்டிதர்கள்குருவின்  மூலமாக தங்கள் சந்ததிக்கு எழுத்தறிவிக்கும்  (வித்யாரம்பம்)  வழக்கத்தைk  கொண்டிருந்தார்கள்
அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியாக நாம்   நமது  விஸ்வேஸ்வரர்  திருக்கோவிலில்வேத பண்டிதர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  மூலமாக எழுத்தறிவிக்கும்   நிகழ்வை நடத்த இருக்கிறோம்.  
இந்நிகழ்வில், கல்வி கற்கத் துவங்கவுள்ள  நமது குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
  • இடம் :  விஸ்வேஸ்வரர் திருக்கோவில் , திருப்பூர்.
  • நாள்: 14-10-2013 திங்கட்கிழமை, 
  • நேரம்: காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை.                                                              

எழுத்தறிவிப்போர்:

  • ஸ்ரீ. எஸ். என். நடராஜ குருக்கள் (அர்ச்சகர், விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பூர்)
  • ஸ்ரீ. இரா. ஸ்ரீனிவாஸன் (பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்) 
  • ஸ்ரீ. ஜோ டி குரூஸ் (எழுத்தாளர், 'ஆழி சூழ் உலகு’)
  • ஸ்ரீசங்கரநாராயணன் (ஜடாயு- எழுத்தாளர், தமிழ் ஹிந்து இணைய இதழ்)
  • ஸ்ரீ. அரவிந்தன் நீலகண்டன் (வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர்)
  • ஸ்ரீ. .வெங்கடேசன்   (எழுத்தாளர் - ஹிந்துத்துவம்  டுடே இணைய இதழ் )
  • சௌ. சரஸ்வதி  (சுற்றுச்சூழல் ஆர்வலர்)

முன் பதிவு செய்ய:


- கல்விப்பணியில்...

அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

க.எண். 24/ 36,காயத்திரி டவர்ஸ்,
பிண்ணி காம்பவுன்ட்,
திருப்பூர்-641601 

திங்கள், 23 செப்டம்பர், 2013

வீரத்துறவியும் மகாகவியும்…

அறம் அறக்கட்டளை திருப்பூர் பார்க் கல்லூரியில் நடத்திய விழாவில் பங்கேற்ற தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாலர் ஸ்ரீ ம.கொ.சி.ராஜேந்திரன் (இடமிருந்து இரண்டாவது). உடன் உள்ளோர்: காந்திய மக்கள் இயக்க நிர்வாகி ஸ்ரீ சுரேஷ்பாபு, பேராசிரியர் இரா.குப்புசாம்ய், கல்லூரி முதல்வர் ஸ்ரீ ஜெ.திருமாறன், அறம் அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீ கு.சிவகுமார்.
அறம் அறக்கட்டளை திருப்பூர் பார்க் கல்லூரியில் நடத்திய விழாவில் பங்கேற்ற தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஸ்ரீ ம.கொ.சி.ராஜேந்திரன் (இடமிருந்து இரண்டாவது). உடன் உள்ளோர்: காந்திய மக்கள் இயக்க நிர்வாகி ஸ்ரீ சுரேஷ்பாபு, பேராசிரியர் இரா.குப்புசாமி, கல்லூரி முதல்வர் ஸ்ரீ ஜெ.திருமாறன், அறம் அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீ கு.சிவகுமார்.

மகாகவி பாரதி, சுவாமி விவேகானந்தர் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய ஒற்றுமை உள்ளது. எல்லொரும் கடவுளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடிக்கொண்டிருந்த நேரத்தில், பாரதி, சுதந்திர உணர்வின்றி உறங்கிக் கிடந்த இந்திய மக்களுக்கு சுதந்திரத் தாகத்தை ஊட்டும் வகையில் பாரதமாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சியே பின்வருமாறு பாடினார்.

“பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்;
புன்மை இருட்கணம் போயினயாவும்;
எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழி துயில்கின்றனை இன்னுமெந்தாயே,
வியப்பிது காண்! பள்ளி எழுந்தருளாயே! ”

 பாரதியாரைப் போலவே வீரத்துறவி விவேகானந்தரும் தம் எழுத்திலும் பேச்சிலும் விழித்தெழுவதையே (Awakening) தம் தலையாய செய்தியாகக் கொண்டார்; “தேசத்திற்கு தொண்டுசெய்வது, அதனுடைய உழைக்கும் மக்களுக்கு தொண்டு செய்வதற்குச் சமம்’’ என்று அவர் கூறியுள்ளார். இதனையே சுவாமி விவேகானந்தர்  தன்னுடைய ஆன்மிகத் தேடலின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

“நீங்கள் பகவத் கீதையைப் படிப்பதைக் காட்டிலும், கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள்” என்று இந்திய வாலிபர்களுக்கு சுவாமிஜி சொன்னார்.

ஏனெனில் “தங்களுடைய தோள்கள் வலிமையாக இருக்கும்போது மட்டுமே வாலிபர்கள் பகவத்கீதையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

பலவீனமான. வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை உள்ள இளைஞனுக்கு கீதையை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவை என்பது சுவாமிகளின் கருத்து. வெறுமனே கீதை ஆராய்ச்சி செய்தால் அவனது மூளை மேலும் உலர்ந்து போய்விடும், சரீரம் மேலும் தளர்ந்து போய் விடும் என அவர் புதிய விளக்கமே தந்தார். மனிதனை ஒன்றுக்கும் உதவாதவன் ஆக்குவது விவேகானந்தரின் செய்தியல்ல; கிருஷ்ண பரமாத்மாவின் செய்தியும் அல்ல. மனிதனை நல்ல தீரனாகவும் வீரனாகவும் ஆக்குவதே அவர்களின் செய்தி.

இதையே, ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடலுறுதி வேண்டும்’ என்று பராசக்தியிடம் பாரதி பிரார்த்திக்கிறார். ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்றும் அவர் கேட்கிறார்.

“அச்சம் தவிர், ஆண்மை தவறேல், உடலினை உறுதி செய், போர்த்தொழில் பழகு, யௌவனம் காத்தல் செய், வீரியம் பெருக்கு” என்றெல்லாம் புதிய ஆத்திசூடியில் கூறும் மகாகவி பாரதி, அதில் “தேசத்தைக் காத்தல் செய்” என்றும், “வையத் தலைமை கொள்” என்றும் கூறுகிறார். இது சுவாமி விவேகானந்தரின் தாக்கமே எனில் மிகையில்லை.

‘பலமே வாழ்வு; பலவீனமே மரணம்’ என்கிறர் சுவாமி விவேகானந்தர். மகாகவி பாரதியோ, ‘இளைத்தல் இகழ்ச்சி, ஏறு போல் நட’ என்கிறார்.
விவேகானந்தர் என்ற மாமனிதர் காவியுடை தரித்த சன்னியாசி. ஆனால் பாரதியார் இல்லற வாழ்வில் ஈடுபட்டவர். இது மட்டுமே இவர்களுக்கு இடையே உள்ள வேற்றுமை.

முட்டையானது வெளிப்புற சக்தி கொண்டு உடைக்கப்பட்டால் அதனுள் இருக்கும் உயிரானது அழிக்கப்படுகிறது. ஆனால் அதே முட்டையானது உட்புற சக்தி கொண்டு உடைக்கப்படுமாயின் அங்கு ஒரு உயிர் உருவாகிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து ஆகும்.

உலகிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ் பெற்று விளங்கியவை, நம் நாட்டின் தலைசிறந்த  பல்கலைக்கழகங்கள் நாளந்தா மற்றும் தட்சசீலம் ஆகும். இவையே நம் நாட்டில் (உலகில்) முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், இங்குதான் அக்காலத்திலேயே வருடத்திற்கு 15,000 மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற்றனர். மேலும் அங்கு 1,500 ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர்.

இப்படி பெருமை பெற்ற இந்த பல்கலைக்கழகங்களை முகலாய மன்னன் ஒருவன் தனது 11 படைவீரர்களுடன் வந்து தீயிட்டுக் கொளுத்தினான். பல்வேறு அரிய நூல்களையும் அரிய பொக்கிஷங்களையும் கொண்ட அந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து இரண்டு வாரங்கள் எரிந்து கொண்டிருந்த்து.

இக்காரியத்தை செய்த மன்னன் நம்நாட்டின் பெருமையை அறிந்திருந்தால் இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தை இழந்திட நேர்ந்திருக்காது. எனவே அனைத்து மக்களும் நாம் வாழும் நாடு நமதென்பதை உணர வேண்டும்; அறிய வேண்டும்; அதன் பெருமையைப் போற்ற வேண்டும்.

ஆனால் இன்று நம் நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் குறிப்பாக பல்கலைக் கழகங்களின் நிலை குறிப்பிடப்படும் படியாக இல்லை என்பதை அறிந்து நாம் வேதனைப் பட வேண்டியுள்ளது. உலகின் சிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது வேதனை அளிப்பதல்லவா?

திருப்பூர் பார்க் கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் ரதத்திற்கு மலர் தூவி வணங்கும் பேராசிரியர் இரா.குப்புசாமி.
மலரஞ்சலி


ஒரு நாட்டின் மன்னர் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்த மன்னருக்கு பிறந்த நாள். ஊரெங்கும் விழாக் கோலம் பூண்டிருந்த்து. மன்னர் யானை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தபோது மக்கள் அனைவரும் அவருக்கு மலர்கள் தூவி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 
அப்போது எங்கிருந்தோ ஒரு கல் வந்து ராஜாவின் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த அமைச்சர் சிப்பாய்களை அழைத்து இக்காரியத்தைச் செய்தவரை இழுத்து வரும்படி உத்தரவிட்டார்.

சிப்பாய்கள் அனைத்து இடங்களிலும் தேடி, மாமரத்தின் அடியில் நின்று கல்லால் மாமரத்தை அடித்துக் கொண்டிருந்த வயதான பெண்ணை இழுத்துச் சென்று மன்னர் முன்பு நிறுத்தினர். அப்பெண்மணி நடந்தவற்றைக் கூறினார். உடனே மன்னர் தீர்ப்பளிக்காமல், நாளை அரசவைக்கு வருமாறு மூதாட்டியிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
மறுநாள் அவையில் அனைவரும் பாட்டிக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற பதட்டத்துடன் காணப்பட்டனர். மன்னர் கல்லெறிந்த பாட்டிக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார். அனைவருக்கும் ஆச்சரியம். குழப்பம் தீராமல் மன்னரிடமே சிலர்  காரணம் கேட்டனர்.

அதற்கு அரசர், கல்லை வீசியதற்கு ஓரறிவுள்ள மரமே கனிகளைத் தருகிறது. ஆனால் ஆறறிவு உள்ள நான் அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கினால் நான் மரத்தை விடத் தாழ்ந்தவன் ஆகிவிடுவேனே என்று பதில் கூறினார். இக்கதையில் வரும் மன்னரைப் போல் நாம் நமக்குத் தீங்கு செய்பவருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் சாராம்சம் என்னவென்றால், இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றை தலையாய கொள்கையாக கொண்டுள்ளது; மக்கள் யாரும் மதவெறி கொள்ளக் கூடாது என்பதே.

உலகம் முழுவதிலும் யூதர்கள் மற்றும் பார்சிகளை விரட்டிய பொழுது அவர்களை ஆதரித்தது நம் நாட்டை ஆண்ட மன்னர்களும் மக்களுமே. அதிலும் குறிப்பாக யூதர்கள் நம் நாட்டின் கேரளப் பகுதிக்கு வந்தபோது, மலபார் பகுதியை ஆண்ட மன்னர் ராமவர்மா தன்னுடைய அரண்மனைக் கோவில் அமைந்துள்ள மட்டன்சேரி பகுதியில் பல ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்து அவர்கள் வாழவும், வழிபாட்டுக்கும் வழி செய்து கொடுத்தார். கி.பி 1568-ஆம் ஆண்டுக் கட்டப்பட்ட ஆலயமானது Paradesi Synagogue என்ற பெயரில் இன்றுவரை வழிபாட்டுத்தலமாக உள்ளது.
இந்திய மண்ணில் எத்தனையோ மகான்களும், முனிவர்களும், புலவர்களும், யோகிகளும் தோன்றியுள்ளனர். அவர்களில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் முக்கிய இடம் பெற்றவர். அவர் எழுதிய 1330 குறளில் ஒரு இடங்களில் கூட தமிழ் என்ற வார்த்தை இல்லை. மேலும் எந்த ஒரு நாட்டையோ, மதத்தையோ, சாதியையோ அவர் குறிப்பிடவில்லை. அதனால்தான் நாம் திருக்குறளை ‘உலகப் பொதுமறை’ என்கிறோம்.

அதே வரிசையில் சித்தார்த்தராகப் பிறந்து உலக இன்பத்தைத் துறந்து ஞானியான புத்தர் மகத்தான மனிதர். நேற்று வரை உலகில் உள்ள அத்தனை இன்பத்தையும் அனுபவித்து வந்த அவர், பசி, பிணி, மூப்பு ஆகியவற்றைக் கண்ட அடுத்த நாள், துறவு நிலையை அடைந்தார் என்றால் அவரது செயல் சாதாரணமானதல்ல. எந்த ஆயுதமும் இன்றி சீனாவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரதம் அடிமைப்படுதியது சீன அறிஞர் ஒருவர் கூறினார். அவர் கூறியது புத்தரின் போதனைகளை சீனா ஏற்றுள்ளதைத் தான்.

அதுபோலத் தான் பாரதத்தின் ஆன்மிக வானில் என்றும் பிரகாசிக்கும், ஒளி வீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம். தெய்வீகத்தையும், தேசியத்தையும் ஒன்றிணைத்து நம் நாட்டு மக்களிடையே புதிய பரிமாணத்தையும், பாதையையும் வகுத்தவர் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளைப் பரப்பி, மக்களிடையே விழிப்புணர்வினை உருவாக்கும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். அதுவே சுவாமிஜியின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களில் நாம் செய்யக் கூடியதாக இருக்கும்.

குறிப்பு:
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர்; சமூக சேவகர்.
கடந்த 11.09.2013 அன்று, சுவாமி விவேகானந்தரின் 120-ஆவது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவு தின விழா, திருப்பூர் பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பார்க் கல்லூரி, தேசிய சிந்தனைக் கழகம் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்தின. கல்லூரி வளகத்திற்கு வருகை தந்த சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி ரதத்திற்கும் அதில் வைக்கப்பட்டிருந்த மகாகவி பாரதி படத்திற்கும் கல்லூரி மானவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இவ்விழாவில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஸ்ரீ ம.கொ.சி.ராஜேந்திரன்,  “பாரதியும் விவேகானந்தரும்”  என்ற  தலைப்பில்  ஆற்றிய உரை இது.
அவரது பேச்சை கட்டுரையாகத் தொகுத்தவர்:  கல்லூரியின்  மூன்றாம் ஆண்டு கணிப்பொறித் தொழில்நுட்ப மாணவர் ஸ்ரீ நாகராசன்.
விழாவுக்கு ஏற்பாடு செய்த்துடன், விழா நிகழ்வுகளை தொகுத்து, புகைப்படங்களையும் வழங்கிய திருப்பூர் பார்க் கலை கல்லூரி முதல்வர் ஸ்ரீ ஜெ.திருமாறன் அவர்களுக்கு நன்றி.
காண்க:

நன்றி: விவேகானந்தம் 150.காம் இணையதளம் 
.

பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை


சில ஆண்டுகளுக்கு முன்னர், கல்வி ஆராய்ச்சி நிமித்தம் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றிருந்தேன்.  அப்பொது  அங்குள்ள ஆவணங்களைப் பார்வையிட்ட பொழுது, லார்ட் மெக்காலேவின் கடிதத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. அதில் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நிலைகொள்ள செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் பேசியதன் தொகுப்பும் அங்கு இருந்தது.

கல்லூரி விழாவில் பேராசிரியர் இரா.குப்புசாமி பேசுகிறார்.

பேராசிரியர் இரா.குப்புசாமி
மெக்காலே தான் நம் நாட்டில் தற்போது உள்ள ஆங்கிலக் கல்விமுறையை அறிமுகப் படுத்தியவர்.  இந்தியாவை ஆங்கிலேயருக்கு அடிமையாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் மெக்காலே. 1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே பிரபு பேசியது மிகவும் குறிப்பிடத்தக்க வேண்டியதாகும். அவர் கூறியது இதுதான்:
“நான் இந்தியாவை வடக்கிலிருந்து தெற்காகவும் கிழக்கிலிருந்து மேற்காகவும் பலமுறை பயணம் செய்துள்ளேன். ஆனால் எங்கேயும் ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ நான் தெருவில் பார்க்கவில்லை. ஆகவே இந்தியர்களை அடிமையாக்குவது மிகவும் கடினம். அவர்களின் பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் ஆங்கிலக் கல்வியால் மாற்றிவிட்டால் மட்டுமே அவர்களை அடிமையாக்குவது எளிது”.

இந்திய சமூகத்தின் சிறப்பை இந்தப் பேச்சு நமக்கு விளங்கவைக்கிறது.
இதற்குப் பின் 28 ஆண்டுகள் கடந்த பிறகே சுவாமி விவேகானந்தர் தோன்றினார். சில சொற்பொழிவுகள் உலகையே மாற்ற வல்லவையாக அமைகின்றன. அவ்வகையில் சமயத்துறையில் உலக அளவில் பெரும் புரட்சியை உருவாக்குவதாக அமைந்தவை சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள். அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11-ல் கூடிய சர்வ சமய பேரவை மாநாட்டில் பாரதத்தின், ஹிந்து சமயத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றினார்.

அவர் உரையை ஆரம்பித்த மறுகணமே அங்கிருந்த அத்தனை பேரும் கரகோஷம் செய்தனர். காரணம் தனது உரையை  ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று அவர் ஆரம்பித்ததே ஆகும்.

“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்…. ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன’ என்கிறது பகவத் கீதை…. பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன”

என்று அந்த சபையில் விவேகானந்தர் பேசினார்.

மத ஒற்றுமையைப் பற்றிக் கூற வந்த பாரதியார் தனது பாடலில்,

“தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோவிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்”
-என்று கூறுகிறார்.

கண்ணதாசன் ‘சுடுகாட்டு எலும்பு’ என்ற தனது கட்டுரையில் ஒற்றுமையை விளக்குகிறார் பின்வருமாறு:

“சுடுகாட்டு எலும்பில் வடநாட்டார் எலும்பு என்றும் தென்னாட்டார் எலும்பு என்றும் ஏதும் இல்லை. அனைத்து மனிதரும் இறுதியில் இங்குதான் வருகின்றனர். அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள்,  ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலவிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆலாபனை கவிதைத் தொகுப்பிலுள்ள  ‘ராங் நம்பர்’ என்ற கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

தற்செயலாக ஒருநாள் தொலைபேசியில் தவறான எண்ணில்
இறைவன் சிக்கிக் கொள்கிறான். கவிக்கோ கேட்கிறார்…

இங்கே என்ன நடக்கிறது என்று பார் !
இதோ உனக்கு வீடுகட்டுவதற்காக
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!
இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?
கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?
இந்த ராமர் யார்? ரஹீம் யார் !
பெயரில் என்ன இருக்கிறது?
பெயரால் அல்லவா இத்தனைப் பிரச்சனை?
பெயர்களில் நீ இருக்கிறாயா?
நீ அன்பு என்றால் இந்த பகை யார்?
நீ சாந்தி என்றால் இந்த வெறி யார்?
நீ சமத்துவம் என்றால் இந்த துவேஷன் யார்?
நீ ஆனந்தம் என்றால் இந்தத் துயரம் யார்?
நீ உண்மை என்றால் இந்தப் பொய் யார்?
நீ ஒளி என்றால் இந்த இருள் யார்?
எரியும் வீடுகள் உன் தீபாராதனையா?
வெட்டப்படும் வெண்புறாக்கள் உனக்கு அர்ச்சனையா?
சிந்தும் ரத்தம் உனக்கு அபிஷேகமா?
இது எந்த மதம்? எந்த வேதம்?
இவர்களா உன் பக்தர்கள்?
ஆலய மணி ஓசையும், மசூதியின் அழைப்பொலியும்
காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம்
இந்த மூடர்களுக்கு எப்போது புரியும்?
கடைசியாகக் கேட்கிறேன்
நீ இந்துவா? முஸ்லிமா?
அவ்வளவு தான்
‘ராங் நம்பர்’ என்ற பதிலோடு
இணைப்புத் துண்டிக்கப்படுகிறது

கடவுளை கட்டடங்களுக்குள்ளும் மத வேலிகளுக்குள்ளும் அடைக்க முயலும் அறிவின்மையையே இப்பதில் உணர்த்துகிறது.

Frogs

ஒரு ஊரின் கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கிணற்றுக்கு கடல் தவளை ஒன்று வந்தது. அந்த கடல் தவளையைப் பார்த்து கிணற்றுத் தவளை கேட்டது, ‘உனது கடல் எவ்வளவு பெரியது இருக்கும்?’ என்று. கடல் மிகப் பெரியது’ என்றது கடல் தவளை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவி,  ‘இவ்வளவு பெரியது இருக்குமா?’ என்றது கிணற்றுத் தவளை. ‘இல்லை அது இன்னும் பெரியதாக இருக்கும்’ என்றது கடல் தவளை. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்குத் தாவி, ‘இவ்வளவு பெரிதிருக்குமா?’ என்றது கிணற்றுத் தவளை. ‘இல்லை, இல்லை கடல் மிக மிக பெரிதாக இருக்கும்’ என்றது கடல் தவளை. ‘இல்லை நீ பொய் கூறுகிறாய். இந்த உலகிலேயே இந்தக் கிணறு தான் மிகப் பெரிய நீர்ப்பரப்பு’ என்றது கிணற்றுத் தவளை.

இந்தக் கிணற்றுத் தவளையைப் போன்று தான் பல மனிதர்கள், தன் மதம் தான் சிறந்தது என்று ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதையே சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையில் குறிப்பிட்டார்.

‘யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவருக்கு மறு கன்னத்தையும் காட்டு’ என்று இயேசுநாதர் கூறியுள்ளார். காரணம், அவ்வாறு அறையும்போது நீங்கள் மறு கன்னத்தையும் காட்டினீர்களேயானால் அவர்களால் மறுமுறை காரணம் சொல்லாமல் அடிக்க இயலாது என்பதற்காகவே ஆகும் என்றார்.

இஸ்லாமியர்கள் வருடத்திற்கு ஒருமுறை 30 நாட்கள் ஏன் நோன்பு இருக்கின்றனர் என்றால் பணக்காரர்களும் ஏழைகளும் பசியின் கொடுமையை அறிந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு தான். இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை அறிந்து உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகவே ரம்ஜான் நோன்பு உருவாக்கப்பட்டது.

ஒருநாள் முகமது நபி அவர்களைக் காண கிறிஸ்தவ நண்பர் ஒருவர் மசூதிக்கு வந்திருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிறிஸ்தவ நண்பர் ‘ஜெபம் செய்யவேண்டும்’ என்று கூறிக் கிளம்பினார். அப்போது நபிகள் ‘இந்த மதிய வெயிலில் எப்படிச் செல்வீர்கள், நீங்கள் இங்கேயே ஜெபம் செய்யலாமே?’ என்றார். நண்பரும் சரி’ என்று கூறி மசூதியிலேயே ஒரு இடத்தில் தனது ஜெபத்தை முடித்துக்கொண்டு மாலை வேளையில் கிளம்பிச் சென்றார். அப்போது மசூதியில் இருந்தவர்கள் நபி அவர்களிடம், ‘நீங்கள் செய்தது சரியா? இந்த இடத்தின் புனிதத்தை கெடுத்துவிட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் கூறினார், “நாம் வணங்கும் கடவுளும் அவர் வணங்கும் கடவுளும் ஒருவர்தான்” என்று கூறினார்.

ஒருநாள் சுவாமி விவேகானந்தர் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சில இளைஞர்கள் மது  அருந்திவிட்டு  அந்த பாட்டில்களை ஆற்றில் வீசி அதனை சுட முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் ஒரு பாட்டிலைக் கூடச் சுட முடியவில்லை. இதனை பார்த்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் சிரித்தார்.

அதற்கு ஒரு இளைஞன் ‘ஏன் சிரிக்கிறீர்கள? உங்களால் சுட முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டான். உடனே விவேகானந்தர் முடியும்’ என்றார். ஒரு இளைஞன் விவேகானந்தரிடம் கைத்துப்பாக்கியைக் கொடுத்தான். மது பாட்டில்களை நதியில் வீச ஆரம்பித்தனர். அதை ஒன்றுகூட விடாமல் சுட்டுத்தள்ளினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ‘நீங்கள் பயிற்சி பெற்றிருப்பீர்கள்’ என்றான். அதற்கு விவேகானந்தர் ‘நான் இப்போது தான் முதல்முறையாக துப்பாக்கியைத் தொடுகிறேன்’ என்றார். மன ஒருமைப்பாடு இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

இந்த இடத்தில் ‘விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்’ என்ற நூலில் தானே தன் அனுபவமாகக் கூறியுள்ளதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமானது. “மன ஒருமைப்பாட்டின் மூலமாக எதையும் சாதிக்க முடியும். மலைகளைக் கூட அணு அணுவாக உடைத்தெறிய முடியும்” என்ற நம்பிக்கையை சுவாமிஜி பதிவு செய்துள்ளார்.

‘உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மை பெறும். எல்லோரிலும் உறைகின்ற சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார். சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடம் இருந்து விலகியே இருக்கிறான்.’ என்ற சுவாமியின் கூற்றை நிருபிக்கும் வகையாக திருமூலரின் பின்வரும் பாடல்
Article7அமைந்துள்ளது.
“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”
(திருமந்திரம் – 1857)
தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுளுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.
இதையே தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னுடைய ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்ற கவிதைத் தொகுப்பில் ‘ஊழிக்காற்று ஒரே பக்கம் வீசியது’ என்றக் கவிதையில் குறிப்பிடுகிறார்.
எனவே, மாணவர்கள் அனைவரும் நம் வீரத்துறவி வழிநின்று,  சமய நல்லிணக்கம் பேணி, நாட்டுப்பற்று மிக்கவர்களாக வளர்ந்து, வலிமையான பாரதம் படைக்க வேண்டும்.
 .
குறிப்பு:
வரலாற்றுத்துறை பேராசிரியரான ஸ்ரீ. இரா.குப்புசாமி, ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.
விவேகானந்தரின் 120- வது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவுதின விழா, கடந்த செப். 11-ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள  பார்க் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில்  ‘பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை’ என்ற தலைப்பில்,  ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஸ்ரீ இரா.குப்புசாமி  ஆற்றிய உரையின் தொகுப்பே இந்தக் கட்டுரை.
அவரது பேச்சை கட்டுரையாகத் தட்டச்சு செய்தவர், கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிப்பொறித் தொழில்நுட்ப மாணவர் ஸ்ரீ நாகராசன்.
இந்நிகழ்ச்சியை, திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையும், தேசிய சிந்தனைக் கழகமும், பார்க் கல்லூரியும் இணைந்து நடத்தின. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவியதுடன்,  இக்கட்டுரையை தொகுத்து வழங்கியும் உதவியுள்ள பார்க் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீ. ஜெ.திருமாறன் அவர்களுக்கு நன்றி.
நன்றி: விவேகானந்தம் 150.காம் இணையதளம்

திங்கள், 9 செப்டம்பர், 2013

செப். 11-இல் இரு விழாக்கள்- அழைப்பிதழ்



செப். 11- இல் இரு சரித்திர நிகழ்வுகள்:

  • சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு தினம் (செப்.11, 1893)
  • மகாகவி பாரதி நினைவு தினம் (செப்.11, 1921)
அறம் அறக்கட்டளை நடத்தும் இரு விழாக்கள்:

·         முதல் நிகழ்வு: கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் மலரஞ்சலி
·         இரண்டாம் நிகழ்வு: பாரதி நினைவு சிறப்புச் சொற்பொழிவு
இணைந்து பங்கேற்போர்:
·         பார்க் கலை கல்லூரி, திருப்பூர்.
·         காந்திய மக்கள் இயக்கம்
·         தேசிய சிந்தனைக் கழகம்.

***

நிகழ்ச்சி நிரல்:
நாள்: 11.09.2013, புதன்கிழமை.














முதல் நிகழ்வு:

கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் மலரஞ்சலி

நேரம்: காலை 11.00 மணி
இடம்: பார்க் கலை கல்லூரி, சின்னக்கரை, திருப்பூர்.

தலைமை:  
திரு. பி.ரகுராஜன், செயலாளர், பார்க் கலைக் கல்லூரி.
முன்னிலை: 
 திரு. ஜெ.திருமாறன், முதல்வர், பார்க் கலைக் கல்லூரி.
அறிமுக உரை:  
திரு. கு.சிவகுமார், செயலாளர், அறம் அறக்கட்டளை.
சிறப்புரை- 1: பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை
திரு. பேராசிரியர் குப்புசாமி,
முதல்வர், நந்தா கலை, அறிவியல் கல்லூரி, ஈரோடு.

சிறப்புரை- 2: பாரதியும் விவேகானந்தரும்
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர், தேசிய சிந்தனைக் கழகம், சென்னை.
***
  
 
இரண்டாம் நிகழ்வு:

பாரதி நினைவு சிறப்புச் சொற்பொழிவு

நேரம்: மாலை 6.00 மணி.
இடம்: காந்திய மக்கள் இயக்க அலுவலகம்,
யுனிவர்சல் திரையரங்கு சாலை, திருப்பூர்.

தலைமை: ஓ.கே.டெக்ஸ் திரு. எம். கந்தசாமி,
மாநில துணைத் தலைவர், காந்திய மக்கள் இயக்கம்.

முன்னிலை: திரு. ஏ.கிருஷ்ணமூர்த்தி,
மாநில துணை பொதுச்செயலாளர், கா.ம.இ.

வரவேற்புரை: திரு. கே.சுதாகர்,
மாநகர் மாவட்ட தலைவர், கா.ம.இ., திருப்பூர்.

அறிமுக உரை: திரு. மு.சுரேஷ் பாபு,
மண்டல செயலாளர், கா.ம.இ.

சிறப்புரை: திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர், தேசிய சிந்தனைக் கழகம், சென்னை.

நன்றியுரை: திரு. ஏ.லியோ ஜோசப்,
புறநகர் மாவட்ட தலைவர், கா.ம.இ., திருப்பூர்.


அனைவரும் வருக!
***

சுதந்திர தின விழாவில் ஜெயமோகன் உரை- காணொளி



அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தினத் திருவிழாவில் பிரபல எழுத்தாளர் திரு. ஜெயமோகன் நிகழ்த்திய நிறைவுரையின் தொகுப்பை யு-டியூபில் வெளியிட்டுள்ளோம்.

கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கி, அந்த உரையின் முழு காணொளியையும் காணலாம். கேட்கலாம்...

ஜெயமோகன் உரை -1

ஜெயமோகன் உரை -2 

ஜெயமோகன் உரை -3

ஊடகங்களும் மாற்றங்களும்: அரவிந்தன் நீலகண்டன் உரை

திருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார்.

போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்.

தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்.

இன்றைக்கு இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றீன் பரவலால் ஊடகம் மிகவும் ஜனநாயகப் படுத்தப் பட்டுள்ளது. இன்றைக்கு நாம் செய்திகளை அப்படியே படித்து நம்புபவர்களாக அல்ல, நாமே செய்திகளை உருவாக்குபவர்களாக இருக்கிறோம். இந்த வலிமையை தேச, சமூக முன்னேற்றத்திற்காக சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்.

பாகம் 1:

பாகம் 2
:


காண்க: தமிழ்ஹிந்து 

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஈரநெஞ்சம் மகேந்திரன் குறித்த வ.மு.முரளியின் கட்டுரை

அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தினத் திருவிழாவில் அறச்செம்மல் விருது பெற்ற திரு.கோவை ஈரநெஞ்சம் மகேந்திரன் குறித்த பத்திரிகையாளர் திரு. வமுமுரளியின் கட்டுரை இது....

 ***

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.


மதுரை
யைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
eeranenjam07
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
- தினமணி- ஞாயிறு கொண்டாட்டம் (30.06.2013)
தொடர்புக்கு:  
P.மகேந்திரன்,
நிர்வாக அறங்காவலர்,
ஈரநெஞ்சம் (பதிவு எண்: BK4 193/2012)
406, ஏழாவது வீதி, காந்திபுரம்,
கோயம்புத்தூர்- 641 012.
.
அலைபேசி: 90801 31500
மின்னஞ்சல்: eeram.magi@gmail.com
இணையதளம்: http://www.eeranenjam.org


.