அறம் அறக்கட்டளை - வித்யாரம்பம்- 2022
இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் ஆசான்கள்
திரு. வே.ஜீவானந்தன்
M.A. (Political Science),B.L., PGDPM
கோவையைச் சேர்ந்த திரு. ஜீவா (எ) வே.ஜீவானந்தம் (66), வழக்குரைஞர், ஓவியர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்; தமிழகம் அறிந்த ஓவியர். கோவையில் செயல்படும் ஓவியர் அமைப்பான சித்ரகலா அகாதெமியின் தலைவர். இந்த அமைப்பு, 45 ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் கோவையில் காலையில் குழந்தைகளுக்கு ஓவிய வகுப்புகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் நடத்தி வருகிறது. தவிர, ஓவியப்போட்டிகள், ஓவியக் கண்காட்சிகளையும் நடத்துகிறது.
ஆரம்பக் காலத்தில் மாணவப் பத்திரிகையாளராக இருந்துள்ளார். ‘திரைச்சீலை’, ‘ஒரு பீடியுண்டோ சகாவே’ ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ‘திரைச்சீலை’ நூலுக்கு 210ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருது ஜனாதிபதி கரங்களால் கிடைத்தது. 2018இல் சிறுவாணி வாசகர் மைய விருது பெற்றவர். பல்வேறு பத்திரிகைகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. நூல்களின் அட்டைப்படம் வரைவதில் நிபுணர். இவர் ஒரு சிறந்த திரை விமர்சகரும் கூட.
$$$
திரு. ஒத்திசைவு வெ.ராமசாமி
B.Tech. (Metallurgy)
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிறந்தவர் திரு. ஒத்திசைவு ராமசாமி (56), சென்னை ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது பெங்களூரில் வசிக்கிறார். பழமையிலும் பாரம்பரியத்திலும் தீவிர நம்பிக்கை கொண்டவர். வங்கிப் பணி, கணினித் தொழில்நுட்பம், மின்னியல், ஜவுளித் துறை, பள்ளி ஆசிரியர் எனப் பல துறைகளில் பணியாற்றியவர். அகில பாரத அளவில், பல்லாயிரம் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கணினிசார் கல்விக்கான மென்பொருள் உருவாக்கக் குழுவுக்கு தலைமை தாங்கியவர்.
தற்போது மின்னியல் சார்ந்த கருவிகளை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளார். ‘ஒத்திசைவு’ என்ற இணையதளம் மூலமாக, சமூகத்தைச் சரிப்படுத்தும் துணிவான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பாரதீயம், தொழில்நுட்பம், அறிவியல், மொழிகள், வரலாறு என பல துறைகளில் எழுதி வருபவர்.
இவரது இணையதளம்: http://othisaivu.in
$$$
B.Com, M. A (Philosophy), PG Diploma in Journalism
கோவை, போத்தனூரைப் பூர்வீகமாகக் கொண்டவர், திரு. வி.வி.பாலா (54). கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ‘சுதேசமித்திரன்’ தமிழ்ப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சட்டக் கல்வி பயின்றவுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்டு, யோகா பயிற்சி ஆசிரியரானார்.
விவேகானந்த கேந்திரம் என்னும் சமூக சேவை அமைப்பில் 2007ஆம் ஆண்டு முதல் முழுநேர ஊழியராக உள்ளார். அதன் வெளியீட்டுத் துறை நிர்வாகியாக பத்தாண்டுகளாக சென்னையில் இருந்தபடி செயல்படுகிறார். ‘யுவபாரதி’ மாத இதழின் ஆசிரியர். யோகா ஆசிரியர்கள் பலரை உருவாக்கி உள்ளார். விவேகானந்த கேந்திரத்தின் சுய முன்னேற்ற, ஆளுமைப் பண்புப் பயிற்சி வகுப்புகள் பலவற்றை நடத்தி வருகிறார்.
$$$
திரு. மது.ஜெகதீஷ்
DME, Post Diploma in CA, B.Tech. (Industrial Engineering)
பொள்ளாச்சியில் வசிக்கும் திரு. மது ஜெகதீஷ் (எ) ஜெ.மதுராந்தகன் (53), தொழில்நுட்ப வல்லுநர், மென்பொருள் உருவாக்க மையத்தின் நிறுவனர், கணினிக் கல்விப் பயிற்றுநர், சிற்பக்கலை புகைப்படக் கலைஞர், இயற்கை- வனவிலங்கு ஆர்வலர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். தேசிய அளவிலான புகைப்படக் கண்காட்சிகளில் பங்கேற்றவர்.
தனது 21ஆம் வயதிலேயே தொழில் நிறுவனத்தை தொடங்கிய இளம் தொழில் முனைவோரான இவர் உருவாக்கிய நூற்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருள்கள், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரத்துக்கு மேற்பட்ட மானவர்களுக்கு கணினிக் கல்விப் பயிற்சி அளித்துள்ளார். இவரது கோயில் கட்டடக் கலை, சிற்பக்கலை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், அழகிய புகைப்படங்கள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. வனவிலங்கு- கானுயிர்- சுற்றுச்சூழல் தொடர்பான இவரது புகைப்படங்கள் இயற்கையை நேசிப்போருக்கு மிகவும் பிடித்தமானவை.
இவரது வலைப்பூ: https://madhujagdhish.blogspot.com
$$$
திருமதி சி.குமரேஸ்வரி
M.A, M.Phil., B.Ed,
திருப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான திருமதி சி.குமரேஸ்வரி (39), 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். அய்யன்காளிபாளையம், வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிகிறார். ஆங்கிலத்தில் உள்ள வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் அமைப்பின் அறிவியல் திறன் நூல்களை தமிழாக்கி இருக்கிறார்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், என்சிஇஆர்டி, தீக்ஷா ஆகிய அமைப்புகளில் ஆசிரியர் பயிற்சியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் ஹைடெக் இ-லேப் திட்டத்தின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். மாணவர்களின் ஆங்கில மொழியறிவை வளர்க்க இணையவழியில் ஒலிப்பேழைகளை வெளியிட்டு வருகிறார். ஆசிரியர் பணியை ஒரு தொழிலாகக் கருதாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் சேவையாகக் கருதிப் பணியாற்றுபவர்.
$$$
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக