செவ்வாய், 24 அக்டோபர், 2023

அறம் எழுத்தறிவித்தல் விழா- 2023 நிகழ்வின் பதிவு

 


 திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி (எழுத்தறிவித்தல்) 24.10.2023, விஜயதசமி அன்று அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது.

திருப்பூர், அறம் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் திருப்பூர் மாநகரிலுள்ள அருள்மிகு விசாலாட்சியம்மன் சமேத ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலில்  வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கல்வியைத் தொடங்கும் இந்நிகழ்வானது, திருக்கோயில்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் ஒவ்வோராண்டும் விஜயதசமி திருநாளன்று நடைபெறுகிறது.

தலைவாழை இலை அல்லது தாம்பூலத் தட்டில் நெல்மணிகளைப் பரப்பி, சமுதாயத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்கள், நல்லாசிரியர்கள், கலைத்துறை மற்றும் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்கள், இலக்கியவாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரால் மழலைகளின் கைவிரல் பிடித்து, அகரம் எழுதி, தங்கவேல் அல்லது தர்ப்பையை தேனில் தொட்டு, குழந்தைகளின் நாவில் ஓம்காரம் எழுதி, மஞ்சள் கலந்த அரிசி அட்சதையைத் தூவி கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துவார்கள்.

தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சியானது, திருப்பூர் அறம் அறக்கட்டளையின் சார்பாக 10-வது ஆண்டாக 24.10.2023  செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் திரு.சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பிரபல கட்டுரையாளரும், எழுத்தாளருமான திரு. பி.பிரபாகரன், வேத அறிஞரும், கண் மருத்துவருமான டாக்டர் திரு.எம்.எல்.ராஜா, வித்யாபாரதி அமைப்பின் சங்கீதத் துறை பொறுப்பாளர் திருமதி. வித்யா ரமேஷ், மேடைப் பேச்சாளரும், கிராம நிர்வாக அலுவலருமான திரு. ஜெ.சுந்தரபாண்டியன், திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளரும், கவிஞருமான திரு. சு.சிவதாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து ஆசிர்வதித்தனர். 230-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடைபெற்றது.

குழந்தைகள், பெற்றோர் என அனைவருக்கும் கல்கண்டுசாத பிரசாதமும், எழுது பலகை, எழுதுகோல், அரிச்சுவடி, ஓவியப் புத்தகம், கலர் கிரேயான்கன் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய  பெட்டகத் தொகுப்பும் இலவசமாக வழங்கப்பட்ட.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

(பத்திரிகைகளுக்கு அனுப்பிய அறிக்கை)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக