வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

தன்னலமின்மை + கூட்டு முயற்சி = மகத்தான வெற்றி!
திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளை, தனக்கென சொந்தமாக ஒரு கட்டடத்தை எழுப்பி இன்று (26.08.2018) கிரஹப் பிரவேசம் செய்திருக்கிறது. நற்பணிகளுக்காகத் துவக்கப்பட்ட அறம் அறக்கட்டளையின் வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல். தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூக விழிப்புணர்வுள்ள இளைஞர்களை உருவாக்குதல், கல்வித் துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படுத்துதல், தன்னலமற்ற சமூகப் பணி ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு 2012-இல் அறம் அறக்கட்டளை திருப்பூரில் துவங்கப்பட்டது.

சுதந்திர தின விழா, எழுத்தறிவித்தல் விழா, காந்தி ஜெயந்தி, பள்ளிகளில் விழாக்கள், கல்லூரிகளில் கருத்தரங்குகள், தமிழின் முதன்மை எழுத்தாளர்களுடன் விவாதம், நூல் வெளியீடு, சிந்தனை வட்டம் போன்ற நிகழ்வுகளை அறம் அறக்கட்டளை திருப்பூரில் நடத்தி வருகிறது. சென்ற ஆண்டு திருப்பூரில் புத்தகக் கண்காட்சியிலும் அரங்கை அமைத்தது.

அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் திரு. ச.சிவசுப்பிரமணியம் அவர்களின் அலுவலகமே அறக்கட்டளையின் செயல்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் அறம் அறக்கட்டளையின் பணிகளுக்கு வலுவூட்டும் வகையில் தனியொரு அலுவலகமும், சேவைப் பனிகளை விஸ்தரிப்பதற்கான ஒரு கட்டடமும் தேவை என்று நண்பர்கள் திரு.கு.சிவகுமார், திரு. வி.கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். தவிர, அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்றனர்.

திருப்பூர், பெரியார் காலனி, சாமிநாதபுரம் பகுதியில் பீவீ இம்பெக்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் திரு. திருநாவுக்கரசு, இவர்களது நல்ல நோக்கத்தை உணர்ந்து, தனக்குச் சொந்தமான இடத்தை கட்டடம் அமைக்க அளித்தார். டி.டி.பி.மில் சாலையில் 4.48 சென்ட் பரப்பளவுள்ள இடத்தை அவர் மிகப் பெரிய மனதுடன் அளித்தார்; பல லட்சம் மதிப்புள்ள இடத்தை வழங்கியதுடன் கட்டடம் அமைக்கவும் நிதியுதவி அளித்தார்.

இது தொடர்பாக ஓர் ஆண்டுக்கு முன்னர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, இங்கு கட்டடம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. அப்போதே, அப்பகுதியைச் சார்ந்த பல இளம் தொழிலதிபர்களும், அறம் அறக்கட்டளையின் ஆதரவாளர்களும் கட்டுமானச் செலவினத்தை ஏற்பதாக அறிவித்தனர். நண்பர்கள் திரு. சிவகுமாரும் திரு. பாலுவும் ஈட்டியிருந்த நற்பெயரே அங்கு முதலீடானது.

அதைத் தொடர்ந்து நண்பர்களின் முயற்சியில் புதிய அணி அங்கு உருவானது. அவர்களது விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்பும், கூட்டு முயற்சியும், இன்று 1,800 சதுர அடி பரப்புள்ள அற்புதமான கட்டடமாக உருவாகி இருக்கின்றன. இதற்கு இதுவரை சுமார் ரூ. 12 லட்சம் செலவாகியுள்ளது.

இதற்கு பலர் கைமாறு கருதாமல் நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களைப் பட்டியலிட்டால் நீளும். கட்டடப் பொறியாளர் திரு. அன்பழகன், அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் திரு. ச.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் ஒருங்கிணைப்பு, கட்டடம் அமைவதில் பெரும் பங்கு வகித்தது.

கட்டுமானப் பணியின் இடையே பல தடைகள் நேரிட்டபோதும் விடா முயற்சியுடன், கட்டடம் ஒன்றே கருத்தாகச் செயல்பட்ட அறம் அறக்கட்டளையின் புதிய அணி, இன்று வெற்றிகரமாக அலுவலகக் கட்டடத்தை எழுப்பி இருக்கிறது. இதற்காக கடந்த ஆறு மாதங்களாக கடும் உழைப்பை நண்பர்கள் நல்கியுள்ளனர்.

புதிய கட்டடத்தின் வாஸ்து பூஜை, கிரஹப் பிரவேச நிகழ்வு ஆகஸ்ட் 26, 2018  காலை இனிதாக நடந்தேறியது. தன்னலத்தைத் தள்ளிவைத்து பொதுநலத்தை முன்வைத்தால், அடைய முடியாத இலக்குகள் எதுவுமில்லை என்பது இந்நிகழ்வில் தெளிவாக வெளிப்பட்டது. அப்பகுதியினர் தங்கள் சொந்தக் குடும்ப விழாவாக இதில் கலந்துகொண்டு மகிழ்ந்ததைக் காண முடிந்தது. 


இன்னமும் பணிகள் முடிந்துவிடவில்லை. இந்தக் கட்டடத்தில் விரைவில் ‘ஜன் ஔஷதி’ மலிவுவிலை மருந்தகமும், கணினி வழி மக்கள் சேவை மையமும், ஒரு நூலகமும், டியூஷன் மையமும் துவங்க உள்ளன. திருமுறைப் பயிலரங்கும் நடத்தப்பட உள்ளது.

மாதாந்திரச் சொற்பொழிவுகள், சேவை நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. அறம் அறக்கட்டளையின் வழக்கமான பணிகளுக்கு தலைமை அலுவலகமாகவும் இக்கட்டடம் இயங்க உள்ளது. மிக விரைவில் கட்டடப் பணிகள் பூர்த்தியான பின், சேவை மையத்தின் திறப்பு விழாவை நடத்த அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக