செவ்வாய், 25 செப்டம்பர், 2018

நகர்ப்புற நக்ஸல்கள் - அரவிந்தன் நீலகண்டன் நிகழ்வு



நாட்டை நாசமாக்கத் துடிக்கும் நகர்ப்புற நக்ஸல்கள்
எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பேச்சு.



திருப்பூர், செப். 23: இந்திய நாட்டின் இறையாண்மையை நாசம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நகர்ப்புற நக்ஸல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தேசபக்தியுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று இந்துத்துவ சிந்தனையாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் பேசினார்.

தேசிய சிந்தனைக் கழகமும் திருப்பூர் அறம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சிந்தனை அமர்வுக் கூட்டம், சாமிநாதபுரத்திலுள்ள அறம் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) மாலை நடைபெற்றது. அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் சேலம் பிரபாகர், லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



இந்த நிகழ்வில் அரவிந்தன் நீலகண்டன் பேசியதாவது:

இந்த நாடு ஒன்றாக இருக்க வேண்டும்; நன்றாக இருக்க வேண்டும் என்று தேசபக்தர்கள் விரும்புகிற அதே வேளையில், அந்நிய சித்தாந்தங்கள் மற்றும் அந்நிய நிதியுதவிக்கு அடிபணியும் கூட்டம் ஒன்று நாட்டை சிறுமைப்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறது. கல்வித் துறையிலும் கலை, வரலாறு, இலக்கிய, ஊடகத் துறைகளிலும் அவர்கள் ஊடுருவி, தேசிய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்பாடுகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

காடுகளில் மறைந்து வாழும் நக்ஸல்கள் பாதுகாப்புத் துறைக்கும் மக்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நகர்ப்புறத்தில் இருந்தவாறு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் சதியாளர்களாக இந்த அறிவுஜீவிகள் படை உள்ளது. இவர்களையே நகர்ப்புற நக்ஸல்கள் (அர்பன் நக்ஸல்) என்கிறோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம், நியூட்ரினோ ஆராய்ச்சி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், பசுமைவழிச் சாலை அமைப்பு, மீத்தேன் திட்டம் என தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எந்தத் திட்டமானாலும் உடனடியாக எதிர்ப்பு கிளப்பிவிடப்படுவது அதன் ஓர் அங்கமே. அதன் தேவை என்ன என்பது குறித்தோ, அத்திட்டம் எப்போது துவங்கப்பட்டது என்பது குறித்தோ எந்தச் சிந்தனையும் இன்றி வெற்று அரசியல் நடத்துவோராக அவர்கள் உள்ளனர். ஊடகத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களது துஷ்பிரசாரம் நாட்டில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

உன்மையில் அவர்கள் எதிர்ப்பது தற்போதைய மத்திய அரசையோ பிரதமர் மோடியையோ அல்ல. அவர்களின் இறுதி இலக்கு இந்தியா முன்னேறிவிடக் கூடாது என்பதே. அதற்காகவே, குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள், கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளுடன் அவர்கள் குலாவுகின்றனர். முற்போக்குவாதிகள், இடதுசாரிகள் என வேடமிட்டு அவர்கள் செய்யும் பணிகள் அனைத்துமே, நாட்டின் உயர்வைத் தடுப்பவையாக இருப்பதைக் காண முடியும்.

அண்மைக்காலமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம், அண்டை நாடுகளுடன் நட்புறவு, ஆயுதக் குறைப்பு எனப் பல கருத்துகளுடன் இந்த நகர்ப்புற நக்ஸல்கள் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மோடி அரசு பெரும் தடையாக இருப்பதால், இந்த அரசை எதிர்க்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சிகள் இவர்களின் சதியை உணராமல் அரசியல் லாபத்துக்காக இவர்களை ஆதரிப்பது நாட்டுக்குக் கேடாக முடியும். இதுகுறித்து விழிப்புணர்வை உருவாக்குவது தேசபக்தியுள்ள அனைவரது கடமையாகும் என்று அரவிந்தன் நீலகண்டன் பேசினார்.

முன்னதாக, அறம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் கு.சிவகுமாரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் பணிகள் குறித்து அதன் மாவட்டத் தலைவர் கவிஞர் ஸ்ரீபக்தவத்சலமும் பேசினர். அரவிந்தன் நீலகண்டன் குறித்து முகநூல் எழுத்தாளர் சரவணகுமார் அறிமுகம் செய்தார். அரவிந்தன் நீலகண்டனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கௌரவித்தார்.

தேசிய சிந்னைக்கழகத்தின் நகரச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலாளர் குழலேந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அறம் அறக்கட்டளை உறுப்பினர் பொறியாளர் அன்பழகன் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 150-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.




பட விளக்கம்:

தேசிய சிந்தனைக் கழகமும், அறம் அறக்கட்டளையும் இணைந்து திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சிந்தனை அமர்வில், எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் ‘நகர்ப்புற நக்ஸல்கள்’ குறித்துப் பேசினார். (வலது) கூட்டத்தில் கலந்துகொண்டோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக