செவ்வாய், 8 அக்டோபர், 2019

வித்யாரம்பம்-2019 செய்தியும் படங்களும்

திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்திய
வித்யாரம்ப விழா: 320 குழந்தைகள் பங்கேற்பு


திருப்பூர், அக். 8: அறம் அறக்கட்டளையும் திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூஷன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய வித்யாரம்பம் விழா (எழுத்தறிவித்தல்) விஜயதசமி திருநாளான 08.10.2019 செவ்வாய்க்கிழமை, காலை 7 மணி முதல் மதியம்1.00 மணி வரை திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது.

வீணை இசைக் கலைஞர் திரு.ஆர்.ஜே.ராஜ்குமாரின் இன்னிசையுடன் விழா தொடங்கியது. அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளருமான திருப்பூர் கிருஷ்ணன், சமூகசேவகர் ராம்.கோபால் ரத்தினம், நல்லாசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலருமான க.பழனிசாமி, முன்னாள் தேசிய வாலிபால் வீரர் ஆர்.தேவராஜன், வீணை இசைக் கலைஞர் ஆர்.ஜே.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று எழுத்தறிவித்தலை நடத்திவைத்தனர்.

மழலைகளின் நாவில் தர்ப்பைப்புல் கொண்டு தூய தேன் தொட்டு ஓம்காரம் எழுதி, நெல் மணிகளில் கைகளைப் பிடித்து அகரத்தை எழுத வைத்தனர். இவ்விழாவில் குழந்தைகள் சுமார் 320க்கும் மேற்பட்டோர் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சிலேட்டு, பல்பம், வண்ணப்படப் புத்தகம், வண்ண மெழுகு பென்சில்கள், திருக்குறள், வாய்பாடு புத்தகம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

அறம் அறக்கட்டளையின் உறுப்பினர் கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், ஸ்ரீ சக்தி மாடர்ன் பள்ளி, டி.எஸ்.எஸ்.ஐ.கிட்ஸ்ஜோன் பள்ளி ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எழுத்தறிவிக்கிறார் எழுத்தாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன்.

எழுத்தறிவிக்கிறார் சமூக சேவகர் திரு. ராம்.கோபால்ரத்னம்.

எழுத்தறிவிக்கிறார் நல்லாசிரியர் திரு. க.பழனிசாமி

எழுத்தறிவிக்கிறார் வீணை இசைக் கலைஞர் திரு. ராஜ்குமார்

எழுத்தறிவிக்கிறார் முன்னாள் தேசிய கைப்பந்து வீரர் திரு.தேவராஜன்

அன்பளிப்புப் பொருள்களுடன் மகிழ்ச்சியில் குழந்தைகள்.




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக