செவ்வாய், 16 ஜூலை, 2013

சுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங்குகள்


சென்ற ஆண்டு திருப்பூரில் உள்ள 50-க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து 12 மணி நேர சுதந்திர தின விழா நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அறம் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. தற்போது, அறம் அறக்கட்டளை சார்பில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் ஆகஸ்டு 15, வியாழக்கிழமை, காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான  இரு கருத்தரங்குகளை நடத்தப்படுகிறது.  அது குறித்த விவரங்கள்:

  • சுதந்திர தின விழாவை வெறும் சடங்காகக் கொண்டாடாமல், உளப்பூர்வமாக, நாட்டின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தும் விதமாக இந்தக் கருத்தரங்குகளை அறம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

  • இக்கருத்தரங்குகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், திருப்பூரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் இடம் பெறும் கருத்தரங்கில் தங்கள் உரைகளை நிகழ்த்த அழைக்கப்படுவார்கள். 

1. கருத்தரங்குகளின் விவரம்:


இரு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும். அவை:

1. இளைஞர்களின் இதயக்குரல்:


தற்போது நாடு சந்தித்துவரும் சவால்களுக்கு என்ன தீர்வு என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துக்களைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:
  • அ) அடுத்து நாட்டின் ஆட்சியாளராக வருபவரிடம் எதிர்பார்ப்பது என்ன?
  • ஆ) நமது தேர்தல் முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.


2. திருப்பூரின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்:


தமிழகத்தின் புதிய மாவட்டமான திருப்பூரின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துகளைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:

  • அ) உள்கட்டமைப்பின் தேவைகள்.
  • ஆ) தொழில்துறை வளர்ச்சி
  • இ) விவசாயத்தைக் காப்போம்!
  • ஈ) சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்
  • உ) தன்னிறைவு அடைவோம்!

2. கருத்தரங்குகளின் விதிமுறைகள்:


  • அ) விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை கல்லூரி விவரங்களுடன் தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 
  •  முன்பதிவு செய்வதற்கான தொலைபேசி எண்: 98940 31101 
  • முன்பதிவு செய்வதற்கு கடைசிநாள்: ஜூலை 25.
  • ஆ) இந்தக் கருத்தரங்குகளில் பங்கேற்பவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துவடிவில், முன்னதாகவே ஜூலை 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் கல்லூரி முதல்வரின் ஒப்புதல் இணைக்கப்பட வேண்டும்.
  • இ) இரு கருத்தரங்குகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே மாணவர்கள் கலந்துகொள்ள முடியும். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பை குறிப்பிட்டு முன்பதிவு செய்வதும், கட்டுரைகளை அனுப்புவதும் முக்கியமானதாகும். உதாரணமாக, முதல் தலைப்பில் இரண்டாம் பிரிவைத் தேர்வு செய்பவர் “1-ஆ” என்று குறிப்பிட வேண்டும்.
  • ஈ) தனிநபர் மீதான தாக்குதல்கள், அரசியல் சார்பு நிலைப்பாடுகள், வெறுப்பை உமிழும் சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும். 
  • உ) கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கால அளவு: 10 நிமிடங்கள்: 

3. கருத்தரங்குகளின் நடைமுறை:


  • அ) மாணவ மாணவியரின் கட்டுரைகளை ஆய்வு செய்ய கல்லூரிப் பேராசியர்கள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவற்றைப் பரிசீலித்து கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுப்பார்கள்.
  • ஆ) இரு கருத்தரங்குகளும் இரு வேறு இடங்களில் தனித்தனியே நடைபெறும். அந்த இடங்கள் குறித்த விவரம், கருத்தரங்கு தினத்துக்கு இரு நாட்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.
  • இ) கருத்தரங்கிற்கு மாணவ மாணவிகளே தங்கள் சொந்த ஏற்பாட்டில் வந்து செல்ல வேண்டும். 
  • ஈ) இரு கருத்தரங்குகளிலும் தங்கள் கருத்துக்களைத் திறம்பட முன்வைக்கும் மாணவ மாணவியர், திருப்பூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருந்தினர்கள் முன்னிலையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க அழைக்கப்படுவர்.
  • உ) கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

4. மேலும் விவரங்களுக்கு:


சுதந்திர தினவிழா, கருத்தரங்குகள் குறித்து மேலும் அறிய, கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்:

ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன் (தலைவர்),

அறம் அறக்கட்டளை, திருப்பூர் (பதிவு எண்: 1432/2012),
36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, குமரன் சாலை, திருப்பூர் – 641601,

 போன்: 94437 04858. 
 மின்னஞ்சல்: aramtirupur@gmail.com 
 வலைப்பூ: http://aramtirupur.blogspot.in 
 முகநூல்: http://www.facebook.com/idcc.tirupur

அலைபேசியில் தொடர்பு கொள்க:

திரு. S.நாராயணன்: 98940 31101

திரு. G.ஹரிபிரசாத்: 99948 82748

திரு. பாலசுப்பிரமணியம்: 99444 04499

திரு. D.சீனிவாசன்: 99446 66677

சனி, 30 மார்ச், 2013

காந்தி நினைவுதின நிகழ்ச்சி



கடந்த ஜனவரி 30-ம் தேதி காலை, திருப்பூர், பழையநகர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி  நடைபெற்றது.

மாணவர்களிடையே காந்தியை நினைவுகூரும் வகையிலான ஒவியப்போட்டி நடத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு (சத்திய சோதனை நூல்) வழங்கப்பட்டது. அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், சர்வோதய ஊழியர் சங்க முன்னாள் தலைவர் வீரப்பிரகாசம் உள்ளிட்டோர் பேசினர். காந்திஜி படத்திற்கு அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 
பள்ளி மாணவர்களின் படைப்பூக்கத்தை வளர்க்கும் விதமாக ஓவியபோட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நூறு பேருக்கு சான்றிதழ்கள் அறம்  அறக்கட்டளையால் வழங்கப்பட்டன.
அந்த விழாவின் படங்கள் கீழே கீழே...








திங்கள், 17 டிசம்பர், 2012

இராமாயண அறம் – ஜடாயுவின் உரை


தமிழ் ஹிந்து இணையதளத்தில் இருந்து.. 


திருப்பூரில் விஜயதசமி அன்று நடைபெறும் எழுத்தறித்தல் விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தோம்.

அந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. விஜயதசமி அன்று காலையில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பேரா. கனகசபாபதி, ஜடாயு ஆகியோர் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் தெய்வீகச் சடங்கைச் செய்தனர். சுமார் 200 குழந்தைகள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தேனிலும் பாலிலும் தொட்டு நாவில் “ஓம்” எழுதியது, குழந்தைகளை மடியில் அமர்த்தி பிஞ்சுக் கைகளைப் பிடித்து “அ” என்று சொல்லி எழுத வைத்தது வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

வந்திருந்த பெற்றோர்களில் பலர் எழுத்தறிவித்த அறிஞர்களின் கால்களைத் தொட்டு வணங்கினர். குழந்தைகளும் வணங்கினர். ஜெயமோகன் போன்ற மாபெரும் சிந்தனையாளரால் கைப்பிடித்து எழுத்தறிவிக்கப் பட்ட குழந்தைகள் பாக்கிய சாலிகள். அவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக இறையருளால் சித்திக்கும் என்பதில் ஐயமில்லை.

வந்திருந்த அறிஞர்களும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அறம் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்தவர்களும் மதியம் திருப்பூர் சுற்று வட்டாரத்திலுள்ள சுக்ரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். சோழர் காலத்திய (10-11ம் நூற்றாண்டு) கற்கோயிலை தொல்லியல் துறையினர் அருமையாக கட்டமைத்துள்ளனர். கோயிலின் ஒரு புறச் சுவர் முழுதும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. அமைதியான சூழல். அந்தப் பகுதிக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்குக் கட்டாயம் போய் வாருங்கள்.

மாலை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நன்றாக நடந்தது. தமிழகத்தின் 20-மணி நேர மின்வெட்டுக்கு நடுவிலும் அதிகம் இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்திய அமைப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் இங்கே.

ஜெயமோகன் ஆற்றிய ”அணையா விளக்கு” உரை அவரது வலைத்தளத்தில் உள்ளது.  அதன் வீடியோ இங்கே பார்க்கலாம். வழக்கம் போலவே ஆழமான கருத்துகளும் சிந்தனை வீச்சுகளும், உணர்வெழுச்சிகளும் தெறித்து விழும் உரை. இன்றைக்கு தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஜெயமோகன் முதன்மையானவர் என்றால் மிகையாகாது.

அந்த உரைக்கு முன்பாக, ஜடாயு “இராமாயண அறம்” குறித்தும், அரவிந்தன் நீலகண்டன் ”உபநிஷத அறம்” குறித்தும் சுருக்கமாக பேசினர்.

தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் -ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு இங்கே.

(உரையின் நடுவில் மின்வெட்டு ஏற்பட்டதால் மின்விளக்கு போய்விட்டது. அமைப்பாளர்கள் மைக்கை உயிர்ப்பித்ததால் உரை இருளிலும் தொடர்ந்தது. சீதையின் அறம் பற்றி பேசும் தறுவாயில் நடுவில் ரெகார்டிங் நின்று விட்டது. இதற்குப் பிறகு ஒரு 3-4 நிமிடம் உரை தொடர்ந்தது. “இந்த சிற்றுரையில் ராமாயண அறம் குறித்த அறிமுகத்தையும் கோட்டுச் சித்திரத்தையுமே அளித்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போது இன்னும் விரிவாகப் பேசலாம்” என்று கூறி ஜடாயு முடித்தார். அந்தப் பகுதி மட்டும் கட் ஆகியுள்ளது)

.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

அம்பேத்கர் நினைவுதின நிகழ்ச்சி- செய்தி



கடந்த டிசம்பர் 6 ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள  பார்க் கலை அறிவியல் கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அறம்  அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர்  சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பார்க் கல்லூரியின் செயலர் பி.ரகுராஜன், சி.பி.சி. பேஷன்ஸ் நிறுவன இயக்குனர் டி.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா  ஐ.ஏ.எஸ். அகாடமியின் செயலர் நா. பாரதி, அறிமுக உரையாற்றினார். அவர் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பின் நடைமுறைகள் குறித்து விளக்கினார். புதுதில்லியில் உள்ள சங்கல்ப் ஐ.ஏ.எஸ். போரம் அமைப்புடன் இணைந்து இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிபுணர் ஜா. ராஜகோபாலன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஆற்றல் மேம்பாடு  குறித்து சிறப்புரையாற்றினார் (படம்-1).   வழக்கறிஞர் அ. பார்த்திபன் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி பேசினார். பொறியாளர் வீர.ராஜமாணிக்கம் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் (படம்- 2).


காண்க:
சங்கல்ப் ஐ.ஏ.எஸ். போரம் 
.

புதன், 5 டிசம்பர், 2012

அம்பேத்கர் நினைவுதின நிகழ்ச்சி


(படத்தின் மீதி சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்)
விடுதலை வீரரரும், நமது அரசியல் சாசனத்தின் சிற்பியுமான டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6 ம்  தேதி வருகிறது அதையொட்டி,  அறம்  அறக்கட்டளை- திருப்பூர்  ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

சுவாமி விவேகானந்தா ஐ.ஏ.ஸ். அகாடமி, கோவை,  சங்கல்ப்  ஐ.ஏ.எஸ். போரம்- புதுடில்லி  அமைப்புகளுடன் இணைந்து, அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாகவும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாகவும், மாணவர்களுக்கான் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு துவக்க விழாவை இந்நாளில்  அறம் அறக்கட்டளை நடத்துகிறது.

திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை அறிவியல் கல்லூரியில் 06.12.2012, வியாழக்கிழமை, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். பார்க் கலை அறிவியல் கல்லூரியின் செயலர் பி.ரகுராஜன், சி.பி.சி. பேஷன்ஸ் நிறுவன இயக்குனர் டி.ஆர். விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.

கோவை ஐ.ஏ.எஸ். அகாடமியின்  செயலர் ந.பாரதி ஐ.ஏ.எஸ். பயிற்சியைத் துவக்கிவைத்து, பயிற்சியின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார். சென்னையைச் சார்ந்த தனித்திறன் பயிற்சியாளர் ஜா.ராஜகோபாலன் சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்வின் இறுதியாக, திருப்பூர் வழக்கறிஞர் அ.பார்த்திபன் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி,  நிறைவுரையாற்றுகிறார். அறம்  அறக்கட்டளை  உறுப்பினர் வீர.ராஜமாணிக்கம் நன்றி கூறுகிறார்.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

சனி, 3 நவம்பர், 2012

யூ டியூபில் ஜெயமோகன் பேச்சு....



'அறம்  அறக்கட்டளை' சார்பில் திருப்பூரில் நடந்த விஜயதசமி சிறப்புச் சொற்பொழிவின் விடியோ பதிவு யூ-டியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட சுட்டிகளை சொடுக்கி, எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களது அற்புதமான சொற்பொழிவை முழுவதும் கேட்கலாம்....

http://www.youtube.com/watch?v=HfZ_EYo2piU&feature=share&list=UUoaS4Rn7trdTq2-MQu4wc0Q  Jeyamohan speech_01 of 04 

http://www.youtube.com/watch?v=sBZTKDuKMsA&feature=relmfu  Jeyamohan speech_02 of 04

http://www.youtube.com/watch?v=I9iMsNmUblY&feature=relmfu  Jeyamohan speech_03 of 04 

youtube.com/watch?v=kapkauhnEk0&feature=relmfu  Jeyamohan speech_04 of 04

.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

சுக்ரீஸ்வரர் கோயிலில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு கலந்துரையாடல்

அறம்  அறக்கட்டளை விழாவுக்கு வந்த பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், மாலையில் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு இடையே இருந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தும் வகையில், திருப்பூரில் உள்ள தொன்மையான சுக்ரீஸ்வரர்  கோயிலுக்கு அழைத்துச் சென்றோம்,.

அவருடன் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், இணைய எழுத்தாளர் ஜடாயு, பேராசிரியர் ப. கனகசபாபதி ஆகியோரும் வந்திருந்தனர்.

சுக்ரீஸ்வரர்  கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது. வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை வழிபட்டதாக ஐதீகம்.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், ஆயிரம்  ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவரின் பெயர் அருள்மிகு சுக்ரீஸ்வரர். அம்மையின் பெயர் ஆவுடைத்தாய் அம்மன்.

இக்கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர். அமைதியான சூழலில், நகர நெருக்கடிகளிலிருந்து விலகி, ஆன்மிக  அனுபவத்தை இயற்கையாக வழங்குவதாக இக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் வழிபட்டுவிட்டு, ஜெயமோகனுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டற்ற விவாதத்தில் (கலந்துரையாடல்) அனைவரும் ஈடுபட்டோம். எந்த விஷயம் குறித்து பேசினாலும், அதன் ஆழம் வரை சென்று  துல்லியமான தகவல்களுடன் விளக்குவது இவரது சிறப்பு. சைவம், சமணம், பௌத்தம் குறித்தெல்லாம்  விவாதம் சென்றது. ஒவ்வொருவருடைய கருத்துக்கும் மதிப்பளித்து சாவகாசமாக பதில் அளித்தார் ஜெயமோகன் - ஒரு  குருவின் ஸ்தானத்தில். அற்புதமான அனுபவம் அது.

அந்த நிகழ்வை நண்பர் ஜடாயு படம் பிடித்து அனுப்பி இருக்கிறார். அந்தப் படங்கள் இங்கே...