ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சுதந்திர தின விழா- தினமணி செய்தி 1

தினமணி செய்தி 16.08.2013

சமுதாய ஒழுக்கத்திற்கு தனிமனித ஒழுக்கம் அவசியம்

-திருப்பூர் கிருஷ்ணன்


திருப்பூர்,  ஆக. 15:  சமுதாய  ஒழுக்கத்திற்கு தனிமனித ஒழுக்கம் அவசியம் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் திருப்பூர் கிருஷ்ணன் வியாழக்கிழமை பேசினார் (படம்).

 திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் சுதந்திர தினவிழா காலை 8 முதல் இரவு 9 மணி வரை கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

 இதன் ஒருபகுதியாக மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு துணை மேயர் சு.குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் டி.ஆர்.முரளிதரன் முன்னிலை வகித்தார்.

  இதில், சுதந்திர தினவிழா பேருரையில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியது:

 காந்தியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் மீள வேண்டும். மது குடிக்காததால் மதுக்கடைகள் நஷ்டமடைந்து, அவற்றை அரசு தானாக மூட வேண்டிய நிலை உருவாக வேண்டும்.

மது தான் எல்லா பாவங்களுக்கும் காரணமாக அமைகிறது. அரசு மதுக்கடைகளை நடத்துவது என்பது தன் பசிக்காக தன் உடலை வெட்டிச் சாப்பிடுவது போன்றது.

 மது அருந்தி வரும் ஆண்களைத் திருத்த வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு உள்ளது. மது குடித்து வரும் ஆண்களை ஏன் பெண்கள் துரத்தி அடிக்கக் கூடாது? மருத்து அருந்தக் கூடாது என்று நாம் உறுதிமொழியேற்க வேண்டும்.

தனி மனித ஒழுக்கம் தான் சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படை. எனவே, சமுதாய ஒழுக்கத்திற்கு தனி மனித ஒழுக்கம் அவசியம். ஆன்மிகம், நாத்திகம் என ஒவ்வொருவரும் எந்த ஒரு பாதையில் சென்றாலும் அதில் தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். இதற்கு தன் உறுதியுடன் செயல்பட வேண்டும். எந்த பாதையில் செல்கிறோம் என்று சிந்தனை தோன்றுவதற்கு  இதுபோன்ற நல்ல விழாக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றார்.

அறம் அறச்செம்மல் விருது: அறம் அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு இந்தாண்டு முதல் ஆண்டு முதல் அறச்செம்மல் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இவ்விழாவில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 இதில், பழங்குடியின மக்களுக்காகப் பணியாற்றி வரும் ஏகல் வித்யா கேந்திரம் மருத்துவர் செ.சதீஷ்குமார், ஹேமா சதீஷ்குமார், காரைக்குடி, காந்தி இன்று- இணையதள நிர்வாகி ஆர்.சுனில்கிருஷ்ணன், கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பி.மகேந்திரன், சென்னை பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி ஜி.சசிதரன், மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு காந்தியவாதியான சசிபெருமாள் ஆகியோருக்கு அறச்செம்மல் விருதுகளை எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கினார்.

 இதற்கான ஏற்பாடுகளை அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நன்றி:  தினமணி (16.08.2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக