திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சுதந்திர தினவிழா - தினமணி செய்தி 2

தினமணி செய்தி 18.08.2013

நம் மண்ணின் வரலாறு ஒவ்வொருவருள்ளும் உறைந்துள்ளது

-எழுத்தாளர் ஜெயமோகன்



திருப்பூர், ஆக. 17:  நம் மண்ணின் வரலாறு ஒவ்வொருவருக்கும் உள்ளே உறைந்துள்ளது என்று எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.

திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சமூக சேவகர்களுக்கு ’அறச்செம்மல்' விருது வழங்கி எழுத்தாளர் ஜெயமோகன் பேசியது:

இந்திய சுதந்திரத்தைப் பற்றிய ஓர் உரையில் அம்பேத்கர், ஜனநாயகத்துக்கான சுதந்திரம் என்ற சொல்லைக் குறிப்பிடுகிறார். வெள்ளையர்களிடமிருந்து- அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றோம் என்பதைவிட, ஜனநாயகத்தை நோக்கிச் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். சமத்துவத்துக்கும் நீதிக்கும் தன்னிறைவுக்கும் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்.

தேசம் என்பது அதன் வரலாற்றால் தான் கட்டமைக்கப்படுகிறது. இந்தியாவுக்கு வெள்ளையர்கள் வரும்போது அப்படி ஒரு பொதுவரலாறு இங்கே இல்லை. நாம் இன்று பேசக்கூடிய இந்திய வரலாறு என்பது வெள்ளைக்கார அறிஞர்களால் எழுதி நமக்கு அளிக்கப்பட்டது.

 இந்தியாவுக்கு என பொதுவரலாறு தான் இல்லை. ஆனால் இங்கே குடும்பங்களுக்கு வரலாறு உண்டு. இனக்குழுக்களுக்கு வரலாறு உண்டு. அந்த வரலாற்றுணர்வு ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால் தான் நீ யார் என்று கேட்டால் நான் இந்த குலம், இன்ன சாதி என நம்மவர்கள் சொல்கிறார்கள்.

உங்கள் குலதெய்வத்தை நீங்கள் பார்க்கும்போது நீங்கள் தரிசிப்பது பல லட்சம் ஆண்டுகளாக உருவாகி வந்த ஒரு பண்பாட்டை அல்லவா? அந்த வரலாறு தானே உங்களுக்குள் உள்ளது? அந்த வரலாறு தான் நமக்குள் நிலத்தடி நீர் போல உள்ளது.

இந்த வரலாற்றுணர்வு தான் இந்தியா என்பது. அது இங்கே இருந்துகொண்டு தான் இருந்தது. என்றும், எப்போதும் அது இருந்துகொண்டு தான் இருக்கிறது. தெற்கத்தியர்கள் எல்லோரையும் இமயமும் கங்கையும் தங்களது என உணரச் செய்கிறது. வடக்கத்தியர்களை ராமேஸ்வரமும் குமரியும் தங்கள் புனித மண்ணாக எண்ணச் செய்கிறது.

இதற்கு "வடாஅது பனிமலை வடக்கும்' என்று தொடங்கும் மிகவும் பழமையான புறநானூற்றுப் பாடலே (புறம்- 6) சான்றாகும். வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப் பட்டதுமே, தெற்கே குமரி சொல்லப்படுகிறது. அந்த நிலம் தான் நமக்குள் நம் தன்னுணர்வாக இருந்துகொண்டு, வரலாற்றுணர்வாக வெளிப்படுகிறது.

இங்கே காலையில் வந்தேமாதரம் பாடப்பட்டபோது நான் கண்ணீர் மல்கினேன். எவ்வளவு பெரியக் கனவை நமக்கு அளித்தனர் நம் தேச முன்னோடிகள்! ஜனநாயகம், சமத்துவம், தன்னிறைவுக்குச் செல்வதற்கான சுதந்திரத்தை அவர்கள் நமக்களித்தனர். அதை இழந்தோமென்றால் அதற்குப் பொறுப்பு நாமே.

அதனை இத்தருணத்தில் நினைத்துக் கொள்வோம். நம் சிறுமைக்கு, நம் செயலின்மைக்கு, நம் நேர்மைக் குறைவுக்கு நம் மூதாதையரைப் பொறுப்பாக்குவதில் இருந்து விடுபடுவதற்கான நாளாக இந்த சுதந்திர தினத்தைக் கருதுவோம் என்றார்.

நன்றி: தினமணி (18.08.2013)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக