திங்கள், 26 ஆகஸ்ட், 2013

காந்தீயவாதி சசிபெருமாள் குறித்து மருத்துவர் சுனில்....

என் உயிரைப் பத்தி அக்கறை எடுத்துகிட்ட அளவுக்கு என்னுடைய கோரிக்கையைப் பற்றி அக்கறை எடுத்துக்கல: சசி பெருமாள் – ஒரு நேர்காணல்

 ஒருசில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வழியாக நாமறிந்த ஆளுமைதான் காந்தியர் அய்யா திரு. சசி பெருமாள். தமிழகத்திலும் இந்தியாவிலும் பூரண மதுவிலக்கு கோரி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார் அவர். முப்பத்தி மூன்று நாட்கள் தொடர்ந்து நீடித்த அவருடைய இந்த உண்ணாவிரதம் பரவலான கவனத்தை அவர் மீதும் அவர் முன்வைத்த கோரிக்கை மீதும் ஏற்படுத்தியது. அரசு அவருடைய கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. அவருடைய உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அளவிலான சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரும் போராட்டத்தைக் கைவிட்டு மாற்று வழிகளைச் சிந்திக்குமாறு கோரியதன் விளைவாக அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
சசி பெருமாள் 
அண்மையில் திருப்பூரில் நடைபெற்ற அறம் அறக்கட்டளை விருதுகள் விழா வழங்கும் நிகழ்வில் அவருக்கு அறச்செம்மல் விருது வழங்கி கவுரவம் செய்யப்பட்டது. அங்குதான் அவரை முதன்முறையாக நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது. வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் வெள்ளை நிற காந்தி குல்லாவும் அணிந்து நாற்காலி வரிசையொன்றின் மூலையில் அமர்ந்திருந்தார்.
.
அவரைப் பார்க்கையில் ஏதோ ஒரு பழைய யுகத்து மனிதர் வழிதவறி வந்தமர்ந்துவிட்டதாகத் தோன்றக்கூடும். பீட்டர் கோன்சால்ஸ், காந்தி எப்படி காதியை தேசிய போராட்டத்தின் சின்னமாக மாற்றினார் என்று எழுதியது நினைவுக்கு வந்தது. கோட்டும் சூட்டும் அணிந்த தலைவர்கள் கௌபீனம் அணிந்த அந்தக் கிழவரின் பேச்சை கேட்க மணிக்கணக்கில் காத்திருந்த காலமுண்டு.  தன் சுயத்தைத் தொலைத்து அதை காலனியாதிக்க குறியீடுகளுடன் தொடர்புபடுத்தி தங்களையும் அதில் இணைத்துக் கொள்வதைப் பெருமையாக கருதிய காலகட்டத்தில் அதற்கு மாறாக, ஒடுக்குமுறைக்கு எதிரான, ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக காந்தி எழுந்து நின்றார், அவருடன் தேசமும் எழுந்து நின்றது. ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமாகத் திகழ்ந்த கதரும் வெள்ளுடையும் இன்று அராஜக அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக மாறிவிட்டது. இன்று தமிழகத்தில் இத்தகைய உடையும் தொப்பியும் கேலிப் பொருளாகிவிட்டது. 
.
தயங்கி நின்ற என்னை  நண்பர் ஒருவர் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் விழா அரங்கின் சலசலப்புகளுக்கிடையில் சுமார் அரைமணி நேரம் அவருடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தேன்.
.
57 வயதாகும் காந்தியவாதி அய்யா சசி பெருமாள் அவர்கள் காந்தியின் மரணத்திற்கு பின்னர் பிறந்த தலைமுறையை சேர்ந்தவர். நேரடியாக காந்தியைக் கண்டதில்லை என்றாலும், அவரை ஆதர்சமாகக் கொண்டு வளர்ந்த தலைமுறை அது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர். இன்றும் அவர்கள் குடும்பம் அவருடைய சொந்த கிராமத்தில் வேளாண்மை செய்துவருகிறார்கள். அக்குப்ரஷர் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளில் ஆர்வம் கொண்டவர். இன்றும் தன்னைத் தேடி வரும் நெருங்கிய நண்பர்களுக்கு அம்மருத்துவ முறைகள் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருவதாகச் சொன்னார்.
.
ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே சுயசரிதை வழியாக காந்தி அவருக்கு அறிமுகமாகிறார். அதன் பின்னர் அவருடைய பதினெட்டாவது வயதில், அதுவரை தமிழகத்தில் நிலவி வந்த மதுவிலக்கு முடிவுக்கு வந்தது. அந்நாளைய தி.மு.க அரசால் தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு ஐந்து நாட்கள் சிறை சென்ற அனுபவத்தை நினைவு கூர்ந்தார். 
.
பெரியாரும், ராஜாஜியும், காமராஜரும் எத்தனையோ முறை வலியுறுத்தியும்கூட அன்றைய அரசாங்கம் கள்ளுக்கடைகளை திறந்து வைத்ததன் வழியாகவே மது இன்று இத்தனைப் பிரம்மாண்டமான அச்சுறுத்தும் உருப்பெற்றிருப்பதாக அவர் சொன்னார். ராஜாஜி அடைமழையில் குடை பிடித்துக்கொண்டு அன்றைய முதல்வரின் வீடேறி இத்திட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டதைக்கூட அக்கட்சியின் முதல்வர் பொருட்படுத்தவில்லை என்பதில் அவருக்கு இன்றும்கூட வருத்தமுண்டு. 
.
அய்யா சசி பெருமாளும் சக காந்தியர்களும் தொடர்ந்து ஒரு குழுவாக இணைந்து மதுவுக்கு எதிராகப் போராடிவந்தனர். டாஸ்மாக் வாயிலில் நின்று மது அருந்த வருவோரின் காலில் விழுந்து குடிக்க வேண்டாம் எனக் கேட்டுகொள்வது அவர்களுடைய போராட்ட வழிமுறையாக இருந்தது. இதே வழிமுறையைப் பின்பற்றிய டாக்டர் பிரான்சிஸ் ஆசாத் காந்தி எனும் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களுடனான உரையாடல் கொஞ்ச காலத்திற்கு முன்னர் இத்தளத்தில் வலையேற்றப்பட்டது நினைவிருக்கலாம். (அவரும் இதே குழுவை சேர்ந்தவர்தான்). இளமை தொட்டே மதுவிலக்கு பிரசார கவிதைகள், நாடகங்கள் என பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார்.    
.
சென்னையில் அவர் உண்ணாவிரதமிருந்த கதையை சுவாரசியமாகச் சொன்னார். உண்ணாவிரதம் தொடங்கிய பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கும் அவருடைய உண்ணாவிரதம் தொடர்கிறது. அதன் பின்னர் மருத்துவ கண்காணிப்பிற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கும் எதையும் உட்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார். மவுன விரதத்தையும் கடைபிடிக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுகிறார். சிறையில் அவருடைய இருப்பு பிற கைதிகளின் ‘இன்ன பிற சுதந்திரங்களுக்கு’ வினையாகிறது. ஆகவே அவரை சிறையிலேயே கொல்வதற்கு சதி நடக்கிறது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்படுகிறார். 
.
விடுதலைக்குப் பின்னர் நெல்லை ஜெபமணியின் இல்லத்தில் தன் உண்ணாநோன்பைத் தொடர்கிறார். இவரை அங்கிருந்து வெளியேற்ற பல மட்டங்களிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்தார். உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த இல்லத்தின் உரிமையாளர் அவர் வீட்டிலிருந்து வெளியேற மறுப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்ததாகச் சொல்லப்பட்டது. அகில இந்திய அளவில் மதுவுக்கு எதிராகப் போராடிவரும் சமூக ஆர்வலர்கள் உண்ணா நோன்பை கைவிடும்படி அவருக்கு அறிவுறுத்தினார்கள். தனியொரு மனிதனாக இல்லாமல், இந்திய அளவில் இதே கோரிக்கையை வலியுறுத்தும் இயக்கங்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பதே சரியான பாதை என அவர்கள் அறிவுறுத்தியதால் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு இப்போது களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 'என் உயிரைப் பத்தி அக்கறை எடுத்துகிட்ட அளவுக்கு என்னுடைய கோரிக்கையைப் பற்றி அக்கறை எடுத்துக்கல' என்றார் வருத்தத்துடன்.  
.
சசி பெருமாள் அய்யா தன் உண்ணாவிரதத்தை ஒரு சபதத்துடன்தான் முடித்திருக்கிறார். ஜனவரி முப்பது, 2014-க்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரவில்லை என்றால் மீண்டும் சாகும்வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக தெரிவித்தார். இடைபட்ட இந்த ஒருவருட காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வதே தனது திட்டம் என்றார். இதுவரை சுமார் ஏழெட்டு மாவட்டங்களுக்கு பயணமாகியிருக்கிறார். 
.
அவருடைய கோரிக்கைக்கு ஆதரவு எப்படி இருக்கிறது எனக் கேட்டபோது, “போற எல்லா இடத்துலயும் நல்ல ஆதரவு. இப்ப இங்க வரதுக்கு முன்ன, மைலாப்பூர்ல ஒரு டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டுட்டுதான் வர்றேன். அடிப்படையில என்னன்னா, அந்தப் பகுதி மக்கள், குறிப்பா பெண்களை ஒன்று திரட்ட முடிஞ்சா போதும், எல்லா இடத்துலயும் பெண்கள் மதுவிலக்குக்கு அமோக ஆதரவு கொடுக்குறாங்க..ஒரு முன்னூறு நானூறு பெண்கள் சேர்ந்து போராட்டம் நடத்துனாங்க, என்னையும் அழைச்சிருந்தாங்க. அந்த டாஸ்மாக் கடைய எடுப்போம்னு உறுதி கொடுத்தாத்தான் நகருவோம்னு சொல்லிட்டோம். அப்புறம் ஒரு உயரதிகாரி வந்தார். இன்னும் சில நாட்களுக்குள் மூடுவதா உறுதியளிச்சார். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார் அய்யா.
.
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் முகமாக அவருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் சசி பெருமாள் அய்யா. அண்மைய உயர்நீதிமன்ற தீர்ப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இருக்க வேண்டாம் என்றால் அரசு அதை மூட வேண்டும் என அது வழிக்காட்டுதல் அளிக்கிறது. டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்க அரசு தரப்பு சொல்லத்தகுந்த ஒரே காரணம் – அது லாபத்தை பெருக்குகிறது என்பதாகும். ஆயுதமேந்திய காவலர்களின் பாதுக்காப்புடன் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை நடத்த முயன்ற அரசை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதிலுள்ள அறமின்மை ஒரு அரசை நியாயமாக கூசச் செய்ய வேண்டும். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனும் ஆணையைப் பின்பற்றுவதில் அரசு வெற்றி கண்டுள்ளது.
.
“உண்மையிலேயே நீங்க எதிர்பாக்குற பூரண மதுவிலக்கை இந்த அரசு கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா?” என அவரிடம் கேட்டேன்.
.
“இல்லை. கொண்டு வராது அப்படின்னு தெரியும். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குமே மது ஆலைகள் இருக்கின்றன, அந்த ஆலைகள்தான் டாஸ்மாக்கிற்கு மது விற்பனை செய்கின்றன. இந்தச் சூழலில் இவர்கள் இதை அமல்படுத்துவார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் தி.மு.க – அ.தி.மு.க அல்லாமல் பதினெட்டு கட்சிகள் பூரண மதுவிலக்கிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்களாகவே உள்ளனர். இருபத்தியொரு மக்கள் அமைப்புகளும் எங்களுடன் கைகோர்த்திருக்கிறார்கள்”.
.
அப்படியென்றால் என்னதான் வழி? அண்மைய உயர்நீதிமன்ற தீர்ப்பும், இந்த மைலாப்பூர் போராட்டமும் நமக்கொரு வழியைத் திறந்துவிடுவதாகத் தோன்றியது. தொடர் பிரச்சாரம் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி டாஸ்மாக் கடைகளை வேண்டாம் என மக்களை, குறிப்பாக பெண்களை ஒன்று திரட்டிப்  போராட செய்ய வேண்டும். பரவலான மக்கள் எதிர்ப்பை அப்பகுதியில் ஒருங்கிணைக்க முடிந்தால், அரசுக்கு செவி சாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு தொடர் போராட்டங்களும் விழிப்புணர்வும் தேவையாகிறது. அப்படி மதுவுக்கு எதிராக ஒலிக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானதே.
.
அய்யா சசி பெருமாள் அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உடல்நலத்திற்கும் கேடு அப்டின்னு நீங்கதானே போடுறீங்க? அப்புறம் எதுக்கு முக்குக்கு முக்கு டாஸ்மாக் திறந்து வைக்கணும்? மது ஒழிப்புக்கு ஒதுக்கப்படுற நிதியையும் பயன்படுத்திக்கிட்டு மதுக்கடையையும் திறந்தா எப்படி? அதிகாரிங்களோட பொறுப்பின்மையைத்தான் காட்டுது. இந்த மாதிரி தவறான திட்டங்களைப் பற்றி அரசுக்கு எடுத்துச் சொல்லணும். ஆனா அவுங்கதான் திரும்பத் திரும்ப லாபம் தருது லாபம் தருதுன்னு இதை மூடவிட மாட்டேங்கறாங்க. அதிகாரிங்க மட்டத்துல குடி ரொம்பவே செல்வாக்கோட இருக்கு. என்ன ஐ.ஏ.எஸ் படிச்சு என்ன பிரயோஜனம்? இப்ப எனக்கு என்ன சந்தேகம்னா வருஷத்துக்கு பதினஞ்சாயிரம் இருபதாயிரம் லாபம் வர்ரதாவே இருக்கட்டும். இதைக் குடிச்சு உடம்ப கெடுத்துக்கறவனோட மருத்துவ செலவு எவ்வளவு? அவன் மரணத்தினாலயோ இல்ல உடலநலக் கேடாலயோ அவனுடைய குடும்பமும் அது வழியா இந்த சமூகமும் தேசமும் எவ்வளோ இழக்குது? அதோட அளவு என்ன? குடிச்சுட்டு வண்டி ஓட்டுறதுனால வர்ற விபத்துக்கள் எவ்வளவு? அதனால வர்ற உயிரிழப்புகள் எவ்வளவு? அவுங்களால வர்ற பொருளாதார பின்னடைவு எவ்வளவு? நிச்சயமா இதைச் சொல்லலாம் - குடி நமக்கு இருபதாயிரம் லாபம் தருதுன்னா அதவிட நாலு மடங்கு பொருளாதார ரீதியா நட்டம் தருது. இதையெல்லாம் அதிகாரிங்கதான் அரசுக்கு எடுத்துச் சொல்லணும்”
.
காந்தி இந்தியாவை கிராமங்களின் தொகுப்பாகவே தரிசித்தார். வேளாண்மையும் அதைச் சுற்றிய தன்னிறைவான வாழ்க்கையுமே இந்தியாவிற்கு உகந்தது என அவர் கண்டடைந்தார். ஒரு கிராமத்து சமூகத்தின் வேர்களை அழிப்பது எவை? தீண்டாமை, மது ஆகியவற்றைச் சொல்லலாம். ஆகவே காந்தி அவற்றுக்கு எதிராகப் போராடினார். இன்று விளைநிலங்கள் எல்லாம் கட்டாந்தரையாகி அவற்றில் வண்ண வண்ண கொடிகள் பறக்கின்றன. பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், கள்ளச் சந்தையில் சாராயம் விற்கப்படும், அண்டைய மாநிலங்களில் அமல்படுத்தாததால் பலனின்றி போகும் போன்ற வாதங்களை ஏற்க முடியவில்லை. உண்மையில் கடுமையாக கண்காணிக்க முயன்றால் இக்குற்றங்களை நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். படியிறங்கி தெரு முக்கிற்கு சென்றால் குடிக்கலாம் எனும் நிலை மாற வேண்டும். எங்கோ ஒரு மூலையில் திருட்டுத்தனமாக சென்றுதான் குடிக்க முடியும் எனும் நிலைமை வந்தாலே குடியர்களின் சதவிகிதம் பெரும் பங்கு குறையும். எளிதில் கைக்கெட்டிய தொலைவில் கிடைப்பதாலேயே இந்த எண்ணிக்கை நம்மை அச்சுறுத்துகிறது. 
.
எழுத்தாளர் ஜெயமோகனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது சில யோசனைகளைச் சொன்னார். அரைமணி ஒரு மணி என நேரம் குறைப்பதெல்லாம் பெரிய அளவில் பலனளிக்காது என்றார் அவர். பகல்பொழுது முழுவதுமாக அடைத்து வைத்தால் கொஞ்சம் நன்மை ஏற்படும். மேலும் குடிப்பதற்கு பார் அல்லது அத்தகைய எந்த வசதியும் அரசு செய்து தரக்கூடாது. பொது இடங்களிலோ மதுபானக் கடைகளிலோ குடிக்கக்கூடாது எனச் சட்டம் போட்டு கடுமையாகக் கண்காணித்தால் குடியர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும். காரணம், பெரும்பாலும் மனைவிக்கோ அல்லது பெற்றோருக்கோ  தெரியாமல்தான் பலரும் குடிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குடியடிமை நிலையை எட்டியிராத ஐம்பது சதவிகிதம் பேரையாவது மதுவிலக்கு மீட்டு எடுக்கும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.
.
மேடையில் அழைக்க இருந்ததால் உரையாடலை முடித்துக் கொண்டோம். அவருடைய காலில் விழுந்து விடைபெற்றேன். செயலூக்கம் கொண்ட மனிதர்களின் அண்மையைப் போல் நமக்கு செயலூக்கம் அளிப்பவை குறைவு. விருது விழாவில் பங்கு பெற்றதற்கு ஏதோ ஒரு வகையில் பலனிருந்தது. பற்றற்ற சமூகச் செயல்பாடுகளில் காந்தி இன்றும் ஒரு அகல் விளக்காக எங்கோ தன்னை ஒளியாக்கிக் கொண்டுதானிருக்கிறார். 
 .
- டாக்டர் சுனில் கருஷ்ணன்
 
 .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக