செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கல்விக் கருத்தரங்கில் திருமதி சங்கீதா ஸ்ரீராம் உரை

திருப்பூரில் ஆகஸ்ட் 15 அன்று அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தினவிழாவில், மாற்றுக்கல்வி குறித்த கருத்தரங்கில்,  திருமதி சங்கீதா ஸ்ரீராம்  நிகழ்த்திய உரை இது. இதனை அவரது இணையதளத்தில் இருந்து பெற்று இங்கு வெளியிடுகிறோம்.

***

மாற்றுக் கல்வி - திருப்பூர் உரை


அவையோருக்கு வணக்கம். இந்தக் கருத்தரங்கில் கல்வி குறித்த எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழைத்ததற்கு அறம் அறக்கட்டளைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன், எனக்கு மாற்றுக் கல்வியில் உள்ள ஈடுபாடு மற்றும் அதைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி, இவற்றைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். நான் எந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ பணியாற்றியதில்லை. கல்வியாளராகவோ, குழந்தை மனதத்துவ நிபுணராகவோ எந்த முறையான பயிற்சியோ அனுபவமோ எனக்கில்லை. கடந்த 13 ஆண்டுகளாக பல மாற்றுப் பள்ளிக்கூடங்களைச் சென்று பார்த்து அறிந்துகொண்ட அனுபவம்; என்னுடைய உள்ளுணர்வைக் கொண்டு நான் புரிந்து கொண்ட என்னுடைய கடந்த முப்பது ஆண்டுகால-சொந்த வாழ்க்கை அனுபவம் (இதில் பள்ளிக்குச் சென்ற அனுபவமும் அடங்கும்); ஜே. கிருஷ்ணமூர்த்தி, அரபிந்தோ, அன்னை, தாகூர், காந்தி, விவேகானந்தர், வினோபா, ஸ்டைனர், மாண்டெசரி, ஐன்ஸ்டைன், ஜான் ஹோல்ட் போன்ற அறிஞர்களின் ஞானிகளின் எழுத்துக்களைப் படித்திருப்பது; பள்ளிக்குச் செல்லாத எனது நான்கு வயது மகள் இயற்கையாகவே கற்பதைக் கூர்ந்து கவனித்து வரும் இந்த நான்காண்டு நேரடி அனுபவம்; இவை மட்டுமே எனக்கு இருக்கும் தகுதி.


நான் எனது மகளைக் கூட்டிக்கொண்டு பல இடங்களுக்கும் செல்வதால், ஒவ்வொரு நாளும் "இன்னிக்கு ஸ்கூல் லீவா பாப்பா?" என்று தொடங்கி பள்ளியில்லா கல்வியையப் பற்றிப் பல உரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலானோர் சொல்வது "நீங்க சொல்றது சரிதாங்க! இப்பல்லாம் பள்ளிக்கூடங்கள்ல பசங்கள பசங்களா இருக்கவே விடறதில்ல. முதுகுல இத்தன பெரிய மூட்ட; ஹோம் வர்க்; மதிப்பெண் வாங்கணும்கிற பிரஷர்; பரீட்சை சித்திரவதை."


இவர்களில் சிலர் கூடவே ஒரு ஆலோசனையையும் சொல்வார்கள். "ஆனா, இப்போ இதெல்லாம் இல்லாம சில பள்ளிக்கூடங்கள் வந்திருக்காமே! அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் பரீட்சையே இல்லையாம். விளையாட்டு மூலமாவே பாடங்கள சொல்லித் தராங்களாம்! இந்த மாதிரி எதாவது ஒரு பள்ளிக்கூடத்துல உங்கக் குழந்தய சேக்கலாமே?" என்பதுதான் அது. எனது இந்த உரை அவர்களுக்கான பதிலாக அமையும். மூலை முடுக்கிலெல்லாம் முளைத்திருக்கும், குழந்தைகளைக் கைதிகளைப் போல அடைத்து வைக்கும் பள்ளிகளைப் பற்றிய விமர்சனத்தை நான் முன்வைக்கப்போவதில்லை. அது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே. மாற்றுப் பள்ளிகள் என்று சொல்லிக்கொண்டு இயங்கிவரும் பள்ளிகளைப் பற்றிய எனது விமர்சனத்தையும், மாற்றுக் கல்வியும் கல்விக்கூடங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்னும் எனது கற்பனையையும் பற்றிப் பேசப் போகிறேன்.


**


கல்வியை முக்கியமாக இரண்டு கோணங்களில் பார்த்து புரிந்து கொள்ளலாம். வடிவம் - உள்ளடக்கம் (form- content) என்று பார்க்கலாம். அறிவு - திறம் (knowledge - skill) என்று பார்க்கலாம். இந்த இரண்டுமே, உடல்வளம், மனவளம், உள்ளநலம், ஆன்மீகம் என்கிற எல்லா பரிமாணங்களிலும் குழந்தையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.


முதலாவதாக, வடிவம் - உள்ளடக்கம் குறித்த புரிதலுக்கு வருவோம். பாடங்களை எப்படிச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது 'வடிவம்'. என்ன பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது 'உள்ளடக்கம்'. இன்றைய மாற்றுப் பள்ளிகளில் குழந்தைகளை சிரமப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், அன்புடன் விளையாட்டு மூலம் பாடங்களை சொல்லிக்கொடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் விளையாட்டு என்று சொல்வதையே நான் கேள்விக்குட்படுத்துகிறேன். தனியாகவோ கூட்டாகவோ குழந்தைகள் தாங்களாகவே விளையாட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள். இந்த சொந்தமான விளையாட்டுகள்தான் உண்மையிலேயே தங்கள் அறிவை முழுமையாக வளர்க்க உதவும் என்பது எனது கருத்து. கடந்த நான்காண்டுகளாக எனது மகள் தானாகவும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்தும் (பெரியவர்களின் எந்தவிதமான தலையீடுமின்றி) கற்பனை செய்து, உருவாக்கி, விளையாடுவதை மிகுந்த ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்து வருகிறேன். இதில் ஒரு விளையாட்டைப் பார்ப்போம்.


அவள் சட்டையைத் தொங்க விடும் ஹாங்கர்களை ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களாகக் கற்பனை செய்து கொள்வாள். அப்பா-அக்கா, அம்மா-பாப்பா என்று கைகோர்க்கச் செய்து (அதாவது ஹாங்கர்களை ஒன்றோடொன்று மாட்டச்செய்து) எங்கோ இழுத்துக்கொண்டு போவாள். அந்தப் புதிய இடத்தில் அவர்களைக் கொண்டு ஒரு புதிய கதை உருவாகும். இப்படி தினம் தினம் தன்னிச்சையாக உருவாகும் புதிய விளையாட்டுகளின் மூலம், புதிய விஷயங்களை explore செய்வாள். இதில் வீட்டில் கிடக்கும் தட்டு, கரண்டி, குச்சி, தொப்பி, தலையணை, புட்டிகள் அனைத்துமே வெவ்வேறு பொருட்களாகவும், மனிதர்களாகவும், மிருகங்களாகவும், மரங்களாகவும் மாறும். நம்மில் யாராவது இவ்வகையான கற்பனையைச் செய்ய முடியுமா? நாம் எப்படி இவர்களின் மனங்களை அறிந்து கொண்டு இவர்களுக்கான பொம்மைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்க முடியும் என்று எண்ணுகிறோம்?

எனது மகள் சில நாட்கள் ஒரு மாண்டெசரி பள்ளிக்குச் சென்றாள். அங்கு ஒரு நாள் அவள் மற்றும் வேறு இரண்டு குழந்தைகளுக்கு ஒரு கதையைப் படிக்குமாறு அந்த ஆசிரியை என்னைக் கேட்டுக் கொண்டாள். கதையைப் பாதிப் படித்ததும், அதிலுள்ள கவனமும் ஈடுபாடும் மூவருக்குமே குறையத் தொடங்கியது. கதையில் வரும் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறுமி ஒரு விளையாட்டுக்கான யோசனையை சொன்னாள். கதை கேட்பது இயல்பாகவே நின்று அது ஒரு விளையாட்டாக மாறியது. எல்லோரும் கைகோர்த்துக்கொண்டு அவர்கள் கூட்டாக உருவாக்கிய அந்தப் புதிய விளையாட்டுக்கு ஒவ்வொருவராக புதுப்புது விதிமுறைகளை அறிமுகம் செய்தார்கள். "நான் இந்தக் கையைத் தூக்கினால், எல்லோரும் தூக்க வேண்டும்" என்பது போல. சிக்கலான விதிமுறைகளைக் கொண்ட இந்த சுவாரசிமான விளையாட்டில் நாங்கள் நால்வரும் மூழ்கியிருக்கும் சமயத்தில் ஆசிரியையின் குரல் கேட்டது. "இன்னும் 5 நிமிஷத்துல இந்த விளையாட் முடிச்சுட்டு ஒரு learning activity செய்ய வெக்கறீங்களா?". மாண்டெசரி முறையில் தேர்ச்சி பெற்ற மதிக்கப்பெற்ற ஆசிரியை அவர்.

இன்றைய பெரியவர்களுக்கு இருக்கும் விளையாட்டைப் பற்றின புரிதல் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது! "விளையாடினது போதும். படி." என்று குழந்தைகளிடம் உத்தரவிடுவதை நாம் தினம் தினம் எத்தனை முறை கேட்கிறோம். விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு அர்த்தமற்ற செயல், குழந்தைகள் இளைப்பாறுவதற்காக உதவும் ஒன்று, என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில், குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தேவையானதை விளையாட்டு மட்டுமே பெரிய அளவில் செய்து கொடுக்கிறது. ஒவ்வொரு வயது குழந்தையும் தன் வயதுக்கேற்ற மன - மூளை வளர்ச்சிக்குத் தேவையான விளையாட்டைத் தானே உருவாக்கிக்கொள்ளும்.

இது எதைப் போன்றது என்றால், முளைக்கும் ஒரு தானியம், அதன் தொடக்க காலத்தில் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கியபடி உருவாக்கப்படுகின்றது. அது முளை விடும்போது, அந்த ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கப்பெறுமாறு உடைந்து அந்த முதல் இரண்டு இலைகளுக்குப் போய் சேருகின்றன. அதனால்தான் முளைகட்டிய தானியங்களும், பயறுகளும் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. விதையில் பொதிந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தீர்ந்துவிடும் சமயத்தில், அதன் சூழலிலிருந்து சூரிய ஒளி, மண்ணிலிருந்து மற்ற ஊட்டச்சத்துக்கள் ஆகியவை தேவையாகின்றன. மேலும், அந்த இளம் செடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் வெவ்வேறு கனிமங்கள் தேவைப்படுகின்றன. அதை உணர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளும் நுண்ணறிவுடன் தான் இந்தப் பிரபஞ்ச சக்தியால் அது உருவாக்கப்படுகின்றது. ஒரு சிறிய விதையே இத்தனை நுண்ணறிவும் செயல்திறனும் கொண்டுள்ளதென்றால், ஒரு குழந்தை எத்தனை நுண்ணறிவுடன் பிறக்கின்றது என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஆறு மாதக் குழந்தை கண்களை இரு கரங்களால் மூடிக்கொண்டு "காணுமே, இதோ" என்று திறந்து பார்க்கும் விளையாட்டை சளைக்காமல், அதே பூரிப்புடன் நூறு தடவை திரும்பத் திரும்ப விளையாடுவது, அதனுடைய மூளை-மன வளர்ச்சிக்குத் தேவையான ஒரு விளையாட்டு. நான்கு வயது குழந்தை, ஹாங்கர்களை மனிதர்களாக உருவகம் செய்வது, அவளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஒரு விளையாட்டு. மூளையில் புதிய உயிரணு இணைப்புகள் உருவாவதற்கு இந்த விளையாட்டுகள் உதவுகின்றன.

சொல்லிக் கொடுத்து விளையாட வைப்பது ஒரு தேவையற்ற, குழந்தைகளுடைய அறிவுத்திறனை மதிக்காத ஒன்றாகவே எனக்குப் படுகிறது. அதற்கும் மேல், அவர்கள் தாங்களாகவே உருவாக்கும் விளையாட்டுகளில் பெரியவர்கள் தலையிடும் போது, அது அவர்களின் கற்றலைத் தடைகூடச் செய்கிறது. ஆனால், அவர்களை வழிநடத்தச் செய்து அந்த விளையாட்டுகளில் கலந்துகொண்டால், நாமும் கற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு நம்முடன் இருக்கும் இணைப்பும் ஆழமாகும். இது எனது சொந்த அனுபவம்.

மரியா மாண்டெசரி குழந்தைகளின் மனங்களையும் அவர்களின் வளர்ச்சியையும் கூர்ந்து கவனித்து, அதுபற்றி அருமையாக ஆராய்ந்து எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்களிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அவர் உருவாக்கிய educational materials குறிப்பிட்ட கருத்துக்களை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் என்பது உண்மை. ஆனால், அவற்றைக் குழந்தைகள் தாமாக உருவாக்கும் விளையாட்டுடன் சேர்த்து உபயோகிக்கலாமே தவிர, அவற்றுக்கு மாற்றாக ஒருபோதும் அமைய முடியாது என்பது எனது கருத்து.

உயர் வகுப்பு மாணவர்களுக்குக் கூடச் சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் வார்த்தையாகவே தங்கிவிட்டுள்ளது. சில மாற்றுப் பள்ளிக்கூடங்களில் "உங்கள் சொந்த வரிகளில் சரியான விடையளிக்கலாம்." "ஆசிரியர் நடத்தும் பாடம் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக வெளியில் சென்று ஒரு நடை சென்று வரலாம். ஆனால், திரும்பி வந்து பாடங்களை கவனிக்க வேண்டும்." என்பன போன்ற சலுகைகளையெல்லாம் சுதந்திரம் என்னும் பெயரில் கொடுப்பார்களாம். "இந்தக் கேள்வியே எனக்குத் தவறாகத் தோன்றுகிறதே!" அல்லது "எனக்கு இந்த பாடத்தில் சுத்தமாக ஆர்வமே இல்லை! மாறாக, அதோ அங்கே இரும்புக் கதவை வெல்டிங் செய்துகொண்டிருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது! அது எப்படி இரண்டு இரும்புத் துண்டுகளை ஒன்றோடொன்று ஒட்ட வைக்கிறார்கள்?" என்பன போன்ற அவர்களது சொந்த எண்ணங்கள், விருப்பங்கள், கேள்விகளையெல்லாம் சகித்துக் கொள்ளும் பள்ளிக்கூடங்களை நான் ஒன்றிரண்டே கண்டிருக்கிறேன்! பத்து வயது வரை இவற்றுக்கு ஓரளவுக்கு இடம் கொடுத்தாலும் அதன் பிறகு இழுத்துப் பிடித்து ஓட்டப் பந்தயத்தில் ஓடவைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதட்டாமல், மிரட்டாமல்  செல்லமாகப் பேசியே! உயர்ந்த லட்சியங்களுடன் துவங்கும் பள்ளிகள்கூட "என்ன செய்வது? பெற்றோர்கள் இதைத் தானே கேட்கிறார்கள்!' என்று கூறி நுகர்வோரின் தேவைக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, பாடங்களின் உள்ளடக்கத்தில் கூட அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. மனப்பாடம் செய்ய வேண்டிய தகவல்களைக் குறைத்துக்கொண்டு, புரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களை அதிகரித்தாலும், அடிப்படையில் அவை பெரும்பாலும் பிளவுண்ட நவீன சிந்தனா முறையைத்தான் திணிக்கிறது. மாறாக, முழுமை நோக்குடைய இந்திய சிந்தனையை 'பழமையானது, பிற்போக்கானது, அறிவியல் பூர்வமற்றது' என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லிக் கொடுக்கிறது. அறிவியல் என்றால் பிளவுண்ட நவீன அறிவியல்; பொருளியல் என்றாலே மையத்தை நோக்கி பொருளைக் குவிக்கும் நவீன பொருளியல் என்கிறது. மனிதனைக் கூட, அணுக்கள் மற்றும் ரசாயனங்களாலான இயங்கு உறுப்புகளைக் கொண்ட உடலாகக் குறைத்துவிட்டு, அதை பாகம் பாகமாகப் பிளந்து பார்க்கும் நவீன மருத்துவத்தை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறது.

சிறப்புத்துறைக் கல்வி, வாழ்க்கையை நுணுக்கமாக அறிந்து பிரச்சினைகளைக் தீர்க்க உதவும் என்று சொல்லிக்கொடுக்கிறது. நவீன தொழில்நுட்பமயமான சமுதாயம், கல்வியையும் பாடசாலைகளையும் பிரச்சாரக் கூடங்களாக முழுவதுமாக வெற்றிகரமாக மாற்றிவிட்டிருக்கின்றது. இதைப் பற்றி எனது 'பசுமைப் புரட்சியின் கதை' புத்தகத்தில் குறிப்பிட்ட உதாரணங்களுடன் விரிவாகவே எழுதியிருக்கிறேன். இந்த வகைக் கல்வி, மனித மனங்களில் இரைச்சலைத் தான் அதிகமாக்குகின்றது!

*

இரண்டாவதாக, அறிவு - செயல்திறன் குறித்த புரிதலுக்கு வருவோம். இன்று பள்ளிக்கூடங்கள் சிறப்பாகச் செய்வதெல்லாம் முதலாளித்துவ தொழிற்சாலைகளில் வெவ்வேறு மட்டங்களுக்கான தொழில் வல்லுனர்களையும் தொழிலாளர்களையும் தரம் பிரித்துப் பயிற்றுவித்துக் கொடுக்கும் வேலையைத்தான். இந்த வேலை 'ப்ரி-கேஜி' நேர்முகத் தேர்விலேயே தொடங்கிவிடுகிறது. இப்படி தொழில்மயமான சமுதாயத்துக்குத் தேவையான செயல்திறனை வளர்க்கும் பயிற்சியைத்தான் நாம் 'கல்வி' என்று சொல்லிக்கொள்கிறோம். இந்தப் பயிற்சிக்குத் தேவையான தகவல்களைக் கேள்வி கேட்காமல் மனப்பாடம் செய்து கொண்டு பரீட்சையில் எழுதினால் அவர்களைக் கற்றவர்கள் (educated) என்று அழைக்கிறோம். ஆனால், உண்மையில் கற்றல் என்பது எவ்வாறு நிகழ்கிறது?

ஒருவர் அதுவரை அறிந்திராத ஒன்றைப் புதிதாக அறிவதை, அதாவது ஒரு புதிய அறிவை அடைவதைக் கற்றல் எனலாம். அந்தப் புதிய அறிவு அவரவரின் சுயமானக் கற்றலின் மூலம்தான் வளரும். சுயமாகக் கற்பதற்கு அவரவர் முதலில் தமது சுயமான கேள்விகளைக் கேட்க வேண்டும். அப்படி சுயமாகக் கேட்ட கேள்விகளுக்கு, சுயமுயற்சி கொண்டு அனுபவ பூர்வமாகவும், உள்ளுணர்வின் வழிகாட்டுதலாலும் சுயமான பதில்களையும் பாதைகளையும் கண்டறிய வேண்டும். அந்தப் பதில்கள் மற்றவர்களைப் பொறுத்தவரையில் தவறானதாக இருந்தாலும், அதை உண்ர்ந்து ஏற்றுத் திருத்திக் கொள்வதும் சுயமுயற்சியாலேயே நடைபெற வேண்டும். நமது உபநிடதங்கள் வாயிலாக பண்டைய பாரதத்தில் இருந்த கல்வி முறை இப்படிப்பட்டதாகத் தான் இருந்திருந்தது என்று தெரியவருகிறது.

ஆனால், மாற்றுப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் என்ன நடக்கிறது? கற்றல் என்கிற பெயரில் தகவல்களை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள். மாற்றுப் பள்ளிகளில் "தங்கள் சொந்த வரிகளில் ஓரளவுக்கு தங்கள் சொந்த பதில்களை" எழுத ஊக்குவிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்! ஆனால், யாருடைய கேள்விகளையோ அவர்கள் மேல் திணிக்கும் வரை, இந்தக் கற்றல் எப்படி உண்மையான கற்றலாக இருக்க முடியும்? ஆங்கிலமும் கணிதமும் வாரத்தில் எல்லா நாட்களும் பயில வேண்டும். நடனம், கைவேலை, விளையாட்டு, சமையல், தோட்டவேலை போன்றவற்றை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும், என்பது போன்ற முடிவுகளெல்லாம் குழந்தைகள் சார்பாக எடுப்பதற்கு நமக்கு இருக்கும் தகுதி என்ன? நமது இன்றைய தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில், அது "வெற்றி" என்று வரையறை செய்வதை அடையத் தேவையான "ஆங்கிலம், கணிதம், நவீன அறிவியல்" அகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை நான் எல்லா மாற்றுப்பள்ளிகளிலும் பார்க்கிறேன்.

'பசுமைப் புரட்சியின் கதை' நூலைப் படித்த பலர் "பாட நூல்களில் இன்று சொல்லிக்கொடுக்கப்படும் தகவல்கள் எல்லாம் தவறாக இருக்கிறதென்றால், சரியான தகவல்களைக் கொண்ட ஒரு புதிய பாடதிட்டத்தை நீங்கள் தயாரிக்கலாமே?" என்று யோசனை சொல்கிறார்கள். எத்தனை சரியான பதில்களாக இருந்தாலும்கூட, கேள்விகள் அவர்கள் மனங்களில் உதிக்காவிட்டால், அவையும் "மனப்பாடம் செய்வதற்கான தகவல்களாக" மாறிவிடுகின்றன. சுயமான கேள்விகள் மற்றும் ஆர்வத்திலிருந்து தொடங்கும் கல்வி மட்டுமே உண்மையானது; நிலையானது.

மனிதர்களுக்கு, குறிப்பாக இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, பல வகையான நுண்ணறிவுகள் இருப்பதாக வகைப்படுத்தலாம். அவை

1. verbal / linguistic intelligence - மொழி / சொல் சார்ந்த நுண்ணறிவு
2. logical / mathematical intelligence - தர்க்கம் / கணிதம் சார்ந்த நுண்ணறிவு
3. kinesthetic intelligence - உடல்தசை சார்ந்த நுண்ணறிவு. இவர்கள் நடனம் போன்று உடலை உபயோகிக்கும் கலைகளிலும் விளையாட்டுகளிலும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்
4. musical intelligence - இசை சார்ந்த நுண்ணறிவு
5. visual / spatial intelligence - பார்வை / வெளி சார்ந்த நுண்ணறிவு. இவர்கள் வரைகலையிலும், சிற்பக்கலையிலும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
6. intra-personal intelligence - மற்றவர்களைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கான நுண்ணறிவு
7. interpersonal intelligence - சுய உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கான நுண்ணறிவு

ஒவ்வொரு குழந்தையும் இந்த ஏழில் குறைந்த பட்சம் ஒன்றிலாவது மேதமையை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு குழந்தையும் தேடும் அறிவும், வளர்த்துக்கொள்ள நினைக்கும் செயல்திறன்களும், அவற்றின் முறைகளும் அதனதன் நுண்ணறிவு வகைக்கேற்ப மாறுபட்டதாகத் தானே இருக்கும்? அனைவருக்குமான ஒரே மாதிரியான பாடத்தை, ஒரே மாதிரியான முறையில் நடத்துவது எவ்வாறு சரியாக அமையும்?

மேலும் கற்றல் என்பது மூளையைக் கொண்டு நடக்கிறது என்ற அனுமானத்தைக் கொண்டு செயல்படுகின்றன இன்றைய பள்ளிகள். ஆனால், உண்மையான முழுமையான கற்றல் என்பது மூளையைத் தவிர, ஐம்புலன்களையும் உள்ளுணர்வையும் கொண்டு நடக்கிறது. ஒரு முழுமையான அனுபவத்தைக் கொண்டு பாடங்களை உள்வாங்கி தன்வயமாக்குவதுதான் முழுமையான கற்றல். நெல் பயிரை விளைவிப்பவர் அதைப் பற்றி எவ்வாறு அறிவார்? அதன் இலைகள் நிறம் மாறுவதைக் கண்டும், அது விளையும் நிலத்தை முகர்ந்து பார்த்தும், அந்த அரிசியை ஏன் அது விளையும் மண்ணையேகூடச் சுவைத்துப் பார்த்தும், அந்தப் பயிரைத் தொட்டுப் பார்த்தும், அந்தச் செடிகள் காற்றில் ஆடி அசையும் போது உண்டாகும் ஒலியைக் கேட்டும், அதன் அழகைக் கண்டு ரசித்தும்,விதைத்து முதல் இலை வந்ததும் ஆனந்தித்தும், உள்ளுணர்வு கொண்டு அந்த நெல் பயிரின் ஆரோக்கியத்தை அறிந்தும், அதாவது அந்த அனுபவத்தை முழுமையாக உள்வாங்கியே அவர் கற்கிறார். இந்த முழுமையான அனுபவத்தால் கற்பவருக்கும் கற்பிக்கப்படும் பொருளுக்கும் இருக்கும் இடைவெளி மறைந்து, ஆனந்தமயமான கற்றல் ஒன்று மட்டுமே நிற்கிறது.

*

எல்லா விஷயங்களையும் ஒவ்வொரு குழந்தையும், சுயமாகக் கேள்வி கேட்டு தானாகவே கற்றுக்கொள்ள வேண்டுமா? ஏற்கனவே நன்கறிந்த விஷயங்களை முதிர்ந்த தலைமுறையினர் இளைய தலைமுறையினருக்குக் கைமாற்றிக்கொடுப்பதற்கு இந்தக் கல்வி முறையில் இடமில்லையா என்கிற கேள்வி எழலாம். அதை ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து, கேள்விக்கு உட்படுத்தி அந்த உண்மையை உணர்ந்தால் மட்டுமே அதைக் கற்றல் எனமுடியும்; அந்த அறிவு தங்களுடையதாக முடியும். அதுவரையில், எத்தனை ஆழ்ந்த உண்மையாக இருந்தாலும், அது மூளையில் தேக்கி வைத்திருக்கும் ஒரு தகவல் மட்டுமே. இந்த செயல்முறையில் சில விஷயங்கள் சரியென்று  தோன்றவில்லை என்றால்,  அவற்றைத் தற்காலிகமாக நிராகரிப்பதற்கும் கூட இடமுண்டு. மற்றவர்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும்போதுதான் பல குழப்பங்கள் எழுகின்றன. இதைத் லெபனீய தத்துவவாதி கலில் கிப்ரான் எத்தனை அழகாக விளக்கியுள்ளார்!

"உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர, உங்கள் சிந்தனையைவழங்காதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்த சிந்தனையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தேகங்களுக்கு ஒரு இல்லத்தை வழங்கலாம். அவர்கள் ஆன்மாக்களுக்கல்ல. ஏனெனில் அவர்களின் ஆன்மா, கற்பனையிலும் பிரவேசிக்க முடியாத நாளை எனும் வீட்டில் வசிக்கிறது. நீங்கள் அவர்களைப் போன்றிருக்க முயற்சிக்கலாம். ஆனால், உங்களைப் போன்று அவர்களை ஆக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை என்பது பின்னோக்கிச் செல்வதுமல்ல. நேற்றைய தினத்தோடு தேங்கிவிடுவதும் அல்ல."

*

எனது விமர்சனத்தை இதோடு நிறுத்திக்கொண்டு, எனது உரையின் இரண்டாம் பாகத்துக்குச் செல்கிறேன். நான் முன்வைக்கும் மாற்றுக் கல்விமுறை எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஒரு ஜீவனுள் மலரும் ஆன்மாவில் ஏற்கனவே உட்பொதிந்துள்ள அறிவையன்றி, வேறு எதையும் அதன் மனதிற்குக் கற்பிக்க முடியாது. கல்வியெல்லாம் உள்ளிருப்பதை வெளிப்படுத்துவதே ஆகும். ஆவதெல்லாம் மலர்வதே ஆகும். இந்த உண்மையை, நான் முன்பு பட்டியலிட்ட எல்லா ஞானிகளும், கல்விச் சிந்தனையாளர்களும் சொல்லிச் சென்றுள்ளனர். குழந்தைகளின் சுயமலர்தலுக்காக என்ன செய்ய வேண்டும் என்கிற இந்தத் தேடலில் உங்கள் அனைவரைப் போலவே நானும் பல காலம் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் கண்டிப்பாக நான் இதுவரை பார்த்த எந்தப் பள்ளியிலுமே இது நடக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. இந்தக் காரணத்தால் தான் நான் எனது மகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக இல்லை.

மாணவர்களை மூன்று பருவங்களாகப் பிரித்தால், மாற்றுக் கல்வியைப் பற்றிய புரிதலுக்கு வசதியாக இருக்கும். 8 வயது வரை 'இளம் குழந்தைப் பருவம். 8-14 வயது வரை 'வளர்ந்த குழந்தைப் பருவம். 15-20 வயது வரை 'வாலிபப் பருவம்.

நமது இந்திய மரபில், எட்டு வயதாகும் குழந்தைதான் முறைப்படி பயிலுவதற்காக ஆசிரியரிடம் சேர்க்கப்படும். அதுவரையில் அதன் சுயமலர்தலுக்காகத் தேவையானதெல்லாம் அது வளரும்
சூழலிலேயே கிடைக்கப்பெற வேண்டும். அவர்கள் தங்களது பெற்றோருடன் இருப்பதே அவர்களுக்குச் சிறந்தது.

இளம் குழந்தைகளின் கற்றலுக்குத் தேவையான அதிமுக்கியமான ஒன்று பயமற்ற சுதந்திரமான மனம். அதை அடைவதற்கு முக்கியமாகத் தேவை உடல் மற்றும் மனரீதியான 'பாதுகாப்பு'. அவர்கள் முழுமையாக நம்பும் அவர்களின் பெற்றோர்கள் அல்லது அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பிற பெரியோர்கள், அன்பும் அரவணைப்பும் மரியாதையுமே அவர்களை வெளியுலகை நாடியறிய உதவும். இந்த அடிப்படை பாதுகாப்பு இல்லாத சூழல்களில் குழந்தைகள் தங்கள் உயிர்சக்தி அனைத்தையும் தற்காப்புகாகவே செலவிட்டுவிடுவார்கள். ஆழமான மனவலி, வெளியுலகின்மேல் இருக்கும் ஆர்வத்தைக் குறைத்துவிடும்; இயல்பான உள்ளுணர்வை மூடி மறைத்து விடும். எந்தத் தருணத்திலும், குழந்தை பாதுகாப்பாக உணரும் பெரியவர் யாராவதுடன் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தையின் எந்த உணர்ச்சியையும் உள்ளச் சமநிலையுடன், அமைதியாக ஏற்றுக்கொண்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை அழுதால் "நல்ல பாப்பான்னா அழ மாட்டாளே!" என்றெல்லாம் சொல்லாமல், அதன் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு இடம் கொடுத்தாலே, அதன் கற்றல் திறம் மேலும் வளரும்.

குழந்தைகளை தாங்களாக இருக்கவிட வேண்டும். அவர்கள் தாங்களாகவே விளையாட்டுகளை உருவாக்கவிட வேண்டும். தேவையற்ற பொம்மைகளையும், ஒலியெழுப்பும் பாட்டரி கருவிகளையும் அவர்களிடன் கொடுக்காமல், திறந்த வெளிகளிலும் அவர்கள் பாதுகாப்பாக உணரும் மற்ற பெரியவர்களிடமும் குழந்தைகளிடமும் அவர்களை அடிக்கடி உரையாடவிட வேண்டும். தாங்களாகவே என்ன கேள்வி கேட்கிறார்களோ, அவற்றுக்கு உண்மையான பதில்களை நமக்குத் தெரிந்தவரை கொடுக்கலாம்; இது நமக்குத் தெரிந்த வரைக்கும்தான் உண்மை என்றும், அவர்களை சுயமாகச் சிந்திக்கவும் தூண்டலாம்.

'ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு கிராமமே தேவை' என்று ஒரு ஆப்பிரிக்கப் பழமொழி சொல்கிறது. ஒரு குழந்தையின் பல்வேறு பரிமாணங்கள் ஒருங்கிணைந்து வளர்ச்சியடைய, பல வகையான வாழ்க்கைச் சூழல்களுக்கு அவர்களை அறிமுகம் செய்ய வேண்டும். பல வகையான பொது இடங்கள், பல விதமாக வாழும் ஏழை பணக்கர நடுத்தர மக்களின் குடும்பங்கள், கட்டுப்பாடுள்ள மற்றும் சுதந்திரமான இடங்கள், கிராம மற்றும் நகர்ப்புறங்கள், கடைகள், பண்ணைகள், பல தொழில்களை மேற்கொள்ளும் இடங்கள், இப்படி பல வகையான சூழல்களுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போக வேண்டும். இவ்வாறு செய்யும் போது குழந்தைகளின் மனங்களில் பலவகையான கேள்விகள் எழும்பும். "என்ன? ஏன்? எப்படி? யார்? எப்போது?' என்று சதா கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் கேள்விகளில் தொடங்கிதான் உண்மையான கற்றல் நிகழும். நான் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கும் மேலாக எனது மகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே சென்றுவிடுகின்றது. ஆனால், அந்த அனுபவத்தை முழுமையாக அரவணைக்கும்போது அது அத்தனை சுவாரசியமாக ஆகிவிடுகிறது. சில ஆழமான அடிப்படைக் கேள்விகளைக் கேட்கும்போது சிந்திக்கவைக்கிறது.

பார்த்துக்கொண்டு கேள்வி கேட்பது மட்டுமல்ல. குழந்தைகளுக்குப் பெரியவர்களின் உலகமே மிகவும் சுவாரசியமானது. அம்மாவைப் போலவும் அப்பாவைப் போலவும் சமயலறையிலும் தோட்டத்திலும் வேலை செய்வதுதான் பிடிக்கும். 'அம்மா, நானும் சப்பாத்தி செய்யட்டுமா? கத்திரிக்காய் வெட்டிக்கொடுக்கட்டுமா?' என்பதை எத்தனை முறை கேட்டிருப்போம். பொறுமையுடன் அன்புடனும் அவர்களை நமது உலகுக்கு வரவேற்று இணைத்துக்கொண்டால் அவர்களின் கற்றலில் பாதியும் அங்கே நடைபெறுகிறது.

ஏற்கனவே பார்த்ததுபோல, தாங்களாகவே உருவாக்கும் விளையாட்டுகளில் அவர்களுடைய முக்கியமான கற்றல் நிகழ்கிறது. விளையாட்டைப் பற்றி சொல்வதற்கு இன்னும் எத்தனையோ இருக்கிறது!

இந்தப் பருவத்தில் குழந்தைகளை எழுதப்படிக்கக் கற்றுக் கொடுக்காமலிருப்பது  மிகவும் சிறந்தது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது வேறு விஷயம். இந்தப் பருவத்தில், குழந்தைகள் ஐம்புலன்களைக் கொண்டு தங்களது வெளியுலகை அனுபவப்பூர்வமாக உணர்வதிலேயே நாட்டம் கொண்டிருப்பார்கள்.

இயற்கைச் சூழலுடன் தொடர்பு வேண்டும். பண்ணைகள், காடுகள், நீர்நிலைகள் போன்று எதுவாக இருந்தாலும் சரி, அங்கிருந்து அதன் ஆன்மாவிற்குக் கிடைக்கும் இணைப்பும் ஊட்டமும் அத்தியாவசியமான ஒன்று.

கடைசியில் அதி முக்கியமான ஒன்று, 'அமைதிக்கான சுதந்திரம்'. குழந்தைகள் தேவைப்பட்டால் மணிக்கணக்கில் ஒன்றும் செய்யாமல், பேசாமல் சும்மா இருத்தலுக்கு இடம் கொடுக்க வேண்டும். இந்தத் தருணங்களில்தான் அவர்கள் மனங்களில் புதிய கேள்விகள் பிறக்கின்றன. கிடைத்த தகவல்களை உள்ளுணர்வைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, தனக்கு சரியாகப் படுகிறதா அல்லது தவறாகப் படுகிறதா என்ற அறிதல் கிடைக்கிறது. அமைதியாக இரு மணி நேரம் கழித்த பின்பு என் மகள் பல ஆழமான, அவளை மிகவும் பாதிக்கும் கேள்விகளைக் கேட்பாள்.

இன்றைய சூழலில், குறிப்பாகத் தொழிலாளர் குடும்பங்களில், குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்போ, மன வாள்ர்ச்சிக்கு சரியான சூழலோ இல்லாமல் இருப்பது உண்மைதான். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அப்பாவிடமிருந்தும், தனது வாழ்க்கையின் மேல் உள்ள வெறுப்பை வெளிப்படுத்த தங்களை அடிக்கும் அம்மாவிடமிருந்துமே இந்தக் குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தேவையான ஒன்றாக இருக்கிறது! பள்ளிக்கூடங்களை சரணாலயங்களாக ஆக்கி, அவர்களை அன்புடன் அரவணைத்துப் பாதுகாப்பான சூழலைக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் ஆசிரியர்கள்.

*

இளம் குழந்தைகளுக்கு இவையனைத்தும் ஓரளவு கிடைத்துவிட்டாலே, ஒரு அருமையான அடித்தளம் அமைந்துவிடுகிறது. வெளியுலகைப் பற்றித் தாங்களாகவே ஒரு புரிதலுக்கு வருகிறார்கள். அதில் தங்களின் இடம் என்ன, தங்களுக்கு அதனுடனான உறவென்ன என்பதெல்லாம் ஓரளவுக்குத் தெளிவாகிறது. இந்த பாதுகாப்பான, திடமான தளத்தில் இருந்துகொண்டு குழந்தை அவளுடைய அறிவாற்றலை மேலும் விரிவாக்கத் தயார்படுத்திக் கொள்கிறாள்.

இளம் பருவத்தில் சுதந்திரமாக வளர்ந்து, தங்களது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தயக்கமின்றி வெளிப்படுத்தப் பழகும் குழந்தை, ஏழு அல்லது எட்டு வயதாகும்போது, வெளியுலகைப் பற்றிய சிக்கலான விஷயங்களை ஆராயத் தொடங்குகிறது. ஆரோக்கியமாக வளர்ந்த எட்டு வயதான குழந்தை, முறையான பயிற்சிகளுக்குத் தயாராகிறது. இந்த சமயத்தில் என்ன பயிற்றுவிப்பது? மனப்பாடம் செய்வதற்கான தகவல்களைப் புகட்டாமல், அவர்களின் ஆற்றல்களை வளர்க்கும் பாடங்களைக் கையாளலாம். கற்பனைத்திறன், படைப்புத்திறன், சிந்திக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் வலுப்படுத்தும் செயற்பாடுகளையும் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே பார்த்த multiple-intelligences (பன்முக அறிவு) பற்றிய புரிதலுடன் இந்தக் குழந்தைகளை அணுகினால், ஒவ்வொரு குழந்தையிலும் ஒரு மேதையை உருவாக்கலாம். இசை-நுண்ணறிவு கொண்ட ஒரு குழந்தை மற்ற துறைகளில் ஆர்வமற்றவள் என்பது பொருளல்ல. அவள் உலகை உணர்வது பெரும்பாலும் இசையின் மூலமாக என்பது பொருள். ஒரு இசைக் கருவியை எளிதாக வாசிக்கக் கற்றுக்கொள்ளூம் குழந்தை, அதன் ஏழு சுரங்களுக்குமான இடைவெளி, உறவுகள் ஆகியவற்றைப் பற்றிக் கற்கும் போது கணிதம் கற்கிறாள்; அதன் ஒலி எவ்வாறு எழும்புகிறது, அது என்ன உலோகத்தைக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது என்று ஆராயும் போது அறிவியல் கற்கிறாள்; கண்ணை மூடிக்கொண்டு அந்தக் கருவியை வாசிக்கும்போது, உடலைக் கொண்டு உணரக் கற்கிறாள்; வெவ்வேறு மொழிகளில் பாடல்களைக் கற்கும்போது சொல்திறன் வளர்கிறது; தனியாக வாசிக்கும்போது தனது உணர்வுகளுடன் இணைகிறாள்; மற்றவர்களுடன் சேர்ந்திசை உண்டாக்கும் போது interpersonal intelligence வளர்கிறது. இப்படி எந்த வகையான நுண்ணறிவைக் கொண்டும், அதற்கே தனித்தன்மை வாய்ந்த கல்விமுறையை, நம்மிடமிருந்து சிறிதளவு உதவி மட்டுமே பெற்று அவர்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்த இரண்டு பருவங்களுக்குமான பள்ளிக்கூடத்தில் என்னவெல்லாம் இருக்கும்?

- எந்தக் குழந்தையும் ஆசிரியரும் எப்போது வேண்டுமானாலும் சென்று வசதியாக அமர்வதற்கான ஒரு அமைதி அறை;
- குழந்தைகள் ஆசிரியர்களிடம் ஏதேனும் பாடங்களைக் கற்க விரும்பினால் அவர்கள் அமர்ந்து பகிர்வதற்கான கலந்தாய்வு அறை;
- நூலகம்;
- கைவினைப் பொருட்களைச் செய்யும் பட்டறைகள்
- பாண்டப் பட்டறை, தச்சுப் பட்டறைகள்
- நீச்சல் குளம்
- விளையாட்டுத் திடல்கள்
- உணவு, மூலிகை, பூந்தோட்டங்கள்
- அறிவியல் பரிசோதனைகளைச் செய்து பார்ப்பதற்கு ஆய்வுக்கூடங்கள்
- மாணவர்களின் படைப்புக்களுக்கான கண்காட்சியகம்
- இசை, நாடகம், நாட்டியங்களுக்கு ஏற்ற அறைகள்
- கலை அரங்கங்கள்
- யோகாசனம் பயிற்சி அறை
- சொற்பொழிவுக் கூடம்
- பொருட்களையும் கருவிகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கிடங்குகள்.

இத்தனையும் ஒரு குழந்தைக்கு அறிமுகமானால், அது குழம்பிவிடாதா? எதில் கவனம் செலுத்துவது என்று அதற்கு எப்படித் தெரியும்? என்றுப் பலரும் கேட்கின்றனர். இந்தக் கேள்விக்கு விடை, நாம் முன்பே பார்த்த உதாரணத்தில் பொதிந்திருக்கிறது. ஒரு விதை, அது மாமரமாக வளரவேண்டுமா, அல்லது வேப்ப மரமாக வளரவேண்டுமா என்னும் நுண்ணறிவைக் கொண்டுள்ளது. ஒரே மாதிரி இருக்கும் கீரை விதைகூட, அது அறு கீரையாக வளர வேண்டுமா, அல்லது முளைக்கீரையாக வளரவேண்டுமா என்னும் நுண்ணறிவுடன்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு செடி வளர்வதற்குத் தேவையான நல்ல வளமான மண்ணைப் போலவே ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற சூழலை அதற்கு உருவாக்கிக்கொடுத்தாலே, அதன் நுண்ணறிவு சிறப்பாக இயங்கத் தொடங்கிவிடும். இதற்கு நமக்குத் தேவையெல்லாம் உயிர்ச்சக்தியின் மீது உணர்ந்த, ஆழ்ந்த நம்பிக்கை மட்டுமே.

கீதையில் சொல்லியிருப்பது போல, ஆரோக்கியமாக வளர்ந்த ஒவ்வொரு குழந்தையும் அதன் சுயதர்மத்தை இனம்காணக் கற்றுக்கொள்கிறது. சுயதர்மம் என்பது, ஒவ்வொரு ஆன்மாவும், வெளியுலகில் அதன் பங்கேற்பின் மூலம் தன்னை உணர்வதற்காக அமைத்துக் கொள்ளும் தனித்தன்மைவாய்ந்த பாதை. அனுபவ அறிவு விரிவடைய விரிவடைய கூடவே சுயதர்மமும் மாறிக்கொண்டே போகும். ஆனால், அந்த பாதையும் மாற்றமும் அந்த ஆன்மாவினுடையதாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, வெளியிலிருந்து எந்த ஊக்குவிப்பும் இல்லாமல், தனக்குள்ளிருந்தே கற்றலின் மீதான ஆவல் அணையாத விளக்காய் சுடர் விட்டு எரிகிறது.

*

இவற்றுக்குப் பின், வாலிபப் பருவத்தில், தேர்ந்தெடுத்த ஒரு அல்லது சில துறைகளில் சிறப்பறிவு / தேர்ச்சி பெறுவதற்காகத் தயாராகிறார்கள். இந்தப் பருவ மாணவர்களுக்காக நாம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும். ஒன்று, அறிவியல், கலை, இலக்கியம் போன்ற வெவ்வேறு துறைகளில் இந்திய மற்றும் பிற கலாச்சாரங்களிலிருந்தும் சேகரித்த சிறந்த செவ்வியல் படைப்புகளை அவர்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்ய வேண்டும். ஆயுர்வேதம், உபநிடதம், நாட்டியசாஸ்திரம், காளிதாசர், கம்பர், வியாசர், வால்மிகி ஆகியோரின் படைப்புகள் என்று அத்தனை பொக்கிஷங்களையும் தூசு தட்டி மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இவற்றில் தேர்ந்த அறிஞர்களையும் இவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்களுக்கென வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம். அவை மாணவர்களின் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு முழுமையான உலக அனுபவமும், உலக அறிவும் அடித்தளமாகக் கொண்ட இந்த வாலிபர்கள், இத்தகைய சிறப்பறிவை நோக்கிப் பயணித்தாலும், அவர்களின் நுண்ணறிவு ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் செயல்படும்.

காந்தியடிகள் முக்கியத்துவம் அளித்த சுயதேவை பூர்த்தி என்ற கொள்கையை வாலிபப் பருவத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். உபயோகமுள்ள ஏதாவது ஒரு தொழிலிலாவது தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் பருவத்திற்குள் ஒவ்வொரு மாணவரும் உடல், மனம், உள்ளம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு பூரண மனிதராக உருவாக முடியும்.

இந்த முறையில் தேர்வுகளுக்கு இடம் உண்டா? இப்படிப்பட்ட ஒரு கல்விக்குச் சான்றிதழ் எப்படி வழங்குவது? தேர்வுகள் வைப்பதற்கு நாம் பொதுவாக கொடுக்கும் காரணம், "மாணவர்களின் முன்னேற்றத்தை அறிவதற்கு" என்பதுதான். நாம் செய்யும் தவறுகளாலும், நாம் சந்திக்கும் தோல்விகளாலும் பல முக்கியமான பாடங்களைக் கற்கிறோம் என்னும் கருத்தில் அனேகமாக இங்கு அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் உடன்பாடிருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், இன்றைய பள்ளிகளில் தேர்வுகளின் முடிவுகள் வரும் வரைக்கும் வியர்த்து, அடி வயறு கலங்கிப் போவதற்குக் காரணமென்ன? தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே கற்றவர்கள் எனக் கொள்ளலாம் என்றும், தோல்வியடைந்தால் அது அந்த மாணவன் மேல் குத்தப்படும், அவன் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல வேண்டிய ஒரு முத்திரையாகவே உள்ளது. தேர்வுகள் கற்றலில் இருக்கும் ஆர்வத்தையும் ஆனந்தத்தையும் உறிஞ்சி எடுத்தே விடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தேர்வுகளைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? "தேர்வுகளுக்காக அத்தனை விஷயங்களையும் மூளையில் திணித்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனது கடைசி பள்ளித் தேர்வு முடிந்ததும் குறைந்தது அடுத்த ஓராண்டு காலத்திற்கு, எந்த அறிவியல் கருத்தைப் பற்றியும் சிந்திப்பதற்கோ படிப்பதற்கோ ஒரு துளி கூட ஆர்வமில்லாமல் போனது!"

தேர்வுகள் உண்மையில் மாணவர்களை தொழில்மயமாக்கப்பட்ட சமுதாயத்தில் பங்கேற்பதற்காகத் தரம் பிரிப்பதற்காகவே நடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட முத்திரைகளுக்கும் தரம்-பிரித்தலுக்கும் மாற்றுக் கல்வியில் இடமில்லை. மாணவர்களுடன் அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுயமுன்னேற்றத்தில் அவர்களுடைய சுய-அளவீட்டுத் திறனை வளர்த்து, அவர்கள் புதிய சிக்கல்களை எதிர்கொண்டு மேன்மேலும் முன்னேறுவதை ஊக்குவிக்க வேண்டும். தங்களது உள்ளுணர்வை இழக்காத, தோல்வியைக் கண்டு பயப்படாத மாணவர்கள், தங்களுடைய முன்னேற்றத்தைப் பற்றிய பின்னூட்டம் மரியாதையுடன் கொடுக்கப்படும்போது, அதை மகிழ்ச்சியோடு ஏற்றுச் செயல்படுவார்கள்.

சான்றிதழ்கள் உண்மையில் எங்கு அவசியமாகிறது? ஒரு கட்டிடம் கட்டும் பொறுப்பை ஒரு கட்டடப் பொறியாளருக்குக் கொடுப்பதற்கு முன், அவர் அந்தத் துறையில் முறையான பயிற்சி பெற்றுத் தேர்ந்துள்ளாரா என்பது தெரிவது அவசியமாகிறது. அதற்கென, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தேர்வு செயற்குழு அமைத்து, தேர்வுகளின் மூலம் சான்றிதழ்கள் வழங்கும் அமைப்பை உருவாக்கலாம். இந்தத் தேர்வுகள் வெறும் மூளைத் திறனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்ட ஒருங்கிணைந்த முறையில் அமைய வேண்டும். இந்தத் தேர்வுகளில் அமர்வதற்கு எந்த விதமான சான்றிதழ்களோ, பள்ளிக்கூட அனுபவமோ அவசியமென்று இருக்கக் கூடாது. தன்னம்பிக்கை கொண்ட யார் வேண்டுமானாலும் இவற்றில் அமர அனுமதிக்கப்பட வேண்டும்.

நான் முன்வைத்திருக்கும் மாற்றுக் கல்வியை செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்ன தெரியுமா? குழந்தைகளின் நுண்ணுணர்வை மதித்து, அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளித்து, ஒவ்வொரு மாணவரின் சுயதர்மத்தைக் கண்டறிய உதவியாக இருந்து முன்னேற்றிவிடும் வேலையைச் செய்வதற்கு தேவையான ஆசிரியர்கள் நம்மிடையே காண்பதற்கு அரிதாக இருப்பதுதான். அந்தக் காலத்தில் குருகுலங்களில் முழுமையான அறிவும் அனுபவமும் பெற்ற ஞானிகளே இந்தப் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வந்திருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால், பிளவுண்ட உலக நோக்கும், தன்னலமும், மன இறைச்சலும் ஓங்கியிருக்கும் நவீன உலகில், இத்தகைய ஞானிகளை எளிதில் காண முடிவதில்லை என்றாலும், அந்த ஞானத்தை இனம்கண்டு, அதை அடைவதில் ஆவல் கொண்டவர்களையாவது ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும். நான் ஒரு பள்ளிக்கூடத்தைத் துவங்கினால், அங்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களைக் குறைந்தது இந்த ஆறு கேள்விகளையாவது கேட்பேன்.

1. உங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்துக்கு இருக்கும் இடம் என்ன? சுதந்திரம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? நீங்கள் சுதந்திரத்தை விரும்புகிறீர்களா? சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கிறீர்களா?

2. நீங்கள் பள்ளி மாணவராக இருக்கும்போது உங்கள் மேல் திணிக்கப்பட்ட 5 பொய்கள் என்ன? உங்களுக்கு உடன்பாடில்லாத ஐந்து விழுமியங்கள் என்ன?

3. குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏதாவது இருப்பதாகக் கருதுகிறீர்களா? இருந்தால், அது என்ன?

4. குழந்தையிடம் "எனக்குத் தெரியாது!" என்று தயக்கமில்லாமல் உங்களால் சொல்ல முடியுமா?

5. உங்களுக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலோ, கலையோ தெரியுமா? (இந்தக் கேள்வியை, ஆசிரியராக வேண்டும் என்று கூறிக்கொண்டு தன்னிடம் வந்த ஒவ்வொருவரையும் கேட்பாராம், வினோபா.)

6. மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்குமே பதில் 'இல்லை' அல்லது 'தெரியாது' என்றமைந்தால், அவற்றைப் பற்றிய தீவிரமான தேடலில் அடியெடுத்த வைக்க விருப்பம் உள்ளதா.

*

இவை, எல்லாவற்றிற்கும் மேலான ஒன்றுள்ளது. நாம் மேற்கொள்ளும் எல்லா கல்வியும் நமது வாழ்க்கை நோக்கத்தைப் பூர்த்தி செய்யுமாறுதான் அமைய வேண்டும். ஜெயமோகன் அவர்கள் இதைப் பற்றி எழுதிய சுவாரசியான ஒரு கற்பனை உரையாடல் நினைவுக்கு வருகிறது. ஒருவர் தனது வாழ்நாளெல்லாம் பல வகையான பயிற்சிகளை எல்லாம் முடித்து விட்டு, எல்லாவற்றிலும் முதல் இடத்தில் தேர்ச்சியும் பெற்று ஓய்ந்த பிறகு, ஒருவகையான வெறுமையுடன் "நான் யார்? இதெல்லாம் எதற்காக? எனது வாழ்க்கையின் இலக்கு என்ன?" என்ற கேள்வியைச் சுமந்து கொண்டு ஒரு ஞானியை சந்திக்கச் செல்வார்.

இந்தக் கேள்வியைப் பற்றிய தேடல்தான், என்னைப் பொறுத்த வரையில் அதி முக்கியமான ஒன்று. "மனிதன் ஒரு ஆன்மிகவாதி. கடவுளை அடைவதே வாழ்வின் இலட்சியம். இதற்கான கருவியாகத்தான் நமது அறிவும் திறனும் பயன்பட வேண்டும்." என்று கூறிவிட்டுச் சென்றார் காந்தியடிகள். "குழந்தை வளர்ப்பு ஒரு வழிபாட்டைப் போன்றது" என்றார் விவேகானந்தர். இதை உணர்ந்து, தங்களது சொந்த வாழ்க்கைத் தேடலில் தீவிரமாக இருக்கும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே மாற்றுக் கல்வியைப் பற்றிய சிந்தனையிலும் செயற்பாட்டிலும் உண்மையாக ஈடுபட முடியும்.

நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக