செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

சுதந்திர தினவிழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை


சங்குக்குள் கடல்- 
தேசமெனும் தன்னுணர்வு

-ஜெயமோகன்நண்பர்களே, இந்திய சுதந்திரத்தைக்கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த அரங்குக்கு என் வணக்கம்.

இந்திய சுதந்திரத்தைப்பற்றிய ஓர் உரையில் அம்பேத்கர் அவர்கள் ‘ஜனநாயகத்துக்கான சுதந்திரம்’ என்ற சொல்லை குறிப்பிடுகிறார்.

அது மிகமிக நேர்நிலையான சொல்லாட்சி. வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்றோம் என்பதைவிட, அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றோம் என்பதைவிட, அது மேலும் பொருத்தமாக இருக்கிறது. முழுமையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்வதற்கான சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம். சமத்துவத்துக்கும் நீதிக்கும் தன்னிறைவுக்கும் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த பொன்னாளில் நம் மகத்தான தேசச்சிற்பிகளில் ஒருவரின் அச்சொற்களை நினைவுறுவோம். ஆம், நாம் ஜனநாயகத்துக்கான சுதந்திரத்தைப்பெற்ற ஒரு தேசம்.

நாம் அச்சுதந்திரத்தை பயன்படுத்தி சமத்துவத்தையோ தன்னிறைவையோ அடைகிறோமோ இல்லையோ அச்சுதந்திரத்தை பரிபூர்ணமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததா இல்லையா என்றே நம்மிடையே மாறுபட்டக் கருத்துக்கள் உள்ளன. நாடு என்று ஒன்று உண்டா இல்லையா என்றே விவாதங்கள் நிகழ்கின்றன. ஆம், நாம் கொண்டாடிக்கொண்டிருப்பது நம்மிடையே முரண்படுவதற்கான சுதந்திரத்தை.

திருப்பூரில் இன்று பேசப்போவதைப்பற்றிச் சொன்னபோது மலையாள இடதுசாரி நண்பர் சொன்னார் ‘’ இந்தியா என்று ஒரு தேசம் இல்லை. அது வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது’.

நான் சொன்னேன் ‘இது பெரும்பாலான இடதுசாரிகள் சொல்லிக்கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பாடு. பொது நிர்வாகமுறையை, பொதுஅரசாங்கத்தைத்தான் நீங்கள் தேசம் என்று சொல்கிறீர்கள்.இந்தியா முழுமைக்கும் ஒரு பொது நிர்வாகமுறை அல்லது அரசு இருந்ததில்லை என்பது உண்மை. ஆனால் இன்று உலகிலுள்ள எந்த தேசத்திலும் அப்படி ஒரு நிர்வாகமுறையோ அரசோ அக்காலத்தில் இருந்ததில்லை என்பதை மறந்துவிடுகிறீர்கள். இங்கிலாந்தோ ஜெர்மனியோ அமெரிக்காவோகூட முற்காலத்தில் மைய அரசும் பொதுநிர்வாகமும் கொண்டிருக்கவில்லை. அப்படியென்றால் உலகத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் தேசம் என்று எதுவுமே கிடையாது’

நண்பர் சொன்னார் ‘ஆம், அரைகுறை இடதுசாரிகள் அப்படிச் சொல்கிறார்கள். நான் சொல்வது அந்த அர்த்தத்தில் அல்ல. நான் சொல்வது வேறு. இந்தியாவுக்கென ஒரு பொதுவரலாறு கிடையாது. தேசம் என்பது அதன் வரலாற்றால்தான் கட்டமைக்கப்படுகிறது. அந்த தேசத்தில் வாழும் மக்கள் தங்களுக்கென ஒரு பொதுவரலாறை உருவாக்கி நினைவில் நிறுத்தியிருந்தால்தான் அவர்கள் ஒரு தேசம். இந்தியாவுக்கு வெள்ளையர்கள் வரும்போது அப்படி ஒரு பொதுவரலாறு இங்கே இல்லை. நாம் இன்று பேசக்கூடிய இந்திய வரலாறு என்பது வெள்ளைய அறிஞர்களால் எழுதி நமக்கு அளிக்கப்பட்டது. அப்படி அவர்கள் வரலாற்றை எழுதியபின்னர்தான் நாம் ஒரு தேசமாக நம்மை உணர்ந்தோம். அப்படி உணர்ந்தபினனர்தான் இங்கே தேசிய இயக்கமே ஆரம்பிக்கப்பட்டது. அதாவது இன்றைய இந்தியாவை உருவாக்கியவர்கள் வெள்ளைய ஆட்சியாளர்கள் அல்ல. இந்தியாவின் வரலாற்றை எழுதிய வெள்ளைய அறிஞர்கள்தான்’

நான் கேட்டேன் ‘இந்தியா வரலாறு அற்ற நிலப்பரப்பு என்று காலனியகால வெள்ளை அறிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். பல இடதுசாரிகள் அதை ஏற்றுக்கொண்டு பேசியிருக்கிறார்கள். நீங்கள் அதைச் சொல்கிறீர்களா?’

’இல்லை’ என்றார் நண்பர். ‘இந்தியாவுக்கு என பொதுவரலாறுதான் இல்லை. ஆனால் இங்கே குடும்பங்களுக்கு வரலாறு உண்டு. இனக்குழுக்களுக்கு வரலாறு உண்டு.. அந்தவரலாற்றுணர்வு ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால்தான் நீ யார் என்று கேட்டால் நான் இந்த குலம், இன்ன சாதி என நம்மவர் சொல்கிறார்கள். நான் இந்தியன் என்று சொல்லமுடியவில்லை. வரலாறு என்பது வரலாற்றுத்தன்னுணர்வு வழியாக உருவாகக்கூடியது. அப்படி ஒரு தேசியத்தன்னுணர்வு இந்தியாவில் இல்லை. அது வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது’

நண்பர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஒரு தேசமா? நமக்கென்று ஒரு பொதுவரலாறு உண்டா? அந்த வரலாற்றுப்பிரக்ஞை நம்முடைய மனத்திலும் நம் ஆளுமையிலும் கலந்திருக்கிறதா? நமக்குள்ள தன்னுணர்வு என்பது குலம், சாதி சார்ந்தது மட்டும்தானா? நமக்குத்தேசியத் தன்னுணர்வு இல்லையா? நம்மில் பலர் இந்தியச் சுதந்திரத்தை நிராகரிப்பது அல்லது புரிந்துகொள்ளாமலிருப்பது நாம் உள்ளூர ஒரு தேசமாக உணராமலிருப்பதனால்தானா?

நான் இங்கே அதைப்பற்றித்தான் பேசப்போகிறேன்

*

இன்னொரு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். நான் ஒரு பெரியவருடன் பயணம்செய்துகொண்டிருந்தேன். அவர் இடதுசாரி நண்பருக்கு நேர் எதிரானவர். அத்வைதி. அப்போது இந்தியத்தேர்தல் நடந்து முடிவுகள் வர ஆரம்பித்திருந்தது. ஜனதாக்கட்சி வீழ்ச்சி அடைந்து இந்திரா பதவிக்கு மீண்டு வந்தார். நான் ஆவலுடன் சென்று செய்தித்தாளை வாங்கினேன். வாசித்துவிட்டு பெரியவருக்கு நீட்டினேன். அவர் வாங்கவில்லை. நான் செய்திபற்றி ஏதோ பேச ஆரம்பித்தேன். அவர் தன் நெஞ்சை சுட்டி ”‘இதற்கு இந்த மண்ணுடன் எந்த உறவும் இல்லை’ என்று சொன்னார். தன்னை அவர் ’இது’ என்றுதான் சொல்வார்.

அவரது அகம் தூய்மையான ஒரு தன்னிருப்பு , அதற்கு இந்திய மண்ணோ, அதன் அடையாளங்களோ இல்லை என்பது அவரது கருத்து. ஆகவே அதன் அரசியலில் அவருக்கு ஆர்வமில்லை. அதன் வாழ்வோ தாழ்வோ அவருக்குப்பிரச்சினை இல்லை. அவருக்குள் இருந்துகொண்டு அவர் இருப்பை உணரக்கூடிய அந்த தன்னிருப்புக்கு [அதை ஆத்மா என்பார்கள் வேதாந்திகள்] தேசம் கிடையாது. ஊர் கிடையாது. உறவும் கிடையாது. ஆகவே அவர் இந்தியன் இல்லை. அவர் மனிதன்கூட இல்லை. அவர் ஒரு தன்னுணர்வு மட்டும்தான். இது இன்னொரு எல்லை. நாம் தேசம் பற்றிப்பேச ஆரம்பித்தால் இந்தக்குரலும்தான் சேர்ந்து எழுகிறது.

கேள்வி உண்மையில் நாம் யார் என்பதுதான். அந்தக்கேள்வியை ஏதேனும் ஒருவகையில் சிந்திப்பவர்கள் கேட்டுக்கொண்டிருப்போம். அதற்கு நாம் அளித்துக்கொள்ளும் வரையறை எதுவோ அதைச்சார்ந்தே நாம் நம்முடைய அடையாளத்தையும் நம்பிக்கைகளையும் அரசியலையும் கொண்டிருக்கிறோம்.

நவீன உளவியலில் ஒரு குழந்தை பதினெட்டு மாத அளவில்தான் தன்னை தனித்து உணர்கிறது என்று சொல்லப்படுகிறது. ழாக் லக்கான் அதை கண்ணாடிப்பருவம் [Mirror stage] என்கிறார். அதுவரைக்கும் குழந்தைக்கு தான் தனி என்று தெரியாது. தன்னையும் இன்னொருபொருளையும் அது பிரித்துப்பார்ப்பதில்லை. பதினெட்டு மாதத்தில் அது கண்ணாடியில் தன்னை அடையாளம் காண்கிறது. தன் பிம்பத்தைச் சுட்டிக்காட்டி ‘பாப்பா’ என்கிறது.

ஆனால் நம் சிந்தனை அப்படி இல்லை. வேதாந்தத்தின்படி தன்னுணர்வு என்பது பிறப்புக்கும் முந்தையது. கருப்பைக்குள் புகும் கணத்துக்கும் முந்தையது. அதை பார்த்திவப்பரமாணு என்கிறது வேதாந்தம். அது ஒரு அணு. அந்தப்பரமானுவுக்கு ஒரு தன்னுணர்வு உண்டு. அதை ஒரு பிரஜாபதி என்கிறது வேதம். அது ’நான் இருக்கிறேன்’ என உணர்கிறது. ’நான் வளரவேண்டும்’ என எழுகிறது. கருப்பைக்குள் புகுந்து அது தனக்கென ஒரு உடலை திரட்டிக்கொள்கிறது. அது அன்னம். பருப்பொருள். பிற அன்னத்தை உண்டு அது வளர்கிறது. வளர்ந்தபடியே இருக்கிறது.’

சைவ சித்தாந்தம் அந்த அணுவின் தன்னுணர்வைத்தான் ஆணவம் என்கிறது. பிறப்புக்கு முன்னரே உள்ள சுயப்பிரக்ஞை. அதைத்தான் ஆணவமலம் என்கிறது சைவம். பிறந்ததும் அம்மாவும் அப்பாவும் பிறந்த இடமும் ஊரும் உறவும் குலமும் உருவாகின்றன. அது கன்ம மலம். அந்த கன்மத்தையே முழுமுதல் உண்மை என நினைக்கும் மயக்கமே மாயாமலம் புதுமைப்பித்தன் அவரது கயிற்றரவு கதையிலே அழகாக அந்த சுய அறிதலைச் சொல்கிறார். தன்னுணர்வை , சுயத்தின் இருப்பைப்பற்றிய அற்புதமான சிறுகதை அது.

நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகிய நம்பியாபிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது.

”அப்பா யாரு?” என்று கேட்கிறார் அழகிய நம்பியாபிள்ளை.

குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது.

“முட்டாப் பயலே, நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம், பரமசிவம் பிள்ளை!” என்றார் அழகிய நம்பியா பிள்ளை. ”அப்பா யாரு?” என்றார் அழகிய நம்பியா பிள்ளை.

குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது.

”பரமசிவம் யாரு?” என்று கேட்டார் அழகிய நம்பியாபிள்ளை.

”நான்” எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை.

”போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!” எனக் குழந்தையை மெய்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்.

குழந்தை பரமசிவமாகி நான்-நீ-அவன் என்ற பேதாபேதப் பிரக்ஞையுடன் வாழையடி வாழையாக இருந்துவரும் விளையாட்டைக் கற்றுகொள்ள ஆரம்பித்தது.

இப்படி ஆரம்பிக்கிறது அந்த தன்னுணர்வு.

மனம் என்ற ஒன்று உடம்பைவிட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக்கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத்தானா… நான் பிறப்பதற்குமுன்… என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞையுண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப்பற்றியுள்ள சூழ்நிலைக்குத்தான் பிரக்ஞையுண்டா?

புதுமைப்பித்தனின் பரமசிவம் யோசிக்கிறார். சிந்திப்பதற்கு அருமையான இடம். பனைவிடலிக்கு அடியில் இளவெயிலில் மலம் கழிக்கையில். கூட எவருமே இல்லை. பின்பக்கம் மலம் தவிர. அது ஆணவமலமோ கன்ம மலமோ மாயாமலமோ இல்லை. வெறும் மலம். அங்கேதான் புதுமைப்பித்தனின் அழியாத புன்னகையைக் காண்கிறோம்.

அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது; மீனாயிற்று; தவளையாயிற்று; வாலிழந்தது; குரங்காயிற்று; சமாதி நிலையிலே உறங்க லாயிற்று… சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுக்கட்டாகக் காத்திருந்தது.

என்று சைவத்தின் அந்த ஆணவத்தரிசனத்தை அதியற்புதமாகச் சித்தரிக்கிறார் புதுமைப்பித்தன்.

அப்படிப்பிறந்துவருகிறோம் நாம். இந்த பயணத்தில் நாம் நம்முடையது என திரட்டிக்கொள்ளும் எல்லா பண்பாட்டு அடையாளங்களையும் அடைகிறோம். ’அம்மா பாலூட்டுவாள். அப்பா தூக்கிக் கொள்வார். வாத்தியார் அடிப்பார் சாமி கண்ணைக்குத்தும்’ என படிப்படியாக முன்னேறுகிறோம் என்கிறார் புதுமைப்பித்தன்.

நான் யார் என்று கேட்டால் இந்திய மரபு அளிக்கும் முதற்பதில் இதுதான். நான் ஆத்மா. நான் எனும் தூய இருப்பு. தன்னுணர்வு. இது ஒரு சிறப்புதளப் பதில் இதை விசேஷம் என்பார்கள். இன்னொரு பதில் உள்ளது. அன்றாடவாழ்க்கை சார்ந்த பதில். சாமானியதளம் என்பார்கள்.

நாம் விசேஷ தளத்தில் நம் மதம் சொன்ன பதிலையே சாமானியதளத்திலும் கொண்டோம். ஆகவேதான் தஞ்சை பெரியகோயிலை கட்டியவனை நாம் மறந்தோம். அதை நமக்குச்சொல்ல வெள்ளையன் வரவேண்டியிருந்தது. ஆனால் நாம் சைவசித்தாந்த்தை மறக்கவில்லை. சைவத்திருமுறைகளை மறக்கவில்லை.

நண்பர்களே, அது பெரும் பிழை. பரமார்த்திக தளத்தில் நாம் வேறு. ஆனால் சாமானிய தளத்தில் நாம் வரலாறு உள்ளவர்கள். பண்பாடு கொண்டவர்கள். மரபுள்ளவர்கள்.அரசியல் உள்ளவர்கள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதில் நாம் யார்?

ஓர் உச்சபட்ச தன்னறிதல் நிலையில் நாம் சர்வதேசியவாதிகள். மனிதர்கள். உயிர்க்குலத்தில் துளிகள். தூயதன்னிலைகள்> பிரம்மத்தின் வடிவங்கள். அதுவேறு. ஆனால் நாம் வாழும் அன்றாடதளத்தில் நாம் யார்? நம் அடையாளம் என்ன?

அங்கே நாம் நம்மை படிப்படியாக உருவாக்கிக் கொள்கிறோம். சின்னப்பாப்பாவிடம் பாப்பா எங்கே என்று கேட்டால் வயிற்றைத் தொட்டுக்காட்டுகிறது. பசிதான் அது அறியும் தன்னுணர்வு. அதுதான அடிப்படையானது. சின்னக்குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அடங்கிய ஓரு நூலைப்பார்த்தேன். குழந்தைகள் பெரும்பாலும் பாப்பா என்று ஒரு வயிற்றைத்தான் வரைந்திருந்தன. வயிற்றுக்கு கையும் காலும் தலையும் கோடுகளாக முளைத்திருந்தன.

ஆனால் கூடவே குழந்தைகள் சிறகுகளையும் வரைந்திருந்தன. உலகமெங்கும் குழந்தைகள் வரையும் முக்கியமான விஷயம் சிறகுகள். அம்மா அப்பாவுக்குப் பின் நம் பிள்ளைகள் காக்கா என்கின்றன. சிறகுகள் அவற்றை கவர்கின்றன. பறந்துசெல்லும் கனவு. வானம் என்னும் கனவு.

வயிறு என்ற யதார்த்ததுக்கும் சிறகுகள் என்ற கனவுக்கும் நடுவே நம் குழந்தைகள் தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. அதுதான் கடைசிவரைக்கும் சுயமாக வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

நண்பர்களே இதில் எங்கே வரலாறு வருகிறது? எங்கே நமக்கு வரலாறு அறிமுகமாகிறது? எப்படி நமக்குள் வரலாறு தேங்குகிறது? எந்தப்புள்ளியில் நாம் ஒரு தேசத்தின் வரலாற்றுடன் நம்மை இணைத்துக்கொள்கிறோம்? எப்போது நாம் தேசத்தின் ஒரு துளியாக ஆகிறோம்?

பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலே நமக்கு இந்தியவரலாறு ஆரம்பமாகிறதே அப்போதா? ‘அசோகர் சாலையோரத்திலெ மரங்களை நட்டார்’ என்று புத்தகத்தை மார்பில் அடித்துக்கொண்டு ‘தட்ட’ ஆரம்பிக்கிறோமே அப்போதா? அது தேர்வுக்குப்பின் அப்படியே மறந்துவிடுகிறதே.

நம்முள் உறையும் வரலாறு எது? தேசம் எது?

இந்தச் சுதந்திரநாளில் நாம் இங்கே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது.

*

என் சொந்த அனுபவத்திலிருந்து ஆரம்பிக்கிறேனே. அதுதானே நான் அதிகாரபூர்வமாகச் சொல்லத்தக்க ஒரேவிஷயம்? என் தன்னுணர்வு மிகமிக இளமையிலேயே என்னிடம் வந்தது என நான் உணர்கிறேன். என் தியானத்தில் நான் என்னை கைக்குழந்தையாக இருந்தபோது அறிந்த்தை மீண்டும் உண்ந்திருக்கிறேன். ஒரு பூனையை நான் தவழ்ந்துபிடிக்கசெல்வதை நானே கனவுபோலக் கண்டேன். அது நான் என்னை சிறப்புத்தளத்தில் உணர்வது.

வரலாற்றுணர்வு என்பது என் சாமானியதளத்தில் நான் அறிவது. நான் என்ற சமூக உணர்வு அல்லது வரலாற்றுணர்வு எனக்கு மெல்லமெல்ல பல அனுபவங்கள் வழியாக உருவாகி வந்தது. அதில் ஒரு தருணம் நினைவுக்கு வருகிறது.

என்னை மூன்றுவயதில் என் அப்பா திருவிதாங்கோடு என்ற ஊரில் உள்ள எங்கள் குடும்பவீட்டுக்கு அழைத்துச்சென்றாள். அங்கே எங்கள் குலதெய்வத்தின் கோயில் இருந்தது. அதை நாங்கள் தெற்கது என்போம். தெற்குப்பக்கம் சிறிய கட்டிடமாக அந்தக்கோயில் இருக்கும். கோயில் என்று சொல்வதெல்லாம் மிகை. குடும்பவீடே ஓலைவேய்ந்த இடிந்துபோன ஒரு பழைய கட்டிடம். இது ஒற்றை அறைகொண்ட ஒரு சிறு மண்கட்டிடம். அதை வருடம் ஒருமுறை மட்டுமே திறப்பார்கள். அன்று அந்த தெய்வத்துக்கு உதிரபலி கொடுத்து பூசை செய்வார்கள்.

உற்றமும் சுற்றமும் கூடி நின்றனர். செண்டை முழங்கிக்கொண்டிருந்தது. அந்தக்கோயிலின் கருவறை திறந்தது. பூசாரி உள்ளே ஒரு நெய்விளக்கை ஏற்றினார். நான் உள்ளே ஒரு கற்சிலையை எதிர்பார்த்தேன். ஆனால் சிறு சுடர் அசைவில் உள்ளே நான் கண்டது ஓர் ஓவியத்தை.

விசித்திரமான ஓவியம். வழக்கமான ஓவியம் அல்ல. நீலமும் காவியும் வெள்ளையும் கரியும் மட்டுமே நிறங்கள். சுவர் முழுக்க வரையப்பட்டிருந்தாலும் எந்த பிம்பமும் தெளிவாக இல்லை. ஒரு பெண் மையமாகத் தெரிந்தாள். நீலநிறமான முகம். பெரிய நீலநிற முலைகள். நீளமான நீலநிறக்கூந்தல். கண்கள் சிவப்பாக பெரிதாக இருந்தன. வாயில் பெரிய வெண்பற்கள். அவள் காலடியில் விதவிதமாக வரையப்பட்ட மிருகங்கள். அருள்கரம் இல்லை. புன்னகை இல்லை.

‘இது யார்?’ என்றேன் பீதியுடன்.

‘நம்ம குலதெய்வம்…நீலி ;என்றாள் அம்மா. ’கும்பிடு’

‘குலதெய்வம்னா?’ என்றேன்

‘நமக்கெல்லாம் அம்மா….நம்ம பாட்டி கொள்ளுப்பாட்டி எல்லாருக்கும் இவள்தான் அம்மா’

அந்த பேரன்னையை நான் பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தேன். இவள் யார்? பெரிய அன்னை! அபப்டிஎன்றால் சிலந்திமாதிரி எறும்புமாதிரி முட்டைகள் நிறைந்த பையை சுமந்து அலைந்திருப்பாள்.

‘இவள் எங்கே இருந்தாள்?’ என்றேன்

’நீலிமலைக்காட்டிலே..’ என்று அம்மா சொன்னாள் ‘ அவ கூந்தல் வானம் வரைக்கும் பறக்கும். அவ கால்வச்ச இட்த்திலே எல்லாம் செடிகள் முளைக்கும்’

அவ்வாறு எனக்குள் வரலாறு புகுந்தது. என் நிலமெல்லாம் நீலியின் பலவகையான தோற்றங்கள் கோயில் கொண்டிருக்கின்றன. நான் இன்றுவரை விதவிதமான கோணங்களில் நீலியைப்பற்றி எழுதியிருக்கிறேன். விஷ்ணுபுரத்தில், காடில், கொற்றவையில் நீலி வருகிறாள். ரப்பரிலும் பின் தொடரும் நிழலின் குரலிலும் இரவிலும் கூட அவள் இருக்கிறாள். என் கனவுகளில் அவளைக் கண்டுகொண்டே இருக்கிறேன். என் சுய அடையாளம் என்பது நீலியில் இருந்து ஆரம்பிக்கிறது

நண்பர்களே இதை என் குலவரலாறு என்று இடதுசாரி நண்பர் சொன்னார். எனக்குள் இருப்பது அது மட்டும்தான் என்றார். ஆனால் அப்படித்தானா? இதே கதையை இங்கிருக்கும் ஒவ்வொருவரும் சொல்லமுடியும். நம்முடைய வரலாறு இதுமட்டும்தானா?

*

நண்பர்களே, நான் இங்கே டி.எச் கோர்டான் [D. H. Gordon ] என்ற ஆங்கிலேயரைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். இந்தியக் குகை ஓவிய ஆராய்ச்சியில் முன்னோடியாக கோர்டான் சுட்டப்படுகிறார். இந்தியக் குகை ஓவியங்களை கால அடிப்படையில் அடையாளப்படுத்தும் முறையை அவர்தான் தொடங்கிவைத்தார் என்கிறார்கள். அவர் ஒரு ராணுவ வீரர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வுபெற்றார். 1958ல் வெளிவந்த அவரது The Prehistoric Background of Indian Culture என்ற நூல் இவ்வகையில் முன்னோடியானது
.
இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களை கண்டு அடையாளப்படுத்துவது அவரது பணியாக இருந்தது. இந்திய சுதந்திரத்துக்குப்பின்னர் லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியுடன் தொடர்புகொண்டு பணியாற்றினார். பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்கியாலஜியிலும் பணியாற்றினார் அவரது சேமிப்புகள் பிரிட்டிஷ் மியூசியத்திற்கு பின்னர் அளிக்கப்பட்டன

இந்தியாவின் முக்கியமான குகை ஓவியங்களை கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர் கோர்டான். தமிழகத்தில் அவர்காலகட்டத்திலேயே முக்கியமான குகை ஓவியங்கள் கண்டடையப்பட்டன. கீழ்வாலை, மல்லர்பாடி, கருக்கியூர் ஆகிய இடங்களில் உள்ள குகை ஓவியங்கள் மிக முக்கியமானவை. ஆம், இடதுசாரி நண்பர் சொன்னதுபோல நமக்கு நம்முடைய வரலாற்றின் ஆரம்பப்பாடத்தைக் கற்பித்தவர் அவர். நமக்கு அவர் குருநாதரின் இடத்தில் இருக்கிறார்.கோர்டானின் நூலைப்பின்பற்றி நான் இந்தியக்குகை ஓவியங்களைச் சென்று பார்த்திருக்கிறேன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சில நண்பர்கள் கருக்கியூர் குகை ஓவியங்களைச் சென்று பார்த்தோம். கோத்தகிரிக்குச் சென்று அங்கிருந்து செங்குத்தான மலைபபதையில் இறங்கி கருக்கியூர் குகைக்குச் சென்றோம். குகை என்று சொல்லமுடியாது. சரிவான ஒற்றைப்பாறை. ஒரு பெரிய மண்டபம் போல மழையிலிருந்து பாதுகாக்கக்கூடியது. ஐநூறுபேர் நனையாமல் நிற்கலாம். அந்தப்பாறைச்சுவர்கள் முழுக்க ஓவியங்கள். எட்டமுடியாத இடங்களுக்கெல்லாம் ஏறி வரைந்திருக்கிறார்கள். ஏணிகட்டிச்சென்றுதான அங்கே கயிற்றில் தொங்கியபடித்தான் அவற்றை வரையமுடியும். ஆம், அவற்றை வரைந்தவர்களுக்கு அவை அழியாமல் காலகாலமாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கிறது.

கருக்கியூர் தமிழ்நாட்டிலேயே பெரிய வரலாற்றுக்கு முந்தைய குகைஓவியத்திரள். தமிழின் முக்கியமான பண்பாட்டு ஆவணம் அவற்றில் மிகவும் மனதைக் கவர்ந்தது வரிசையாகச் செல்லும் காட்டுமாடுகளின் சித்திரம்தான். அந்த ஓவியங்களை நான் பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டு நின்றேன். காளைகளின் திமில்கள் வரையப்பட்டுள்ள அழகு. அந்த நடையில் தெரியும் திமிர். தமிழ்ப்பண்பாடு என நாம் இன்று அறியும் எதுவுமே உருவாகியிருக்காத காலகட்டத்தைச் சேர்ந்தவை அவை. குறைந்தது பத்தாயிரம் வருடப்பழைமைகொண்டவை! அவற்றை வரைந்த மக்கள் யார், என்ன மொழி பேசினார்கள் , எப்படி வாழ்ந்தார்கள் எதுவும் நாமறியமுடியாது. நமக்குக்கிடைப்பவை அந்த ஓவியங்கள் மட்டுமே

ஆனால் நம்ப மாட்டீர்கள். அந்த ஓவியங்கள் எனக்கு மிகமிக அருகே இருந்தன. உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் வீட்டுப்பாட்டியோ தாத்தாவோ ஆறுமாதம் முன்னால் வரைந்த ஓவியங்கள் போலவே அவை தோன்றும். உதாரணமாக மனிதர்கள் ஒன்றாகக் கூடி ஒரு காளை மாட்டைப்பிடிக்கும் சித்திரம். இது இன்றும் நீளக்கூடிய ஜல்லிக்கட்டு மாதிரியே இருக்கிறது. சுதந்திரமாக அலையும் காட்டுமாடை சூழ்ந்துகொண்டு வேட்டையாடிய மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைப் பிடிப்பதை ஒரு விளையாட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த விளையாட்டு இன்றுவரை நம் பண்பாட்டின் அடையாளமாக நீடிக்கிறது

பெண்கள் கூட்டமாக கைகளை தோளோடு சேர்த்துக்கொண்டு நடனமாடும் ஒரு சித்திரமும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. இந்த நடனம் இன்றும் தமிழகத்தின் பழங்குடிகளால் ஆடப்படுகிறது. தமிழ்ச்சமூகத்தில் சில குறிப்பிட்ட தருணங்களில் ஒரு சடங்குகலையாக இது நீடிக்கிறது. உதாரணமாக ஒப்பாரி பாடும்போது இப்படி தோளோடு தோள் கோர்த்துக்கொண்டு முன்னும்பின்னும் ஆடியபடி அழுதபடி பாடுவதுண்டு

அன்றிரவு தெங்குமராட்டா வனவிடுதியில் என் மனம் தூக்கத்தில் மயங்கத்தொடங்கியபோது அதை உணர்ந்தேன். அந்த ஓவியங்கள் எனக்கு மிகமிக நன்றாக அறிமுகமானவை! ஆம் அந்த ஓவியங்களின் அதே பாணியில்தான் என் குலதெய்வக்கோயிலின் நீலியும் வரையப்பட்டிருந்தாள்!

வரைந்தவர்கள் யார்? அவர்கள் புள்ளுவர்கள் என்னும் பாடகர்க்குடிகள். பழங்குடி வாழ்க்கை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் மாறாத மரபுப்படி அவற்றை வரைந்தார்கள். புள்ளுவர்களுக்குரிய கலை களமெழுதிப்பாட்டு என்பது. மண்ணில் பெரிய களமுற்றம் ஒன்றை அவர்கள் வரைகிறார்கள். கரிப்பொடி சுண்ணாம்பு செம்மண்பொடி நீலப்பாறைப்பொடி ஆகியவற்றால் வரைகிறார்கள். சிலசமயம் நூறடி அகலமும் நீளமும் கூட அந்த தரை ஓவியத்துக்கு இருக்கும். அதன்முன் அமர்ந்து குடம் என்னும் வாத்தியத்தை வாசித்து நீலியின் கதையை பாடுவார்கள்!

காலையிலேயே வரைய ஆரம்பித்த ஓவியம் அது. இரவில் அது பந்த ஒளியில் ஒரு மகத்தான கனவுபோலிருக்கும். அந்த ஓவியத்துக்குத்தான் பூசைகள் , பலிகள் எல்லாமே. பாடலின் கடைசியில் புள்ளுவத்தி சன்னதம் வந்து ஆடி கமுகப்பூக்குலையால் அந்த ஓவியத்தை அழிப்பாள். கண்ணெதிரே ஒரு கனவுபோல அந்த ஓவியம் அழிந்து மறையும்! அது அப்படி மறைவதனால்தான் மகத்தான கனவாக ஆகிறது!

கருக்கியூர் முதல் அறுபடாமல் வந்திருக்கிறது அந்த ஓவியமரபு. அந்த நம்பிக்கை! நண்பர்களே நீலி யார்? அவள் வனத்தின் தெய்வம். காட்டையே ஒரு பேரன்னையாக கொண்டால் அவள்தான் நீலி. நீலநிறமானவள். நீலக்கூந்தல் கொண்டவள். நீலகேசி! எங்கோ எப்போதோ ஏதோ மூதாதை காட்டை ஒரு கன்னியாக அன்னையாக கண்டடைந்தான். காட்டாறு போன்ற கூந்தலும் மரக்கூட்டங்கள் போன்ற உடலும் தீத்தழல் போன்ற கண்களும் புலியின் பற்களும் கொண்ட பெண்ணாக.

அப்போது நம்முடைய இந்த நாகரீகமே உருவாகியிருக்காது. அந்த பிம்பம் மட்டும் நம் கனவில் சேமிக்கப்பட்டிருந்தது. நம் குகைகளில் வரையப்பட்டிருந்தது. புறநாநூற்றில் அவளைப்பற்றி தொல்கபிலர் பாடுகிறார் ‘குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவை’ என்று

பாவை என்றால் ஓவியம். தமிழகத்தின் புராதனமான வழிபாடு ஓவிய வழிபாடுதான். அதன்பின்னர்தான் சிலைவழிபாடு வந்தது. தொல்கபிலருக்கே அது பழையமையான தமிழர்களின் பெயர்தெரியாத பெண் தெய்வமாக இருந்தது .

ஆனால் அவள் இருந்துகொண்டே இருந்தாள். சமணம் வந்தபோது அவள் சமணத்துக்குள் புகுந்தாள். கேசி என்ற பெயர் சமணத்தில் அடிக்கடி தென்படுவது. நீலகேசி என பல சமண முனிவர்கள் இருந்திருக்கிறார்கள். நீலிக்கு நூற்றுக்கணக்கான கதைகள் தமிழகத்திலே உள்ளன. பழையன்னூர் நீலி, கள்ளியங்காட்டு நீலி, மேலாங்கோட்டு நீலி, இட்டகவேலி நீலி…..நீலகேசி சமணத்தால் உருவாக்கப்பட்ட ஐஞ்சிறு காப்பியங்களில் முக்கியமானது. அதில் நீலி சமணமுனிவரால் ஞானம் பெற்று பிறசமயங்களை வாதில் வென்றபின் அருகன் அடி சேர்கிறாள்.

சமணம் மறைந்தது. இன்று மீண்டும் சிறுதெய்வமாக கோயில்களில் குடிகொண்டிருக்கிறாள் நீலி. குலக்கோயில்களில் ஓவியங்களாக. பெருந்தெய்வக்கோயில்களின் வெளிச்சன்னிதிகளில் சிறு கற்சிலையாக. கள்ளிப்புதர் மண்டிய காட்டுவெளிகளில் குங்குமமும் செம்பட்டும் காய்ந்தமாலையும் அணிந்து நடுகற்களாக நின்றுகொண்டிருக்கிறாள்.

அத்தகைய வனக்கோயில்களில் ஒன்று குமாரகோயில் செல்லும் வழியில் , வேளிமலை அடிவாரத்தில் உள்ள மேலாங்கோட்டு நீலி. அக்கா தங்கை என இரு கோயில்கள். அக்கா செண்பக யட்சி என்றும் தங்கை உம்மிணித்தங்கா என்றும் சொல்லப்படுகிறார்கள்.

நாற்பது வருடங்களுக்கு முன் அப்பகுதி மனித நடமாட்டமே இல்லாமலிருக்கும். வெறும் கள்ளிப்புதர்க்ள். வெறுமை. ஓங்கி உயர்ந்த வேளிமலைச்சரிவிலிருந்து வீசும் காற்றில் இலைக்கள்ளிகளின் இலைகள் நிறம் மாறிக்கொந்தளிக்கும். அது ஒரு மயானநிலம்.

அப்பகுதி முழுக்கவே நடுகற்கள்தான். பல காலகட்டங்களைச்சேர்ந்த நடுகற்கள். பல குடும்பங்களைச்சேர்ந்தவை. அவற்றுக்கு வருடத்திற்கு ஒருமுறை கோழிவெட்டி பலி கொடுத்து பூசை செய்வார்கள். செம்பட்டு சுற்றி அவை காற்றில் சீறி நின்றிருக்கும்

நடுவே ஒரு சிவன்கோயில். சோழர்காலகட்டத்தில் கட்டப்பட்டது. கல்லாலான உயரம் குறைந்த பழைமையான கட்டிடம். அக்கோயிலின் பின்பக்கம் அரைமதிகட்டப்பட்ட ஒரு சிறு வளைப்பு. அதற்குள் ஒரு பாலைமரம். பாலைநிலத்தின் மரம் அது என்று சங்க இலக்கணம் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். அந்தப்பாலை மரத்தின் அடியில் ஒரு சாண் கனமும் நான்கடி அகலமும் பத்தடி உயரமும் கொண்ட சப்பையான நாலைந்து கற்கள் நடப்பட்டவையாக நிற்கும். முதிய ஈறில் இருந்து பற்கள் நீட்டி நிற்பதுபோல!

நான் அந்தக்கோயிலுக்குச் சென்றபோது ஆறுவயது. என் கையைப்பிடித்தபடி சுகேசினி அக்கா என்னைக்கூட்டிச்சென்றாள். வழியெல்லாம் எனக்கு நெல்லிக்காயும் புளிச்சிக்காயும் வாங்கித்தந்தாள். என் சட்டை பித்தான் துளையில் மரிக்கொழுந்து வாங்கி சூட்டினாள். என் தலை கலையும்போது கோதிவிட்டாள். அவள் தலையின் காய்ச்சப்பட்ட தேங்காயெண்ணை வாசனை என்னை கிறங்கச்செய்தது. அவள் புடவையின் சரசரப்பு என்னுடன் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருந்த்து. ப்ல வடிவங்களில் என் கதைகளில் வரும் அக்கா அவள்தான்.

மேலாங்கோட்டு நீலிக்கு முன் பொங்கல் படையலிட்டு பூசை செய்தோம். பின்னர் சுற்றுவழியாக அந்த செங்குத்துக்கற்கள் நிற்கும் இடம் வழியாக வந்தோம். சட்டென்று அக்காவின் கை நடுங்குவதை உணர்ந்தேன். நான் அண்ணாந்து பார்த்தபோது அவள் வலிப்பு வந்தவளாக அதிர்வதைக் கண்டேன். ஒரு பயங்கர ஊளை. இரு கைகளையும் தூக்கி அக்கா சன்னதம் கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள். விழித்த கண்கள். கலைந்து பறந்த தலை

‘நீலியில்லா வந்துபோட்டா!’ என்றாள் அத்தை. நான் பீதியுடன் விலகி சுவரோடு ஒட்டி நின்று பார்த்தேன். ஆம் ஓவியங்களில் நான் கண்ட நீலி. குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவை! சமணமுனிவர் கண்ட நீலகேசி! அவள் கண்கள் ஓவியக்கண்கள் போலிருந்தன. எவரையும் பார்க்காமல், காலத்துக்கு அப்பால் வெறித்தன.

ஆனால் ஏன் அந்தக்கற்கள் முன் அவள் வந்தாள்? அந்தக்கற்கள் எவை? அவற்றை நாட்டியவர்கள் யார்?

*

நண்பர்களே , மீண்டும் ஒரு வெள்ளையரைப்பற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. ராபர்ட் புரூஸ் பூட். தமிழக வரலாற்றெழுத்தை அவரிடமிருந்து தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். இங்கிலாந்தில் உள்ள முக்கியமான பிரபுவம்சத்தைச் சேர்ந்தவர் ஃபூட். சிப்பாய்க்கலகம் முடிந்து ராணி விக்டோரியா இந்தியாவை நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பிப்பதற்கு இரண்டுமாதம் முன்பு செப்டெம்பர் 28 ஆம்தேதி ஃபூட் இந்தியாவில் இளம் நிலவியளாளராக வந்துசேர்ந்தார்.

பூட் நிலவியல் ஆராய்ச்சியைவிட வெயில் விரிந்த இந்திய நிலப்பகுதியின் அழகை ரசிப்பதிலேயே அதிகம் ஈடுபட்டிருந்தார் என்று தெரிகிறது. கன்யாகுமரி அம்மன் கோயிலை அவர் பேனாக்கோடுகளால் ஓவியமாக வரைந்திருக்கிறார் . அவர் தன் நிலவியல் ஆராய்ச்சிகள் பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகள் [ Geological Features of the South Mahratta Country and Adjacent Districts 1876] ] மிக முக்கியமான ஒரு நூலாக இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது

1863 மே 30 ஆம் தேதி ராபர்ட் புரூஸ்பூட் சென்னை பல்லாவரம் அருகே நிலவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது தமிழ்வரலாற்றை ஆரம்பிக்கவேண்டிய முதல் புள்ளியைக் கண்டுபிடித்தார். அது வழவழப்பான படிகக்கல்லால் ஆன ஒரு கைக்கோடாரி.

கூம்புவடிவமான அந்தக்கல் ஒரு பழமையான கல்கோடாரி என்று ஃபூட் கண்டுபிடித்ததற்கு அவர் ஒரு நிலவியலாளராக இருந்ததும் ஏற்கனவே அவர் கல்லாயுதங்களைப்பற்றி அறிந்திருந்ததும்தான் காரணம். அதன்பின் ஃபூட்டும் அவரது தோழர் கிங்கும் இணைந்து வடதமிழகத்தில் பாலாறுபடுகை முழுக்க பழங்கால கல்லாயுதங்களுக்காக தேட ஆரம்பித்தனர். அந்தப்பயணம் அவர்களை ஆதிரம்பாக்கம் என்ற கிராமத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்தாளயாறு படுகையில் உள்ளது ஆதிரம்பாக்கம். தமிழக வரலாற்றை ஒரு பெரிய மாளிகை என்று சொன்னால் அதற்குள் நுழைவதற்கான வாசலே இந்த சின்ன கிராமம்தான் என்று சொன்னால் மிகையல்ல.

ஆதிரம்பாக்கத்தில் ஃபூட்டும் கிங்கும் பலவகையான கல்லாயுதங்களைக் கண்டுபிடித்தனர். அதன்பின்னர் இந்த நூறாண்டுக்காலத்தில் தொடர்ச்சியாக ஆதிரம்பாக்கம் தமிழக கற்காலத்தைப்பற்றிய ஆராய்ச்சிக்கான களமாக இருந்துள்ளது. 1938 முதல் ஆய்வாளர் கிருஷ்ணசுவாமி இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறார்.1999 முதல் சாந்தி பாப்பு தலைமையில் மேலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன

ஆதிரம்பாக்கம் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய புத்தகம்போன்றது. இந்த புத்தகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. பழையகற்காலம் நடுக் கற்காலம் புதியகற்காலம் என்று மூன்றுகாலகட்டங்களைச் சேர்ந்த கல்லாயுதங்களும் எலும்புகளும் இங்கே கிடைத்துள்ளன. இந்தியாவின் கற்கால மனிதர்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்த இடம் இது.

ஃபூட் கண்டுபிடித்த அந்த கற்கோடாலி இன்று தமிழ்மண்ணின் பழையகற்காலத்தைச்சேர்ந்தது என்று வரையறைசெய்யப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் அவ்வாறு பல பொருட்கள் சிதறிக்கிடப்பது ஏற்கனவே உள்ளூர்க்காரர்கள் அறிந்திருந்ததுதான். ஆனால் அவற்றை கொஞ்சநாளுக்கு முன்னால் யாராவது செய்திருப்பார்கள் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அந்த கோடரிகள் செய்யப்பட்டு ஐந்துலட்சம் வருடங்களுக்கு மேல் ஆகியிருகலாம் என அவர்கள் ஊகித்திருக்க மாட்டார்கள். தமிழர்களாகிய நம் மூதாதையர் தங்கள் கைகளால் செய்த பொருட்களில் நமக்குக்கிடைக்கக்கூடிய மிகப்பழைய பொருட்கள் அவைதான்

ஆனால் அவர்களை தமிழர்கள் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போது தமிழ் உருவாகியிருக்கவில்லை. மனித மொழி உருவாகியிருந்ததா என்றே சந்தேகம்தான். ஏனென்றால் அவர்கள் நம்மைப்போன்ற மனிதர்கள் அல்ல. நம்மைவிட பரிணாமத்தில் ஒருபடி பின்னால் நின்றவர்கள். அவர்கள் விட்டுச்சென்ற இந்த ஆயுதங்களையும் சில எலும்புத்துண்டுகளையும் தவிர நமக்கு அவர்களைப்பற்றிக் கிடைக்கும் தகவல்கள் ஏதுமில்லை.

ஆனால் இந்த ஆயுதங்களைக் கொண்டு பலவிஷயங்களை ஊகிக்க தொல்மானுடவியல் ஆய்வாளர்களால் முடியும். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய மக்களுக்கு சாதாரண கடினமான கருங்கல்லில் இருந்து இன்னொரு கருங்கல்லைக்கொண்டு ஆயுதங்களைச் செய்ய தெரியாது. அதாவது இவர்கள் மற்ற இடங்களில் உள்ள கற்காலத்தைவிட பழைய காலத்தைச்சேர்ர்தவர்கள். கல்லை வெட்டவும் கூராக்கவும் இவர்கள் முயலவில்லை. படிகக்கல் இயற்கையாகவே கூர்மையானது. அதை உடைத்துப்பிளந்து எடுப்பதும் சுலபம். எளிய தொழில்நுட்பத்தைக்கொண்டே கத்திகள், கோடரிகளை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

இந்த எளியமுறையை அச்சூலியன் முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள். சென்னையை ஒட்டிய பகுதிகளில் ஃபூட்டும் அவரது சக ஆய்வாளரான கிங்கும் கண்டுபிடித்த கல்லாயுதங்களை அச்சூலியன் முறையைச்சேர்ந்த மெட்ராஸ் கைக்கோடாரி மரபு [Madras Handaxe Tradition”] என்று இன்றைய ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன

ஃபூட் அவரது கண்டுபிடிப்புகளை முறையான ஆய்வுக்குறிப்புகளுடன் சேர்த்துவைத்தார். அவரது சேமிப்புகள் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.எளிதில் உடையக்கூடிய படிகப்பாறைகளைக்கொண்டு எந்தவிதமான தேர்ச்சியும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் இந்த கல்லாயுதங்களை இன்று அருக்காட்சியகத்துக்கு வரும் மக்கள் பெரிய ஆர்வமில்லாமல் பார்த்துச்செல்கிறார்கள். அவற்றில் அவர்களை திகைக்கவைக்கக்கூடிய எதுவும் இல்லை. அவற்றில் இருந்து அவற்றைச் செய்த மனிதர்களைப்பற்றி ஊகிப்பதற்கு கற்காலவரலாறு பற்றிய விரிவான அறிவுதேவை.

ஆனால் கொஞ்சம் கற்பனை இருந்தால் ஒன்றை சிந்திக்கலாம். இந்த எளிமையான கற்கருவிகளில் இருந்துதான் தமிழ்பண்பாட்டின் தனியடையாளமாக இன்றும் நாம் பெருமிதம் கொள்ளும் ஒரு கலை பிறந்தது, கருங்கல்சிற்பக்கலை, கருங்கல் கட்டிடக்கலை. ஓங்கி நிற்கும் தஞ்சை ராஜகோபுரமும், ராமேஸ்வரம் பிரகாரமும், கிருஷ்ணாபுரம் சிற்பங்களும் எல்லாம் அந்த பயிற்சியற்ற காட்டுமனிதனின் பயிற்சியற்ற கரங்களில் இருந்து உருவானவைதான்.

தமிழகத்தின் கற்காலத்தின் முடிவில் உருவானது பெருங்கற்காலம். கல்லைக்கொண்டு ஆயுதம் செய்த நம் முன்னோட் கல்லை நினைவுச்சின்னமாக ஆக்கலாமென கண்டுகொண்டபின் உருவானது இக்காலம் .இறந்துபோன மூதாதையர் நினைவுக்காக மாபெரும் கற்களை மண்ணில் நாட்டினார்கள் இந்த மக்கள். அவை இன்றும் உள்ளன. பெங்கல் வட்டங்கள், பெருங்கல் அடுக்குகள், பெருங்கல் குவியல்கள், குடைக்கற்கள் என பலவகைகளில் அவை உள்ளன. அவற்றைச்செய்த மூதாதையரை நாம் அறியமாட்டோம்.

தமிழகத்தில் பெருங்கற்கால நினைவிடங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆமூர், அரையப்பாக்கம், அச்சரவாக்கம், அய்யனேரி,எச்சூர்,எடக்குன்றம்,எலச்சூர், எருமையூர், கூடலூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மச்சத்திரம், அன்னவாசல், பேட்டை பெருங்களத்தூர், பெயல், பொய்யாமனை போன்ற ஊர்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பம்மடுக்குளம், பாஞ்சாலி, பொட்டூர் புழல் போன்ற ஊர்களிலும் கண்டடையப்பட்டுள்ளன. இந்திய தொல்பொருள்துறை கிட்டத்தட்ட நூறு ஊர்களில் பெருங்க்ற்கால கல்லடையாளங்கள் உள்ளன என்று அடையாளப்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் மறையூர் புராதன பெருங்கல் நினைவிடங்களுக்கு முக்கியமான இடமாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவடைப்பு பெருங்கற்கால புதைவிடங்கள் பல உடையது. மறையூரின் குடைக்கற்கள் முன் நிற்கையில் நினைத்தேன். அந்த கற்களை நாட்டியவர்கள் எவ்வளவு உழைப்பைசெலுத்தியிருக்கிறார்கள்! எந்தவிதமான தொழில்நுட்பமும் இல்லாமல் அவ்வளவுபெரிய கல்லை அந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்வளவு ஆழமாக அவற்றை நாட்டியிருப்பதைக் கண்டால் அவர்கள் அவை காலகாலமாக நிற்கவேண்டும் என நினைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது!

அன்று நான் கண்டுகொண்டேன். சுகேசினி அக்கா சன்னதம் கொண்ட அந்த இடத்தில் நிற்பவை குறைந்தது ஐம்பதாயிரம் வருடம் முன்பு என் முதுமூதாதையர் நாட்டிய பெருங்கற்கள்! ஐம்பதாயிரம் வருடம் முன்பு அந்த முன்னோர் எதிர்காலம் நோக்கிச் சொன்னதை இங்கே இந்த முனையில் நின்று அவள் ஆழ்மனம் கேட்டுக்கொண்டது.

*

நண்பர்களே! நான் கேட்கவந்த கேள்வி இதுதான். என்னுடைய வரலாற்றுணர்வு எது? எவரால் உருவாக்கப்பட்டது?

என் வரலாற்றுணர்வு என் குலக்குழு சார்ந்தது மட்டும்தானா? அது குகை ஓவியங்களுடனும் பெருங்கற்களுடனும் என்னை நேரடியாகப்பிணைக்கிறதே. நான் என்று என்னை உணரும்போது என்னுடைய குடும்பத்தை, சாதியை நான் உணரவில்லை. இந்த மண்ணின் பலலட்சம் வருட வரலாற்றைத்தானே உணர்கிறேன்?

இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரும் யோசித்துப்ப்பாருங்கள். உங்கள் குலதெய்வத்தை நீங்கள் பார்க்கும்போது நீங்கள் தரிசிப்பது பல லட்சம் ஆண்டுகளாக உருவாகி வந்த ஒரு பண்பாட்டை அல்லவா? அந்த வரலாறுதானே உங்களுக்குள் உள்ளது?

நமக்குள் உள்ள இந்த வரலாற்றுணர்வை உருவாக்கியவர்கள் வெள்ளை ஆய்வாளர்களா என்ன? இல்லை. நம் மொழி. நம் பண்பாடு. நம் மதம். இல்லையா? அந்த வரலாறல்லவா நமக்குள் நிலத்தடி நீர் போல உள்ளது?

அப்படியென்றால் ராபர்ட் புரூஸ் பூட்டும் , டி.எச்.கோர்டானும் நமக்கு தொடங்கி அளித்த வரலாறுதான் என்ன? அவர்களை புறக்கணித்துவிடலாமா என்ன? ஒருபோதும் முடியாது. அவர்கள் நம் ஆசிரியர்கள். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

நண்பர்களே, இந்த வெள்ளைய ஆய்வாளர்கள் நமக்கு அளித்துள்ள வரலாறு என்பது புறவரலாறு. நாம் நமக்குள் கொண்டிருக்கும் வரலாறு என்பது அகவரலாறு. கொங்குமண்ணைப்பற்றிய முதல் வரலாற்று எழுத்து கர்னல் மன்றோ எழுதிய குறிப்புகளில் உள்ளது. அதன் வழியாக ஒரு நவீன புறவரலாறு உங்களுக்குக் கிடைக்கின்றது. ஆனால் கொங்குமண்ணின் வரலாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளே உறைந்துள்ளது. மொழிவடிவில், படிமங்களாக, கனவுகளாக அது உள்ளது

நமக்குள் உள்ள வரலாற்றை வெளியே கண்டுகொள்ள அவர்களின் வரலாறு உதவுகின்றது. நமக்குள் உள்ள அகவரலாறு வண்ணங்களை அளிக்கிறது. அவர்கள் அளித்த புறவரலாறு சுவரை அளிக்கிறது. நாம் வரலாற்றுச்சித்திரத்தை வரைகிறோம்.

நம்முடைய புறவரலாறு என்பது இன்றும்கூட முழுமையாக இல்லை. நம் வரலாற்றுக்கு முந்தையகாலம் ஆதிச்சநல்லூர் வரை வருகிறது. அதன்பின் ஆயிரம் வருடம் கழித்து நம் வரலாற்றுக்காலமான சங்க காலம் தொடங்குகிறது. நடுவே ஒரு பெரிய இடைவெளி. அகழி. ஆதிச்சந்ல்லூருக்கு ஏராளமான தொல்லியல் சான்றுகள் உள்ளன. ஆனால் இலக்கியம் இல்லை. சங்ககாலத்துக்கு நிறைய இலக்கியம் உள்ளது. ஆனால் தொல்லியல்சான்றுகள் மிகமிகக்குறைவு. இன்று வரை இதை விளக்கமுடியவில்லை

அதன்பின் பல இடைவெளிகள். களப்பிரர் காலம், முதற்கால பல்லவர்காலம் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. சேரர்களின் பிற்கால வரலாறு பற்றி அனேகமாக ஒன்றும் தெரியாது. மதுரையை ஆண்ட சுல்தான்களின் பெயர்கள் மட்டுமே தெரியும். பல இடைவெளிகள். பல அகழிகள்

ஆனால் நம் அக வரலாறு அறுபடாமல் தொடர்ச்சியாக உள்ளது! புறவரலாறு ஒரு குதிரை. அது அகழிகளில் திகைத்து நிற்கிறது. அகவரலாறு ஒரு பறவை. அது எளிதில் பறந்து வந்துவிடுகிறது

நமக்கு வரலாறை எவரும் உருவாக்கி அளிக்கவில்லை. வரலாற்றை புறவயமாக எழுதும் முறையை நமக்கு வெள்ளைய அறிஞர்கள் கற்பித்தனர், அவ்வளவுதான். அதுவே அந்த இடதுசாரி நண்பருக்கு நான் சொன்ன பதில்

*

உடனே அடுத்த வினா. அந்த வரலாற்றுத் தன்னுணர்வு தேசமென்ற தன்னுணர்வாக இருந்திருக்கிறதா? அது சிறிய வட்டார உணர்வாக மட்டுமல்லவா இருந்திருக்கிறது?

பெருங்கற்காலத்துக்கே செல்வோம். இந்தியாவின் நிலப்பகுதி முழுக்க பெருங்கல் சின்னங்கள் உள்ளன. ராஞ்சியில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள சோகாட்டு இந்தியாவின் மிகப்பெரிய பெருங்கற்கால புதைவிடம் . முண்டா பழங்குடிமொழியில் மரணத்தின் இடம் என்று இதற்குப்பெயர் பிரமிக்கவைக்கும் அளவுகளில்இங்கே கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. நாக்பூர் அருகே ஜூனாபானி என்ற இடத்தில் மட்டும் ஏறத்தாழ முந்நூறு பெருங்கல் வளையங்கள் உள்ளன

வடக்கே காஷ்மீரில் உள்ள புர்ஜஹோம் முதல் தெற்கே கர்நாடகத்தில் உள்ள விபூதிஹள்ளி, நிலுரல்லு வரை பெருங்கற்கள் உள்ளன. கிழக்கே ஷில்லாங் அருகே உள்ள நார்டியாங் முதல் மேற்கே சிந்துவரை பெருங்கற்கள் உள்ளன. எல்லாமே ஒரே வகை, ஒரே அமைப்பு. ஆம், நாடு என்ற சொல் உருவாவதற்கு முன்னரே பண்பாடு ஒன்றாகக்கலந்துவிட்டது. கலந்து இணைந்துதான் அது வளர்ந்தது. நான் என் குலதெய்வச்சன்னிதியில் கண்ட அந்த பெருங்கல் இந்தியா முழுக்க ஒரே பண்பாட்டின் துளி. காஷ்மீரின் புர்ஜஹோமிலும் அஸாமில் நார்டியாங்கிலும் உள்ள பெருங்ற்களில் ஒன்று

அதை என் அகம் அறியும். நான் புர்ஜஹொமிலோ நார்டியாங்கிலோ விபூதிஹள்ளியிலோ சென்று நின்றால் எந்த வரலாற்றாசிரியனும் சொல்லாமலேயே இது என் பாரம்பரியம் என்றே உணர்வேன். அந்த உணர்வை புறவயமான உண்மையாக நிறுவத்தான் எனக்கு வெள்ளைய வரலாற்றாசிரியர்கள் சொல்லித்தந்திருக்கிறார்கள்.

பெருங்கற்காலத்துக்குப்பின் வந்த ஹரப்பன் நகரங்கள் உருவாயின. ஹரப்பன் நகர நாகரீகம் பல காலகட்டங்களாக பல ஆயிரம் வருடம் நீடித்த ஒன்று என்பதுதான் இன்றைய ஆய்வுமுடிவாகும். பாக்கிஸ்தானில் உள்ள மேஹ்கர் [Mehrgaŕh] ஹரப்பன் நாகரீகத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த நகரம். உலோக காலகட்டத்தின் தொடக்கத்தில் இது அமைந்திருந்தது. கடைசிக்காலகட்டத்தை சேர்ந்த ஹரப்பன் நகரம் என்று குஜராத்தில் உள்ள லோத்தலைச் சொல்லலாம்

இந்தியநிலத்தில் மிகப்பழைமையான நகரம் என்பது டோலாவீரா தான். அது ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்தது, ஹரப்பாவை விடப்பழையது. அதேபோன்ற ஏராளமான நகரங்கள் இன்று அகழ்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர் ஜெ.பி.ஜோஷி [ J.P.Joshi] ஹரப்பன் நாகரீகம் தரைவழியாகவே குஜராத்தின் கட்ச் வளைகுடா வரை பரவியிருந்தது என்று நிரூபிக்கும் 17 முக்கியமான புதைநகரங்களை பட்டியலிட்டார். இன்று அந்த எண்ணிக்கை மேலும் பலமடங்காகப்பெருகியுள்ளது

லோதல் , காளிஃபங்கன் [Kalibangan ], ] சமீபத்தில் குஜராத் கட்ச் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நகரமான கிராசாரா [Khirasara] போன்றவை பெரிய நகரங்கள். ஹரியானாவில் உள்ள பனாவலி [ Banawali] ஃபிரானா [Bhirrana][ உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரகோன் [ Bargaonதெற்கே மகாராஷ்டிரத்தில் உள்ள டாமியாபாத்[ Daimabad] வரை ஹரப்பன் நாகரீகத்தின் தொடர்ச்சி உள்ளது .ஏறத்தாழ 1,260,000 சதுரகிலோமீட்டர் அகலமுள்ள ஹரப்பன் பண்பாட்டுவெளி உலகின் மிகப்பெரிய நாகரீகம் .

மகராஷ்டிரத்தில் நாக்பூர் அருகே உள்ள மஹுர்ஜாரி[ Mahurjar]i ப்குதியில் தொடர்ந்து அகழ்வாய்கள் மூலம் புதியகற்காலம் முதல் உலோகக் காலம் வரையிலான தொல்பொருட்க்ள் கண்டடையப்படுகின்றன.

ஆந்திராவில் உள்ள நாகார்ஜுனகோண்டா புதியகற்காலம் முதலே முக்கியமான வாழ்விடமாக இருந்திருக்கிறது என்பதற்கான புதைபொருட்சான்றுகள் கிடைத்தபடி உள்ளன. கர்நூல் மாவட்டத்தில் உள்ள சதனிக்கோட்டா [Satanikota] என்னுடமிடத்திலும் பழையகற்காலம் முதல் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கர்நாடகத்தில் சித்ரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரியில் முதல்கற்காலமுதல் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஹரப்பா காலகட்டத்தின் கடைசிப்பகுதியைச்சேர்ந்த பண்பாட்டுக்கூறுகள் சில அகழ்வாய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் புராதன இடுகாடு ஒன்று கண்டடையப்பட்டது. அந்த இடுகாட்டுக்கு அருகே ஒரு நகரம் இருந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. சமீபத்தில் அகழ்வு செய்யப்பட்ட கொடுமணல் பெருங்கற்காலம் முதலே இருந்து வந்த நகரம் என ஊகிக்கிறார்கள்.

அதாவது இன்றைக்கு நாம் பொடிநடையாகக் கிளம்பினால் தெற்கே ஆதிச்சநல்லூரில் இருந்து கொடுமணல் வழியாக நாகார்ஜுனகோண்டா சென்று அங்கிருந்து சதனிக்கோட்டா வழியாக மஹுர்ஜாரி சென்று டாமியாபாத் வழியாக லோதல் வழியாக காளிஃபங்கன் சென்று மொகஞ்சதாரோ போய்விடலாம். கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டருக்கு ஒரு புதைநகரம் இருக்கிறது. இந்திய நிலம் முழுக்க ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றி ஒன்றுடன் ஒன்று வியாபாரம் செய்து வளர்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான புராதன நகரங்களால் ஆன ஒரே பண்பாட்டுப்படலம் இருந்துள்ளது என்பதுதான் உண்மை.

நாம் அந்தப் பண்பாட்டுவெளியை நமக்குள் கொண்டிருக்கிறோம். இதோ என்னுடைய குலதெய்வமாக இருக்கும் நீலி. இவளை இவ்வடிவுக்கு ஆக்கிய சமணம் வட இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள பாலிதானா என்ற குன்றில் வாழ்ந்த சமணத்தீர்த்தங்காரரான ஆதிநாதரின் ஞானத்தால் கட்டமைக்கப்பட்டவள்.

இந்த தன்னுணர்வுதான் நானறியும் அகவரலாறு. இந்த வரலாற்றுணர்வுதான் இந்தியா என்பது. அது இங்கே இருந்துகொண்டுதான் இருந்தது, என்றும் எப்போதும். அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆசேது ஹிமாசலம் என் அதன் எல்லை குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெற்கத்தியர்கள் எல்லாரையும் இமயமும் கங்கையும் தங்களது என உணரச்செய்கிறது. வடக்கத்தியர்களை ராமேஸ்வரமும் குமரியும் தங்கள் புனிதமண்ணாக எண்ணச்செய்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழிலக்கியத்தின் மிகமிகத் தொன்மையான பகுதி என்பது புறநாநூற்றின் முதல் பதினாறு பாடல்கள்தான். அவற்றின் மொழியே அதற்குச்சான்று. அந்தப்பாடல்களிலேயே இந்தியநிலம் வந்துவிடுகிறது.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும். (புறம் – 6)

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடிய பாடல் இது. ஒருவேளை புறநாநூற்றின் மிகத்தொன்மையான பாடல் இதுவாக இருக்கலாம். இங்கே வழக்கே உள்ள மலை பனிபடந்த பெரிய மலை என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது.

அந்த நிலம்தான் நம்முள் நம் தன்னுணர்வாக இருந்துகொண்டிருக்கிறது. நம் வரலாற்றுணர்வாக வெளிப்படுகிறது. ஆலமர விதைக்குள் உள்ள ஆலமரம் போல. சாந்தோக்ய உபநிடதத்தின் உவமை அது. அந்த விதைக்குள் நுண்வடிவில் உள்ளது ஆலமரம். கண்ணால் காணமுடியாது. ஆனால் மண்கிடைத்தால் முளைக்கும்.

நண்பர்களே, வரலாறு எங்கிருக்கிறது? உங்களுக்குள் எனக்குள் எல்லாம் உள்ளது நம் வரலாறு. அதை முளைக்கவைக்கும் நிலம் என வெள்ளையர் நமக்குச் சொன்ன வரலாற்று ஆய்வுமுறையைச் சொல்லலாம்.

*

நண்பர்களே, அடுத்து நாம் எப்போதுமே எதிர்கொள்ளும் வினா ஒன்றுண்டு. இந்தியச் சுதந்திரம் நமக்கு என்ன அளித்தது? ஆங்கில ஆட்சியில்தானே ரயில்பாதை போடப்பட்டது? ஆங்கில ஆட்சியில்தானே சாலைகள் போடப்பட்டன? நீதிமன்றம் வந்தது? ஆங்கில ஆட்சியில்தானே பொதுக்கல்வி அறிமுகம் பண்ணப்பட்ட்து?

நாபுரளாமல் சொல்வார்கள். ’வெள்ளையன் போய் கொள்ளையன் தானே வந்தான்?’ நம்மவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம். கருத்து முக்கியம் அல்ல. அடுக்குமொழியில் சொல்லப்பட்டால் அது உண்மை. வெள்ளை கொள்ளை சரிதான்…

நண்பர்களே, 1750 வாக்கில்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி வேரூன்றுகிறது. 1770களில் உலகம் அன்றுவரை கண்டிராத மாபெரும் பஞ்சம் ஒன்று இந்தியாவை ஆக்ரமித்தது. மாபெரும் பஞ்சம் . இந்திய மக்கள்தொகையின் நாலில் ஒரு பங்கினர் பட்டினிகிடந்து செத்துப்போனார்கள். ஆம், கிட்டத்தட்ட இரண்டுகோடி மக்கள். பசித்து துடித்து செத்துக்குவிந்தார்கள். இரண்டுகோடிப்பிணங்கள். குவித்துப்போட்டால் இந்த திருப்பூரைவிட அதிகமாக இருக்கும்….பதினைந்துநாள் ஒருவாய் கஞ்சி கூட இல்லாமல் கிடந்தால்தான் ஒரு மனிதன் சாவான். பத்தாம்நாள் ஒருவாய் கஞ்சி கிடைத்தால் பிழைத்துக்கொள்வான்….அப்படியென்றால் எப்படிப்பட்ட பஞ்சம்!

அந்தப்பஞ்சம் வந்தபின் நுறாண்டுகளில் பதிமூன்று சிறிய பஞ்சங்கள். அதன்பின் மீண்டும் 1885 வாக்கில் இன்னொரு மாபெரும். அந்தப்பஞ்சத்தில் 7 கோடிப்பேர் செத்துப்போனார்கள் என்று ஆங்கில அரசுக்கணக்குகள் சொல்கின்றன. தக்காணத்தில், அதவாது தமிழகத்தை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் மட்டும் இரண்டுகோடி பேர். கோவை நகரில் ஒரு நாளுக்கு இருபதாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இந்தப் பஞ்சங்கள் இய்ற்கையாக வரவில்லை. இன்று அன்றைய பிரிட்டிஷ் ஆவணங்களை தீர ஆராய்ந்து பலர் எழுதிவிட்டனர். அமர்த்யா சென் முதல் பலர் எழுதியிருக்கிறார்கள். நாம் எழுதியதை விட விரிவாக ஆங்கிலேயர் எழுதியிருக்கிறார்கள். தமிழில் சங்கீதா ஸ்ரீஇராம் விரிவாக எழுதியிருக்கிறார்

நான் ஓர் ஆங்கில ஆசிரியரின் நூலை அறிமுகம்செய்திருக்கிறேன். இந்தியாவின் மாபெரும் வேலி. ராய் மாக்ஸ்ஹாம் எழுதிய நூல். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியவில் காலூன்றிய ஆரம்பநாட்களில் 1750களில் வட இந்தியாவில் தேசத்துக்கு நெடுக்குவாட்டில் ஒரு பெரும் வேலியை கட்டினார்கள். உலகில்யே நீளமான வேலி அதுதான். ஒரிசா முதல் காஷ்மீர் வரை அந்த வேலி இருந்தது

அன்று வட இந்தியாவுக்குச் செல்லவேண்டிய உப்பு முழுக்க குஜராத்தில் இருந்தும் ஒரிசாவில் இருந்தும்தான் சாலைவழியாகச் சென்றது. அந்த உப்பின் மீது வரி போட்டு பணம் வசூலிக்க வெள்ளையன் கண்டுபிடித்த வழி அது. அந்தவேலிதான் பஞ்சத்தில் கோடிக்கணக்கானவர்களை காவுகொண்டது என்கிறார் ராய் மாக்ஸ்ஹாம் .ஆம், அது பஞ்சம் அல்ல. செயற்கைப்பஞ்சம். பஞ்சச்சாவு அல்ல கூட்டக்கொலை!

இந்தியாவில் எப்போதுமே வரட்சி உண்டு. நூற்றாண்டுகளாகவே மழைபொய்த்து வரும் வரலாறு நமக்குண்டு. மழை பொய்க்கும்போது நாம் பஞ்சம்பிழைக்கச்செல்வோம். இந்தியாவின் மேற்குப்பாதியில் நல்ல விளைச்சலிருந்தால் கிழக்குப்பாதியில் மழை இருக்காது. இங்கே ம்ழை இருந்தால் அங்கே இருக்காது. இதுதான் இங்குள்ள இயற்கை. மக்கள் மழை இல்லாவிட்டால் மறுபாதிக்கு கிராமங்களையே காலிசெய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இஸ்லாமிய ஆவணங்களில் அப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து ஊர்கலும் நகரங்களும் காலியாகக் கிடப்பதைப்பற்றிய வரிவசூலதிகாரிகளின் குறிப்புகள் பல உள்ளன.

ஆனால் இந்த உப்புவேலி அந்த இடப்பெயர்வை தடுத்துவிட்டது. பஞ்சம் இருந்த இடங்களுக்கு தானியம் செல்வதையும் அது தடுத்துவிட்டது. தஞ்சைக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவே ஒரு பெரிய மதில்கட்டினால் என்ன ஆகும்? அதுதான் நடந்தது

இரண்டாவது பெரும் பஞ்சம் வந்ததற்குக்காரணம் ரயில்பாதைகள்தான். அவ்வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. மொத்த தானியத்தையும் வெள்ளையர் ரயில்பாதைகள் வழியாக துறைமுகத்துக்கு திரட்டிக்கொண்டு சென்று ஏற்றுமதி செய்தார்கள். உலகமெங்கும் போரிட்டுக்கொண்டிருந்த தங்கள் ராணுவத்துக்கு அந்த உணவை அளித்தார்கள்

பஞ்சத்தில் மக்கள் கோடிக்கணக்காகச் சாகும்போது துறைமுகங்களில் உணவு மலைமலையாகக் குவிந்துகிடந்தது. ஆறுமாதம் உணவு ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தினால்போதும் பஞ்சத்தைத் தடுத்துவிடலாம் என பிரிட்டிஷ் மனிதாபிமானிகளே கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். ஆதிக்க அரசு செவிசாய்க்கல்வில்லை.

அந்த பெரும்பஞ்சத்தில் சென்னையை ஆட்சி செய்வ்ர் பக்கிங்ஹாம் பிரபு. அவர் இங்கே பணம் சேர்ப்பதற்காகவே அனுப்பப்பட்டவர். அவரது குடும்பம் நொடித்துப்போயிருந்தது. அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்ததனால் அவரை பணம் நிறையக்கொட்டும் இடமான சென்னைக்கு அனுப்பினார்கள். நண்பர்களே அக்கால சென்னை வெள்ளை கவர்னர்கள் அடித்த கொள்ளையை இன்றைய மதிப்புப்படி பார்த்தால் 2ஜி எல்லாம் சும்மா பொரிகடலை மாதிரி.

பக்கிங்க்ஹாம் பஞ்சத்தைப்பணமாக்கினார். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான கூலிகளை கப்பலில் ஏற்றி கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே கரீபியன் தீவு வரை, மலேசியா இலங்கை ஆப்ரிக்கா என கொண்டு சென்று அடிமைவேலை வாங்கினார்கள் வெள்ளையர். அப்படிக் கொண்டுசெல்பவர்களில் பத்தில் ஒருவரே தேறுவார்கள், மிச்சபேர் நோயிலும் குளிரிலும் மடிவார்கள். ஆகவே பத்து மடங்கு ஆட்களைக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. அதனா இங்கே பஞ்சம் குறையக்கூடாது என ஆசைப்பட்டனர் வெள்ளை நில உடைமையாளர்கள். பஞ்சத்தை குறைக்காமலிருக்க அரசுக்கு கப்பலுக்கு இவ்வளவு என்ற கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தனர்.

கடைசியாக பக்கிங்காம் கண்டுபிடித்த வழிதான் பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைமுதல் விசாகப்பட்டினம் வரை ஒரு தரைவழிக் கடல்பாதை. பக்கத்தில்தான் கடல் இருக்கிறது. இந்தப்பாதை அவசியமே இல்லை. ஆனால் கோடிக்கணக்கான மக்களை ஒருவேளை கஞ்சி மட்டும் கொடுத்து வேலைவாங்கி அதைக் வெட்டினார்கள். கூலி இல்லை. கூலி முழுக்க செலவாகக் காட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்தக்கால்வாய் சில வருடங்கள் கூட பயன்படவும் இல்லை.

அக்காலகட்டத்தில் பஞ்சத்தைப்பற்றிச் சொன்னபோது ஒரு பிரிட்டிஷ் அமைச்சர் சொன்னார், ’முதல் பஞ்சத்தில் மூன்றுகோடிப்பேர் செத்தார்கள். அப்படியென்றால் இரண்டாவது பஞ்சத்தில் எப்படி ஏழுகோடிப்பேர் சாகமுடிந்தது? இந்தியர்கள் எலிகளைப்ப்போல. குட்டிபோட்டு பெருகுவார்கள் அவர்கள்’

1947ல் நாம் சுதந்திரம் பெற்றோம். கஜானா காலியான அரசை நேரு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அப்போதும் பெரும் பஞ்சங்கள் தொடர்ந்தன. பிகாரும் உத்தரப்பிரதேசமும் உணவில்லாமல் தவித்தன. இங்கிருக்கும் சில முதியோர் அந்தப்பெரும் பஞ்சத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதில் ஒருவர், ஒரே ஒருவர்கூட சாகாமல் இந்திய அரசு கவனித்துக்கொண்டது. அதற்குப்பொறுப்பேற்றவர் இருவர். நேரு. இன்னொருவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். நேருவின் அரசு பஞ்ச நிவாரணத்துக்காக களத்தில் நின்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மகத்தான கஞ்சித்தொட்டி இயக்கம் கிராமம் கிராமமாக மக்களுக்கு உணவூட்டி காத்தது.

கலிஃபோர்னியாவில் பெர்க்லி பல்கலையில் ஒரு இந்திய நூல்பகுதி உள்ளது. அங்கே நேருவின் ஒரு கடிதத்தைக் கண்டேன். 1950களின் பஞ்சத்தில் நேரு எழுதிய கடிதம் அது. அந்தப்பஞ்சத்தைச் சமாளிக்க நேரு அன்று உலகிலிருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் கடிதமெழுதினார். காலில் விழுந்து கெஞ்சி மன்றாடினார். உங்களிடம் என் நாட்டு மக்களுக்காக பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகிறேன் என எல்லா சுயமரியாதையையும் இழந்து கெஞ்சினார். அதிக நிதியுதவிசெய்தது அமெரிக்க தேசம். அதில் மிக அதிக உதவிசெய்தது கலிஃபோர்னியா மாநிலம்.

கலிஃபோர்னிய மாநிலத்துக்கு நன்றி தெரிவிக்கும் நேரு அவர்கள் செய்த உதவியை திருப்பிச்செய்ய முடியாது, நன்றிக்கடனாக சில புத்தகங்கள் அனுப்புவதாகச் சொல்லி எழுதிய கடிதம் அது. என்னை கூட்டிவந்த நண்பர் என்னை விட்டுச்சென்றுவிட்டார். அங்கே அறிமுகமான ஒரு நண்பர்தான் அதைக்கொண்டுசென்று காட்டினார். அவர் கணீப்பொறித்துறை ஊழியர். ‘பாத்தீங்களா சார் எப்டி கேவலப்படுத்துறானுங்கன்னு’ என்றார் அவர்.

‘எனக்கு பெருமிதமாக இருக்கிறது. தனக்காக நேரு கையெந்தவில்லை, தன் மக்களுக்காக கையேந்தினார் அந்தப்பெரிய மனிதர். அப்படி ஒரு தலைவனை அடைந்திருந்தோம், அதற்கான தகுதி நமக்கிருந்தது என நான் விம்மிதம் கொள்கிறேன்’ என்று சொன்னேன்.

ஆம் நண்பர்களே, தேசவிடுதலையால் நாம் என்ன பெற்றோம்? ஆதிக்கவாதியின் அலட்சியத்திற்கும் நமது தலைவனின் பெருங்கருணைக்கும் ஒரு வித்தியாசம் உள்ளதே அதைப்பெற்றோம். இங்கே வந்தேமாதரம் பாடப்பட்டபோது நான் கண்ணீர் மல்கினேன். எவ்வளவுபெரிய கனவு! அந்தக்கனவை நமக்கு அளித்தனர் நம் தேசமுன்னோடிகள். ஜனநாயகம், சமத்துவம், தன்னிறைவுக்குச் செல்வதற்கான சுதந்திரத்தை நமக்களித்தனர்.

அந்தக்கனவை நாம் இழந்தோமென்றால் அதற்குப்பொறுப்பு நாமே. அதை இத்தருணத்தில் நினைத்துக்கொள்வோம். நம் சிறுமைக்கு, நம் செயலின்மைக்கு, நம் நேர்மைக்குறைவுக்கு நம் மூதாதையரை பொறுப்பாக்கும் அற்பத்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான நாளாக இந்த தினத்தை கொள்வோம்

வணக்கம்.

.


[15-8-2013 அன்று திருப்பூர் அறம் அறக்கட்டளையின் சுதந்திரதினவிழாவில் ஆற்றிய நிறைவுரையின் எழுத்துவடிவ முன்வடிவம். 8-8-2013 ல் ஈரோட்டில் இதன் முதல் வடிவம் பேசப்பட்டது;  முழுமையாக்கப்படவில்லை]


நன்றி: ஜெயமோகன் இணையதளம்

காண்க:   அறம் அறக்கட்டளை விருதுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக