திருப்பூர்: "நம் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் காந்தி என்னென்ன செய்தார் என்பதை பற்றி, நமது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்,'' என காந்திய சிந்தனையாளர் ஸ்ரீநிவாசன் பேசினார்.
திருப்பூர் அறம் அறக்கட்டளை, குழந்தைவேலு - நாச்சம்மாள் அறக்கட்டளை, சர்வோதய கதர் ஊழியர் சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா, காமாட்சியம்மன் கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அறக்கட்டளை தலைவர் பரஞ்சோதி தலைமை வகித்தார். நேஷனல் காதி வஸ்திராலயம் அருணாசலம், தெய்வசிகாமணி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறம் அறக்கட்டளை தலைவர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.
சாஸ்திரா பல்கலை பேராசிரியரும், காந்திய சிந்தனையாளருமான ஸ்ரீநிவாசன், 'காந்தியத்தின் இன்றைய தேவை' என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது:
பொருள் ஈட்டுதல் தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அரச மரத்தடியில் நடந்த பஞ்சாயத்து நீதி, நேர்மை, தர்மம், பாவம், புண்ணியம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தன. ஆங்கிலத்தில் பாவத்துக்கு வார்த்தை உண்டு; புண்ணியத்துக்கு வார்த்தை இல்லை. பாரம்பரிய கலாசாரம் நம்மை செம்மைப்படுத்தும் ஆற்றலை கொண்டது. இதையே காந்தியும் கடைபிடித்தார்.
கிராம குடியரசையே காந்தி விரும்பினார். ஆனால், ஆங்கிலேயே அரசு பஞ்சாயத்துராஜ் முறையை புறக்கணித்து, பாராளுமன்ற முறையை கொண்டு வந்தது. ஆங்கிலேயர் நமது பாரம்பரிய கலாசாரத்தை அழிக்கும் வகையில் நடந்ததால், அவர்களின் ஆட்சிமுறையை காந்தி எதிர்த்தார். எனவே, நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் காந்தி என்னென்ன செய்தார் என்பதை பற்றி, நமது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும், என்றார்.
தமிழ்நாடு சர்வோதய சங்க முன்னாள் தலைவர் வீரப்பிரகாசம், அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்ட தலைவர் ரத்தினம், கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பேசினர். அறம் அறக்கட்டளை நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.
- தினமலர் - திருப்பூர் (03.10.2012)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக