புதன், 3 அக்டோபர், 2012

காந்தி நினைவு மண்டபத்தில் கூட்டுப் பிரார்த்தனை
மகாத்மா காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அறம் அறக்கட்டளை சார்பில் அக். 2 ம் தேதி காலை திருப்பூர், காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் பொதுவிழா  சிறப்புற நடைபெற்றது. அதையடுத்து, அன்று மாலை 4.30 மணியளவில், திருப்பூர், அவிநாசி சாலையில் காந்தி நகரில்  உள்ள  சர்வோதய சங்க வளாகத்தில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் (இங்கு காந்திஜியின்  அஸ்திக்கலசம் மீது கட்டப்பட்ட நினைவு மண்டபம் உள்ளது) கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அலகுமலையில் உள்ள ஸ்ரீ தபோவனத்தின் நிறுவனர் ஸ்வாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி தலைமை தாங்கினார். அவர் தனது ஆசியுரையில், "தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவரே மகான்கள். அவர்களுள் தலையாயவர் மகாத்மா காந்தி. அஹிம்சையும் சத்தியமும் ஆயுதமாகக் கொண்டு அறவழியில் அவர் நாட்டை விடுதலை பெறச் செய்தார். அவர் வழியில் நாமும் அறம் செய்வோம்.

அறம் செய விரும்பு என்று தான் ஔவை சொன்னாள். அறம், பொருள், இன்பம், வீடு என்று தான் நமது பாரம்பரியம் வலியுறுத்துகிறது. இது வேதம் கூறும் 'தர்மார்த்த காம மோட்சம்' என்ற கருத்தே. அறமே தர்மம். தர்மமே அறம். அந்த அறத்தை நாம் இயன்ற வகையில் எல்லாம் செய்வோம்'' என்றார்.


அடுத்து 2 நிமிட நேரம் காந்திஜிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது நாடு நலம் பெற பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.கிங் நார்சியஸ், தேவலோக  அன்புநிலையம் அறக்கட்டளை செயலாளர் டி.ஆர்.முரளிதரன், அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக